சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

விருத்தப் பா ,என் விருப்புப் பா !நீரடித் துழுத மண்ணில் 
      நிறைவள மேகி மீண்டும் 
வேரடி முளைத்தல் போலும் 
      விளமுடன் தேமா காயும் 
சீரடிச் சிறப்பை மேவிச்  
      செப்பிடும் விருத்தப் பாவில் 
தாரடி கொத்தைப் போன்று 
      தழைத்திடும் எதுகை மோனை!

கண்ணொரு கலையை நோக்கின் 
      கற்பனை நெஞ்சில் ஊறும்!
பண்ணொடு பரிசம் போட்டுப் 
      பைந்தமிழ் மாலை சூடும்!
வண்ணமாய் வரையும் இந்த 
      வழுவிலா விருத்தப் பாக்கள்  
மண்ணுள வரையில் பூக்கும் 
      மல்லிகை வாசம் விஞ்சும்!

நல்லுரை கூறும் வேந்தர் 
      நயமுடன் தந்த கற்கைத் 
தொல்லுரை நெஞ்சில் ஏற்றித் 
      தொடர்கவி பாடும் வல்லார் 
சொல்லுரை சொக்கும் வண்ணம் 
      சுருதியில் குழைத்துப் பாடின் 
கல்லுரை போல மண்ணில் 
      காலமும் கடந்து வாழும் !

அஞ்சனை வயிற்றில் வாழ்ந்த 
      அனுமனின் கருணை பெற்றால் 
வஞ்சனை மறைதல் போல 
      மருவிடா விருத்தப் பாக்கள் 
கஞ்சனை நாணம் கொள்ளும் 
      கன்னியின்  அழகில் காய்ந்த 
நெஞ்சனை மாற்றும் இன்னோர் 
      நிறைகவி கம்பன் ஆக்கும் !

கூவிடும் குயிலோ ! பிள்ளை 
     குழைத்திடும் அமுதோ ! தாசர் 
பாவிடும் அரங்கோ ! வீசும் 
     பைந்தமிழ் சிறப்போ ! முல்லை 
தூவிடும் மணமோ ! ஔவை 
     துலக்கிய மறையோ ! நல்லோர் 
நாவிடும் வாழ்த்தோ ! இந்த 
      நலந்தரு விருத்தப் பாக்கள் !

                  ****************
பிரியமுடன் பாவலர் .வீ.சீராளன்