அன்பும் அறநெறியும் ஆயகலை அத்தனையும்
முன்னே அறிந்திட்ட முத்தமிழே - என்றென்றும்
வள்ளலாய் எங்கள் வரகவியாய் வாழ்.கி.பா
அள்ளித் தரும்பாவில் ஆடு!
ஆடும் மயிலாகப் பாடும் குயிலாகச்
சூடும் கவிகள் சுவையூற்றே! - நாடுவக்கும்
பொன்விழா நாள்காணப் பூஞ்சோலை காத்திருக்கும்!
கன்னித் தமிழ்பேசும் காற்று!
காற்றில் கமழ்ந்துவரும் செந்தமிழால் பாவலரைப்
போற்றிட வேண்டும் புகழ்மணக்க - ஏற்கத்
துணிவோம் இனத்தினுயர் தந்தையென நாளும்
பணிந்திடுவோம் பாக்கள் படைத்து!
படைப்பின் இலக்கணத்தைப் பாங்குடன்தன் மூச்சாய்
அடைகாக்கும் ஆசானே ! செந்தேன் - அடையாய்
உவந்தினிக்கும் ஒப்பற்ற உன்புலமை! இந்த
அவனியை ஆக்கும் அழகு!
அழகுநிறை அந்தாதி! ஆயிரம்கா தற்பா!
பழகுதமிழ் கற்க படைத்தீர்! - நிழல்நீர்
மண்ணுள் செழித்து மலர்பூக்கும்! கற்கின்ற
கண்ணுள் இனிக்கும் கரும்பு!
கரும்பின் சுவையாய்க் கமழும் விருத்தம்!
அரும்பும் மலராய் அகவல்! - குருவாய்
இருந்து கொடுத்த கலையை இனிய
மருந்தாய் உண்ணும் மனம்!
மனம்போல் வளர்க! மகிழ்நிறை கொள்க!
வனம்போல் மலர்ந்து மணக்க! - இனத்தில்
இதுவரை இல்லா எழிற்கவிகள் தந்து
புதுயுகம் செய்க புலர்ந்து!
புலரும் பொழுதெல்லாம் பூந்தாது தூவ
மலரும் நினைவில் மகிழ்க - வலவனாய்
வண்டமிழ் காவலனாய் வாழ்வாங்கு வாழ்கவே!
அண்டமே வாழ்த்தும் அறிந்து!
அறிந்தேன் அதிமதுரம் ஐயாவுன் உள்ளம்!
செறிந்த தமிழறிவின் செல்வம்! - குறிஞ்சி
நிலக்காந்தள் கொட்டுகின்ற நீள்வாசம்!என்றும்
குலம்வாழ வைக்கும் குணம்!
குணமாந்தர் எல்லாம் குளிர்தமிழ் பாடி
உணர்வேந்தி வாழ்த்துரைபார்! ஊரே - மணக்கும்
விழாக்கோலம்! விஞ்சுபுகழ் தீட்டி உலகே
சுழன்று சொரிந்திடும் அன்பு!
கவிஞர் சீராளன்
18 comments:
மிக நன்றாக உள்ளது வாழ்த்த வரிகள்இ
இருவருக்குமே இனிய நல்வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம் கோவைக்கவி !
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !
குருவுக்கு ஏற்ற சிஷ்யன்.
பொன்விழா பூணும் பாரதிக்கு
மனம்மகிழ பாமாலை கோர்த்து
புகழாரம் சூட்டும் உன்புகழ்
எட்டும் நாற்றிசையும் நயந்து!
அருமையான வரிகளால் வார்த்தாய் பொன்வாழ்த்தை வியக்கிறேன் என் விழி அகல! வாழ்த்துக்கள் கவிஞரே!
கவிஞரே! விருது பகிர்ந்துள்ளேன் மனமுவந்து ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? ஹா ஹா .
ஆற்றல்மிகு ஆசான்..
போற்றத் தகுந்த பெருந்தகை
நெடுபுகழ் பெரியோர்
அய்யா.கி.பாரதிதாசனாருக்கு
அருமையான கவின்மிகு பாமாலை
படைத்தீர்கள் சகோதரரே...
வணக்கம்!
அன்பின் மிகுதியால் அள்ளி அளித்திட்ட
இன்பத் தமிழுக் கிணையேதாம்? - என்தம்பி
சீராளன் வாழ்வு சிறப்பெய்த வேண்டுகிறேன்
பாராளும் கண்ணன் பதம்!
பொன்விழா அந்தாதி பொங்கும் புலமையினை
இன்னுலா காட்டி இனிப்பூட்டும்! - மென்னிலா
வானில் ஒளிரும் வடிவாய்ப்..பா தந்தாய்!என்
ஊனில் ஒளிரும் உயர்ந்து!
நன்றி நவின்றேன்! நறுந்தமிழ்ப் பேரழகில்
ஒன்றிக் கிடந்தேன்! உவப்புற்றேன்! - குன்றின்
விளக்காய்க் கொடுத்த வியன்கவிதை, அன்பின்
இலக்காய் மின்னும் இனித்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களின் கவித்திறம் எண்ணி வியக்கிறேன் அய்யா!
நீராளும் உலகத்தில் நீங்காத இன்பத்தேன்
...............நிற்கின்ற கவிதை யெல்லாம்
.....நீராளக் கண்டுடென்றன் நெஞ்சென்னும் நிலத்தே‘உம்
...............நீர்பாய்ச்சக் கயல்கள் துள்ளும்!
