சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

என்னுயிர் பூவே நலமா ?என்னுயிர் பூவே
நலமா ?

இதயம் கரைத்தே
இசையில்
இனிமை தந்துவிட்டு
பூவாய்க் கருகிய
இந்தப் புல்லாங்குழலை
நினைவிருக்கிறதா ?

மூச்சுத்தான்
இவன் மொழி
ஆதலால்
ஊமையும்
மொழிபெயர்க்கும்
உன்னதம் என்னில்
தவறவிட்டாய் !


உன்னோடு பேசாத
ஒவ்வொரு நொடிகளிலும்
உதிரத்தில் வலியெடுக்கும்
உறக்கத்தில் கண்வலிக்கும்
நீ அறிந்திருக்க
வாய்ப்பில்லை ..!

காலமாற்றம்
உந்தன்
கண்ணீரை
காயவைத்திருக்கும்
நிஜங்கள் மட்டும்
நினைவில் இருக்கும்
வெளிப்பட்டு
வில்லங்கம் தேடாமல்..!

எல்லாவற்றையும்
மறந்துகொள்
மௌனம் அறியா
மழலைபோல் !

விட்டுக் கொடுத்தல்
வீம்புக்கு மருந்துதான்
விதியென்று
முலாம் பூசாதே
இனிமையான இதழ்களுக்கு
இரங்கல் பா வலி !

இடம் மாறி
இலக்கணத்தை
கொல்லும்  என்பதால்
காதலுக்கு
வரைவிலக்கணம்
கடவுளும் சொல்ல மாட்டான்
உன்னால் எப்படி முடியும் !

ஆதலால்
பிரிதலுக்கான காரணத்தை
சொல்லாதே
இன்று நீ
நேற்றையவள் இல்லை !

பிரியமுடன் சீராளன் 
6 கருத்துகள்:

Iniya சொன்னது…

வணக்கம் சீராளா!
வேதனையின் விளிம்பில் நின்று வடித்த கவிதை என்னமோ இனிமை தான் வார்த்தைகள் தான் வலிக்கும் படி வரிக்குவரி சோகத்தை சுமந்து நிற்கிறது.

எல்லாவற்றையும் மறந்துகொள் மௌனம் அறியா மழலைபோல் !
காலமாற்றம் உந்தன் கண்ணீரை காயவைக்கும் நிஜங்கள் மட்டும் நினைவில் இருந்தால் இருக்கட்டும் வெளிப்பட்டு வில்லங்கம் தேடாமல்..

சோகம் விலகி சுகமான ராகங்கள் சிந்தட்டும் வாழ்வில் என்றும் சீராய்!
நன்றி தொடரவாழ்த்துக்கள்....!

சீராளன் சொன்னது…

வணக்கம் இனியா !

தங்கள் விரிவான கருத்தும்
வாழ்த்தும் கண்டு மகிழ்வுற்றேன்
மிக்க நன்றி
வாழ்க வளமுடன்

அம்பாளடியாள் வலைத்தளம் சொன்னது…

வலி தந்து வார்த்தைகளை இழக்க வைக்கும் கவிதை வரிகள்
இவை உண்மை உணர்வுகளால் இழைக்கப்பட்ட பொக்கிஷம் என்றே
உணரத் தோன்றுகிறது சகோதரா ! வாழ்த்துக்கள் இன்பக் கவிதைகளும்
இனிதே தொடரட்டும் .

Jeevalingam Kasirajalingam சொன்னது…

"இடம் மாறி
இலக்கணத்தை
கொல்லும் என்பதால்
காதலுக்கு
வரைவிலக்கணம்
கடவுளும் சொல்ல மாட்டான்
உன்னால் எப்படி முடியும்!" என்ற
அடிகளை அடியேன் விரும்புகிறேன்!

Jeevalingam Kasirajalingam சொன்னது…

"இடம் மாறி
இலக்கணத்தை
கொல்லும் என்பதால்
காதலுக்கு
வரைவிலக்கணம்
கடவுளும் சொல்ல மாட்டான்
உன்னால் எப்படி முடியும்!" என்ற
அடிகளை அடியேன் விரும்புகிறேன்!

கவிஞா் கி. பாரதிதாசன் சொன்னது…


வணக்கம்!

பூவே நலமா? புனைந்த எழுத்தெல்லாம்
பாவே எனவெண்ணிப் பாடுகிறேன்! - கோக்கவி..நான்
உன்றன் நிலையறிந்தே உள்ளம் வருந்துகிறேன்!
மன்னும் துயரை மடித்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு