பற்றில்லா வாழ்வுதனைத் தந்து மெய்யின்
பகுத்தறிவைத் தினமழித்துப் பாடை தேடும்
சுற்றங்கள் சூழ்ந்திருந்தும் சிந்தை வானில்
சுடுகாடாய் நினைவுகளும் தனிமை காக்கும்
கற்றறிந்த பாவலரும் கண்ணீர்ப் பாக்கள்
காரிகையை நினைத்தெழுதக் கருக்கள் கூட்டும்
பெற்றதாயைத் தந்தையரைப் பிரிய வைத்துப்
பெரும்பாவம் செய்விக்கும் பிணியோ காதல் !
தார்விட்டுப் பூப்பூக்கும் பாரி சாதம்
தருகின்ற வாசனையாய் உந்தன் காதல்
ஊர்விட்டு நீபோயும் உள்ளம் தன்னில்
ஒன்றித்து நிற்கிறது ஒவ்வோர் நாளும்
மார்புவிட்டு நினைவழிக்கும் மருந்தாய் நீயும்
மறுஜென்மக் கூட்டுக்குள் வருவாய் என்றே
நீர்விட்டுக் காய்கின்ற விழிகள் எல்லாம்
நெடுந்தவத்தை செய்கிறது நித்தம் நெஞ்சில் !
விண்ணிறைந்த தாரகைகள் நடுவில் தோன்றும்
வெண்மதியாய் மனமொளிர வைக்கும் உன்றன்
கண்ணிறைந்த காதலுக்காய் காலம் யாவும்
காத்திருக்கும் சாட்சியங்கள் அழிந்த போதும்
எண்ணிறைந்த கனவுகளின் எச்சம் எல்லாம்
எழிலான வாழ்விழந்த ஏக்கம் தன்னில்
மண்ணுறைந்து போனாலும் மாற்றம் இன்றி
மறுமலர்ச்சி கொண்டுவிடும் பிறப்புத் தோறும் !
எல்லையிலாத் திறந்தவெளிச் சிறையில் என்றன்
எதிர்காலத் தீர்ப்பெழுதிக் கனவாய்ப் போனாய்
புல்லழிந்தும் வேர்முளைத்துப் படரும் மண்போல்
புண்பட்டும் உன்னினைவைப் புகழ்ந்தே வாழ்வேன்
மெல்லவிழி மூடும்நாள் மூச்சைப் பேர்த்து
முத்தவிழ்க்காச் சிப்பிக்குள் உன்னைப் போல
சொல்லினிய தமிழ்மொழியே சொக்கும் வண்ணம்
சுகந்தமிகு கவியெழுதிச் சொர்க்கம் சேர்ப்பேன் !
பிரியமுடன் சீராளன்
34 comments:
வணக்கம்
சீராளன்.
காதலியுன் சேரா விட்டாலும் அவளின் நினைவை கவிபாடிய விதம் மிக அற்புதம்... பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞரே..!
கவிதைக்குள் நடக்கின்ற காதல் சாலை
கண்ணீரே நிறைகின்ற கானல் பாலை!
புவியெங்கும் இக்கதையே! போரில் வென்றும்
புறங்காட்டித் தோற்கின்ற புன்மை நின்றும்
தவிப்பென்னும் தாளங்கள் தட்டித் தட்டித்
தகர்கின்ற சிகரத்தின் தனிமை சொட்டச்
செவிக்குள்உம் பாநுழையச் சிதறும் உள்ளச்
சிதிலங்கள் ஒவ்வொன்றும் உம்பேர் சொல்லும்!!!
அருமை கவிஞரே!
தொடர்கிறேன்.
த ம 3
கண்ணிறைந்த காதலுக்காய் காலம் யாவும்
காத்திருக்கும் சாட்சியங்கள் அழிந்த போதும்
அருமையான வரிகள் நண்பரே... வாழ்த்துகள்
தமிழ் மணம் 4
''....சுற்றங்கள் சூழ்ந்திருந்தும் சிந்தை வானில்
சுடுகாடாய் நினைவுகளும் தனிமை காக்கும்..''
சுடுகாட்டுத் தனிமை மாற்றி
நந்தவனத்தில் புகுந்தால் என்ன!....
வணக்கம் ரூபன் !
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !
வணக்கம் ஊமைக்கனவுகள் !
உள்ளத்தின் சிதறல்களில் என்பர் என்றீர்
உயிரில் அந்த வார்த்தைகள் நிறைந்துவிட்டது பாவலரே
தங்கள் வருகைக்கும் கவிதைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !
வணக்கம் கில்லர்ஜி !
எடுத்துக்காட்டாய் சொன்னவரிகள் உங்களையும் உசுப்பிவிட்டதோ நன்றி !
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !
வணக்கம் கோவைக்கவி !
வெந்தமனத்தில் என்றும் நந்தவனத் தாகம் வருவதில்லையே
வந்தாலும் இந்தமனம் ஏற்காதே ...!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !
//புல்லழிந்தும் வேர்முளைத்துப் படரும் மண்போல் புண்பட்டும் உன்னினைவைப் புகழ்ந்தே வாழ்வேன்//
அதுதான் காதல்
கவிதை அருமை
மனதை உறைய வைக்கும் கவிதை வரிகள் கண்டு வியந்தேன் !