ஏர்‘ஆளும் உம்புலமை மொழிகீறு மாழத்தில்
...............இடுகின்ற விதைகள் உண்டு
......ஏராள மாய்ச்சிந்தும் எழிற்பூக்கள் தமிழ்ற்றேனை
...............இறைக்கட்டும், நானோர் வண்டு!
தார்‘ஆளும் வாழைபலா மாங்கனிகள் கொடுக்காத
...............திகட்டாத அமுதை தேனை
.....தாராள மாய்நல்கி தமிழ்மரபி னுயரத்தில்
...............திகழொளியே! குமுத வானே!
சீராளா! பொன்விழா சிறப்புறவே நீர்செய்த
..............செந்தமிழந் தாதி பத்தும்
.....சீராளும் சிந்தையென் செயல்யாவும் ஆளும்‘உம்
..............செழுங்கவிதை வாழ்க! வாழ்க!!
தங்களின் பொன்விழா வாழ்த்து அய்யாவின் வாழ்த்து மலரில் மணிமகுடமாய் அமையும்,
நன்றி!!
வணக்கம் சகோ இனியா !
குருவாய் அவர்வந்தால் கோபுரங்கள் எட்ட
அருங்கவிகள் ஆக்கும் அகம் !
மிக்க அன்றி சகோ தங்கள் வாழ்த்தில் அகம் நிறைகின்றேன் !
எனக்கும் விருதா !
பெற்ற விருதை பிரியமுடன் தந்திட்டாய்
உற்றவனாய் என்னை உவந்து !
மிக்க நன்றி
வணக்கம் சகோ மகி !
எல்லாம் அவர்திறமை என்னுள்ளம் பாவெழுத
கல்வியைத் தந்தார் கனிந்து !
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ வாழ்க வளமுடன்
வணக்கம் கவிஞர் ஐயா !
ஊட்டும் உமதன்பில் உள்ளுணர்வு பாசுரக்க
தீட்டிடுவேன் செந்தமிழ் தித்திக்க - பாட்டுத்
தலைவரே ! பாவரசே தாழ்பணி கின்றேன்
கலையமுதே உன்கருத்தை கண்டு !
தங்கள் வரவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கும் இனிய பாக்களுக்கும் மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
வணக்கம் ஊமைக்கனவுகள் !
சிந்துக்கள் பாடியென்றன் சிந்தையிலே நாள்தோறும்
உந்துதல் ஊட்டும்'ஊ மைக்கனவே - வந்தனம்
செய்கின்றேன் வள்ளல்'உன் செந்தமிழ் வாழ்த்துதரும்
நெய்தலிளங் காற்றில் நெகிழ்ந்து !
இப்படி நீங்கள் அழகான பின்னூட்டம் இடுவதற்கு
நான் என்ன பேறு செய்தேன் நன்றி சகோதரா !
பயமாய் இருக்கிறது நான் எங்கே தவறு விடுவேனோ என்று
ஆதலால் இப்போதெல்லாம் தமிழ் கற்கும் நேரங்கள் அதிகமாகின்றன !
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வணக்கம் சீராளனே!
அந்தாதிப் பாவலன்! ஆழ்ந்த புலமையோன்!
சிந்தாது தந்தகவிச் சீரென்னே! - முந்திடும்
மூத்தோர் அவையில் முதலிலுன் பாக்களே!
காத்திடுவர் நின்டிறமை காண்!
உங்கள் திறமைகண்டு மலைக்கின்றேன்!
ஐயாவை அப்படியே அடியொற்றிப் பிரதி பலிக்கின்றீர்கள்! என்னே திறமை!
அந்தாதி பாடி அகமெல்லாம் குளிர்வித்த உங்களுக்கும், பொன்விழாக் காணும் எங்கள் ஆசான் ஐயாவுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
வணக்கம் சகோ இளமதி அக்கா !
இன்பத்தேன் நல்கியென் இன்னுயிரில் பாக்களெள
அன்பளித்து ஆண்ட அகல்விளக்கே - என்னுயிரின்
இல்லாமை போக்கும் இளமதியே என்'அக்கா
சொல்லாட்ச்சி கொண்ட சுடர் !
இளமதி அக்கா நானும் உங்களால்தான் பாப்புனைய கற்றேன் என்கிட்டேவா சொல்றீங்க ஹி ஹி ஹி
தங்கள் அன்புக்கு நன்றி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தங்களின்
சீரி மிகு
வரிகள்
அற்புறதம் நண்பரே
என் பதிவிற்கு நீங்கள் இட்ட பின்னூட்டத்திற்கான கருத்தை இங்கும் பதிகிறேன் அய்யா!
'கள்ளுக்கில் காமத்திற் குண்டென்ற வள்ளுவன்‘உம்
தெள்ளு தமிழ்ச்சுவையில் தோய்ந்திருந்தால் - கொள்ள‘இரு
முப்பால் மறந்திருப்பான்! உம்பால் அணுகியபின்
அப்பால் அகலுபவர் யார்?
நன்றி அய்யா!
அருமையான பதிவு
தொடருங்கள்
எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.
அன்புச் சீராளனுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ....!
மிக அருமையாக உள்ளது. என்னுடைய வலைப்பூவுக்கும் வரலாமே !
தங்கள் கவித்திறன் என்னை வியப்படைய செய்கிறது....வாழ்த்துக்கள் ...
வாழ்க வளமுடன்...
Post a Comment