சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Saturday 2 September 2017

பச்சை இதழ் இட்ட மது !



சந்தமிகத் தந்தகவிச்  சிந்தனையும்  எந்தனுயிர்
வந்தவளைச் சார்ந்துமணம் வீசுதே - அவள்
கந்தமிகக் கொண்டகுழல் விந்தையெனத் தென்றலதும்  
உந்தியெழத் தந்துதமிழ் பேசுதே  !


அந்திவருந் தந்தியவள் அஞ்சிறையுள் இட்டதனால்
முந்திவரும் கந்தமதைக் கூறுதே  -  விழி
குந்திமகன் அம்பெனவும் கோதைமகன் அன்பெனவும்
விந்தைபுரிந் துள்ளமதைக் கீறுதே !

எந்தயிடம்  வந்திடினும் ஏந்திழையாள் அன்புதனைச் 
சிந்தைதனில்  வைத்துமகிழ்ந்  தாடுவேன் - விதி
மந்தகுணந்  தந்துவுடல்  மண்ணறையில் இட்டபினும்   
மஞ்சரியாள்  கொஞ்சுதமிழ்  தேடுவேன் !

பங்கயமாய்க் காலையவள் பண்ணழகுப்  பார்வைதரப்
பாவலனாய்ப்  பாடிமகிழ்ந் தாடுவேன் - இல்லை
கங்குலெழும் முன்னொளியில் இங்கவளும்  இல்லையெனில்  
கற்பனைகள் ஈன்றமனம்  மூடுவேன் !

பண்பொளிரும்   பைங்கொடியாள் பஞ்சுமொழிப் புன்னகையாள்
பச்சையிதழ்  இட்டமதுக் காரிகை   - வான்
தண்ணொளிரும் வெண்மதியின் தங்கையெனத் தன்னினைவைத்
தந்துயிரைத் தொட்டபுதுத்  தாரகை !


பாவலர் வீ. சீராளன்