சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 14 July 2022

எண்ணத்தின் சில எச்சங்கள் !



சிந்தனை கொண்டெழில் சேர்த்திருப் பாள்- உயிர்ச்

   சித்திரம் யாவையும் கோத்திருப் பாள்!

விந்தனை கொள்'இரு வேல்விழி யால்- கவி 

   வித்தகங்  கற்றத  மிழ்மொழி யாள் !


போரெழ வைத்திடும் புன்னகை யில் -சிலர்

   பொல்லாக் கனவறும் நித்திரை யில்!

காரெழ வைத்திடும் காரிகை யாள்- உளக்

   கற்பனை தீண்டிய  தூரிகை யாள்!


வண்ணக்க ருங்குழல் வாசனை யில்- பல

   வார்த்தைகள் தானெழும் தூங்கிசை யில் !

எண்ணப்பெ ருவெளி எல்லைக ளில்- இவள்

   இட்டமூச் செல்லாமே! மூங்கிசை கள்!


சங்குக ழுத்திடை சந்தமென -மழைச் 

    சாரல்கள் மோனைகள் கொண்டுவர!

பொங்குத மிழொரு பாவெழு தும் -அந்தப் 

    பாவிலி வள்பெயர் தேர்வெழு தும்!


நீலப்பெ ருவானத் தாரகை யாய்!- உளம்

    நீந்தும்மு துமொழிக் காரிகை யாய்!

கோலப்பு றாக்குணம் கொண்டிருப் பாள் !- இதங்

   கூடிய வார்த்தைகள் பூண்டிருப் பாள்!


காலத்தி னிமைகள் தேய்ந்து வர! -வளர்

   காலைத்த னிமைகள் காய்ந்து வர!

சோலைக்க னிச்சுவை  ஊட்டிடு வாள்  !- உளஞ்

   சொக்கிட  வாசனை  தீட்டிடு வாள் !


இன்னுமி ருந்திடும் ஏக்கம் பல - அதன்

   எச்சத்தி லூறிய தாக்கம் சில !

பின்னும்ம னத்துளே பேரிசை யாய்!- உயிர்ப்

   பேழையு டைத்திடும் சாரிகை யாய்!


காலப்ப ருவத்தி னோசைக ளை! - உன்

   காதுகள் சேர்த்திட நாணுகை யில் !

தூலப் பிடிமனத் துள்ளிருக் கும் ! - இவன்

   சொப்பனம் முற்றிய ழிந்திருக்கும்!

 

 பாவலர் சீராளன் 

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை.
நீண்ட காலத்திற்குப் பிறகு தங்களை இணையத்தில் சந்திக்கிறேன்.
தொடருங்கள்

சீராளன்.வீ said...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை மைந்தரே கண்டிப்பா முயற்சிக்கிறேன்