சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Saturday 18 January 2014

உயிர் உருகும் வேளையிலே..!


அன்னக் கொடியிடையும் அன்புநிறை பேச்சழகும்
வன்கூட்டில் வந்து வளம்சேர்க்கும் - நன்னெறியாள்
கன்னல் சுவைக்கும் கனியிதழ் காண்பதற்கே
மின்னல் ஒளிரும் மிகுந்து!

கொட்டும் மழைக்குள் கொடுகும் நுனினாக்கும்
மெட்டுக்கள் போடுமவள் மெல்லிடைக்கே  -பட்டுடுத்தி
மொட்டாய் நடந்தால் முழுநிலவு தாள்பணியும்
வட்டக் குடைபோல் வளைந்து !

பொன்னூஞ்சல் கட்டியுனை பூக்களால் சோடித்தும்
என்னெஞ்சில் ஏந்துகிறேன் ஏந்திழையே -மென்னுள்ளம்
வெந்துனிதம்  மேனி வியர்க்கையிலே  ! உன்நினைவும்
கந்தமாய் வீசும் கமழ்ந்து !

நாவில் இனிக்கும் நறுஞ்சொற்கள்  நீவிடுத்தே
நா..வில் சுமந்தாய் நளினமே -பூவில்
கமழும் புகழினிய கண்ணிதளால் ! பூப்பாய்
அமிழும் உயிருக்குள் அன்பு !

வெந்தழியும் வேளையிலும் வேகாதே  உன்நினைவு
சிந்தையிலே வாழுமடி சிற்பமாய் - நந்தியெனத்
தள்ளிநீ போகையிலும்  தாங்கும் வரம்பெற்றே
உள்ளுருகி நிற்கும் உயிர் !

கன்னலென காரிகையைக் கற்றுவிடச் சேர்ந்துவரும் 
என்பாவுக் கென்றும் எழில்!

பிரியமுடன் சீராளன்