சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Tuesday 13 September 2016

விருத்தப் பா ,என் விருப்புப் பா !



நீரடித் துழுத மண்ணில் 
      நிறைவள மேகி மீண்டும் 
வேரடி முளைத்தல் போலும் 
      விளமுடன் தேமா காயும் 
சீரடிச் சிறப்பை மேவிச்  
      செப்பிடும் விருத்தப் பாவில் 
தாரடி கொத்தைப் போன்று 
      தழைத்திடும் எதுகை மோனை!

Friday 2 September 2016

காதல் சிதைவுகள் !


காற்றுக் கூடக் காதல் தூதில்
கனத்துப் போகக் கண்டேன்  - அதை
ஆற்றுப் படுத்த அலையும் போதில்
அங்கச் சிதைவுகள் கொண்டேன் !

காதல் இல்லா உலகம் என்றே
காட்டக் கூடுமோ சொல்லு  - அதை
வேதம் என்றே விரும்பிக் கொண்டால்
விரையும் உன்மேல் கல்லு !

Friday 19 August 2016

காலமே கவிதை நண்பா !





வானமே எல்லை கொண்ட  
       வாலிபக் காதல் வந்தால்  
மானமே போயும் நெஞ்சில் 
       மறந்திட முடியார் வாழ்வில்  
கானமே தனிமை போக்கும் 
       காய்ந்துயிர் வேகும்  தன்னுள்    
ஊனமே அடைந்தும் எண்ணார்
       உலகிது மாயம் என்றே !

Friday 6 May 2016

எனையறியாமல் மனம்பறித்தாய் ....!



சிந்தையி லூறிய செந்தமி ழே - என்னைச்
சீண்டிடு முன்விழிப் பார்வைக ளே
எந்தப்பி றப்பதன் எச்சங்க ளோ - இன்னும்
என்னுயிர் ஆளுமுன் நாணங்க ளே !

Saturday 6 February 2016

கவிதை மொழி !


பாடும் கானம் பௌர்ணமி நிலவு 
பைந்தமிழ் போற்றும்  காவியம் - நீ  
ஓடும் நிலவின் ஒளியில் வரைந்த 
ஒப்பிலாத் தாரகை ஓவியம்

கனவோ நினைவோ கம்பன் கவியோ 
காரிகை  உன்விழி  அறியேன் -தினம் 
எனையே இழந்து  இதயம் எரித்தும் 
என்னவள் உன்னைப் பிரியேன் !

Wednesday 27 January 2016

குருவருள் பதிற்றந்தாதி !



ஓடித் திரிந்த உணர்வுகளை ஒன்றாக்கிப்
பாடிக் களிக்கப் பகலிரவாய்ப் - பாடங்கள்
நாடிக் கொடுத்திட்ட நற்குருவுக் கோர்புகழைத் 
தேடிக் கொடுப்பேன் தினம்!


1. கற்றுப் பயனடையக் காத்திருக்கும் எல்லோர்க்கும்
    பற்றுடனே பாடம் பயில்விக்கும் - நற்கவிஞர்!
    என்னுள் கவியும் இருப்பதைக் கண்டுணர்ந்து 
    நன்றே'கற் பித்தார் நயந்து!