சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Saturday 27 April 2013

எனக்குள் நீ இருக்கும் வரைக்கும்....!



சோர்வு காட்டா சொந்தம் பிடிக்கும்
சோலைகள் நழுவும் தென்றல் பிடிக்கும்

காலைப்பொழுதின் பனித்துளி பிடிக்கும்
காலை வாரா கண்ணியம்பிடிக்கும்

நேர்மை கொண்ட நெஞ்சம் பிடிக்கும்
நெருப்பில் எரியா உண்மை பிடிக்கும்


வானம் தழுவும் மேகம் பிடிக்கும்
வாய்மையில் தவறா வம்சம் பிடிக்கும்

மழலை பேசும் மொழிகள் பிடிக்கும்
மண்ணில் வளரும் பூஞ்செடி பிடிக்கும்

மனதில் தோன்றும் மகிழ்ச்சி பிடிக்கும்
மறையும் போது சூரியன் பிடிக்கும்

சருகுகள் உதிர்ந்த கிளைகள் பிடிக்கும் 
சாகும் போதும் சத்தியம் பிடிக்கும்

கரையை தீண்டும் அலைகள் பிடிக்கும் 
நுரையில் சிதறும் நீர்க்குமிழ் பிடிக்கும்

எதிரி காட்டும் கோபம் பிடிக்கும்
எதிர்ப்பவன் வாழ்வுக்கு உதவிட பிடிக்கும்

இறைவன் காட்டிய வேதம் பிடிக்கும்
இருப்பவர் சிரித்திட வாழப் பிடிக்கும்

ஏழை வாழும் எளிமை பிடிக்கும்
ஏழைக்கென்றும் உதவிட பிடிக்கும்

காமம் தீண்டா காதல் பிடிக்கும்
கம்பன் எழுதிய கவிதைகள் பிடிக்கும்

மொழியில் தமிழின் அழகு பிடிக்கும்
விழியால் பேசும் பெண்டிர் பிடிக்கும்

உயிரில் எழுதிய உன்  பெயர் பிடிக்கும்
உள்ளம் தீண்டும் நினைவுகள் பிடிக்கும்

எல்லாம் என்றும் எப்போதும் பிடிக்கும்
எனக்குள் நீயே இருக்கும் வரைக்கும்....!

பிரியமுடன் சீராளன் 

22 comments:

இளமதி said...

அழகிய கவிதை சகோதரரே!
மிக இனிமை. ரசித்தேன். அடுக்குமொழியில் அள்ளித்தெளித்துவிட்டீர்கள். அருமை.
வாழ்த்துக்கள் உறவே!

என்றும்பிடிக்கும் எழுதும் அழகு பிடிக்கும்
தொன்மைத் தமிழில் தரும் பாக்கள்பிடிக்கும்
மின்னலென ஒளிரும் மிகுஅழகு கொழிக்கும்
இன்னமும் படைத்திடு இனிய வாழ்த்துக்களுனக்கு!

கவியாழி said...

உங்களுக்குப் பிடித்த எல்லாமே அருமை.தொடர வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...

மிக்க நன்றி என் இனிய சகோதரி இளமதியே

மண்ணில் காணும் மகிழ்வைக் கொண்டு
மனத்தில் பிடித்ததை எழுதுகிறேன்
உன்னில் காணும் அன்பை கண்டு
உள்ளம் நிறைய மகிழ்கின்றேன்

தங்கள்வருகைக்கும் வாழ்த்துக்கவிக்கும்
மிக்க நன்றி நன்றி

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்


தங்கள்வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
வாழ்கவளமுடன்

Priya said...

பிடிக்கும் பிடிக்கும் எல்லாம் பிடிக்கும்... என் அண்ணன் எழுதிய வார்த்தைகள் எல்லாம்

சீராளன்.வீ said...

மிக்க நன்றி பிரியா,,,,,

அண்ணாவுக்கு இம்புட்டு சப்போர்ட் ஆஆ

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடித்து விட்டது கவிதை...

வாழ்த்துக்கள்...

இளமதி said...

சகோ... இம்முறை அங்கு உம்வரவை காணவில்லையென நாடி வந்தேன்.
வந்த இடத்தில் புதியவலைகண்டு ஓடிச்சென்று பார்த்து தடம் பதித்தேன். அருமை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!!

Priya said...

அது எப்பவுமே இருக்கும் அண்ணா... ;)

சீராளன்.வீ said...

மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

மிக்க நன்றி சகோ ......

நேரமின்மை தாமத்தை உண்டுபண்ண
வாரமொருமுறைதான் வரமுடிகிறது
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
அக்கினிச் சுவடுகள் சென்று கருத்திட்டமைக்கும்

மிக்க நன்றிகள் வாழ்கவளமுடன்

ஜீவன் சுப்பு said...

பிடிக்கும் பிடிக்கும்
கவிதை பிடிக்கும்
கவிதை எழுதும்
கவிஞரையும் பிடிக்கும் ....!

சீராளன்.வீ said...

மிக்க நன்றி ஜீவன்சுப்பு தங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும்

வாழ்கவளமுடன்

Anonymous said...

எங்கிருந்து இப்படி வரிகள்
தங்கு தடையின்றிப்
பொங்குவது பிடிக்கும்.
என்றும் இவை வளர்ந்து
ஓங்கட்டும்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

எங்கிருந்து இப்படி வரிகள்
தங்கு தடையின்றிப்
பொங்குவது பிடிக்கும்.
என்றும் இவை வளர்ந்து
ஓங்கட்டும்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

சீராளன்.வீ said...

வாருங்கள் கோவை கவியே வணக்கம்

இங்குநான் எழுதுகின்ற இளவரிகள் எல்லாமே
எங்கும் காணுகின்ற இயல்பான வார்த்தைகளே
பொங்கும் தமிழ் கொண்ட பொக்கிஷம் நீ
ஏங்கி நின்றாயோ என்வரிகள் கண்டிங்கே ..!

அமிழ்தெம் மொழிபாடி அணைத்துமிக தாலாட்டி
அம்மா ஊட்டியதை ஆங்காங்கே சொல்கின்றேன்
அரிச்சுவடு போலெழுதி ஆரம்பம் ஆகின்ற
அடியேனின் வரிகளுக்கு வாழ்த்துரைத்தீர் வணங்குகிறேன்.....!

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி


மகேந்திரன் said...

அழகிய மொழிபேசும் உங்கள்
கவி எனக்கு பிடித்திருக்கிறது...
வாழ்த்துக்கள்..

சீராளன்.வீ said...

மிக்க நன்றி நண்பர் மகேந்திரன்

தங்கள் முதல்வருகையினை உளமார வரவேற்கின்றேன்

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிகள் வாழ்கவளமுடன்

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

ஈதல் பிடிக்கும்! இசைக்கின்ற
ஊதல் பிடிக்கும்! ஊா்பிடிக்கும்!
காதல் பேசும் விழிபிடிக்கும்!
காற்றில் நீந்த மனம்துடிக்கும்!
மோதல் செய்யும் போர்க்களத்தில்
முன்னே நிற்கும் மறம்பிடிக்கும்!
வேதம் போன்று சீராளன்
விளைத்த கவிதை மிகப்பிடிக்கும்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

சீராளன்.வீ said...

மிக்க நன்றி கவிஞர்.கி. பாரதிதாசன் அவர்களே தங்கள் வருகைக்கும் இனிய கவிதைக்கும் மகிழ்ச்சியும் நன்றியும் வாழ்கவளமுடன்

அ.பாண்டியன் said...

கவிவரிகள் மடை திறந்த வெள்ளமாய் உங்களிடமிருந்து வருவது கண்டு வியப்பு. நல்வாழ்த்துக்கள். நல்லதொரு கவிதைக்கு நன்றீங்க சகோதரரே..

சீராளன்.வீ said...

மிக்க நன்றி பாண்டியன்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
வாழ்த்துக்கும்

என்றென்றும் நன்றிகள்
வாழ்க வளமுடன்