முத்தான சொல்லெடுத்து மூச்சுக்காற் றைவென்றாய்
இத்தகமை சேர்த்திடும்இன் பம்!
வாழ்த்துக்கள் சகோதரா .
புல்லழிந்தும் வேர்முளைத்துப் படரும் மண்போல்
புண்பட்டும் உன்னினைவைப் புகழ்ந்தே வாழ்வேன்//
கவிதை அருமையாக இருக்கிறது. சகோ
வணக்கம் சென்னைப் பித்தன் ஐயா !
தங்கள் முதல் வருகைக்கு மகிழ்ச்சி தொடர்ந்து வந்து ஊக்கம் தர வேண்டுகிறேன்
வாழ்க வளமுடன்
வணக்கம் சகோ அம்பாள் அடியாள் !
இனிய குறளால் எனை வாழ்த்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
வாழ்க வளமுடன்
வணக்கம் உமையாள் காயத்திரி !
தங்கள் வரவும் வாழ்த்தும் என்னை இன்னும் எழுதவைக்கும்
மிக்க நன்றி வாழ்க வளமுடன் !
\\\நீர்விட்டுக் காய்கின்ற விழிகள் எல்லாம்
நெடுந்தவத்தை செய்கிறது நித்தம் நெஞ்சில் !////
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதியை என்ன சொல்ல.
கன்மேல் எழுத்துப்போல் ஆயிற்றோ உம்காதல்
கல்லும் உருக கவிவடிக்கும் வல்லமை
கொண்டே மின்னவைத்து மூடியதோ இருளும்
வண்ணஒளி வீசவென் வாழ்த்து !
பண்ணமைத்துப் பாடும் திறன்கொண்டு புண்ணையே
போக்கி புலரும் பொழுதுகளை நுகர்கின்றாய்
வண்ண மயமாக வாழவிடு என்றுகேட்காது
இன்னும் வருந்துவதோ சொல்!
முத்து முத்தாய் கோர்த்து தந்த கவிதை அற்புதமே
காயங்கள் தான்கவலை தரும் . வலிதரும் கவிதை.
மிக்க நன்றி நீண்ட நாட்களின் பின் தந்த இனிய கவிக்கு.தொடர என் வாழ்த்துக்கள்....!
ஊர்விட்டு நீபோயும் உள்ளம் தன்னில் ஒன்றித்து நிற்கிறது ஒவ்வோர் நாளும்// ரசித்த வரிகள் கவிஞரே அழகான காட்சியும் அழகிய தொழில்நூட்ப இணைப்பும் ! தங்களிடமும் தனிமரம் கற்க வேண்டியது பல இருக்கு கவிஞரே!
வலையில் பல மாற்றங்கள் அழகு வித்தைகள் .
நீர் பூக்கும் நினைவுகள் கவிதையும் ஒவ்வொரு சொல்லும் ரசிக்கும்படியும் ஆழமாகவும் இருந்தன. தங்களின் நினைப்பு அனைவருக்கும் உள்ள பொதுவான நினைப்பே.
நீர் பூக்கும் நினைவுகள் கவிதையும் ஒவ்வொரு சொல்லும் ரசிக்கும்படியும் ஆழமாகவும் இருந்தன. தங்களின் நினைப்பு அனைவருக்கும் உள்ள பொதுவான நினைப்பே.
சொல்லினிய தமிழ்மொழியே சொக்கும் வண்ணம்
சுகந்தமிகு கவியெழுதிச் சொர்க்கம் சேர்ப்பேன் !
தமிழ் சொக்கித்தான் போய்விட்டது நண்பரே
நன்றி
தம +1
தார்விட்டுப் பூப்பூக்கும் பாரி சாதம் தருகின்ற வாசனையாய் உந்தன் காதல் ஊர்விட்டு நீபோயும் உள்ளம் தன்னில் ஒன்றித்து நிற்கிறது ஒவ்வோர் நாளும்
நன்று நன்றாம் இப்பாடல்-தூய
நயமிக கற்பனை விளையாடல்
நின்று நிலையென நெஞ்சத்தில்-விட்டே
நீங்கா! உண்மை கொஞ்சத்தில்
ஒன்று என்றே உரைக்கின்றேன்-மேலும்
உணர்வொடு கலந்திட வியக்கின்றேன்
என்றும் தமிழினம் வாழட்டும்-நாளும்
இனிமை வாழ்வில் சூழட்டும்
மார்புவிட்டு நினைவழிக்கும் மருந்தாய் நீயும்
மறுஜென்மக் கூட்டுக்குள் வருவாய் என்றே,,,,,,,
இப்படித்தான் பல காதல் வாழ்கிறது
இன்றும் இங்கே,
தங்கள் கவி அருமை, வாழ்த்துக்கள். நன்றி.
"எல்லையிலாத் திறந்தவெளிச் சிறையில் என்றன்
எதிர்காலத் தீர்ப்பெழுதிக் கனவாய்ப் போனாய்" என
அழகுறப் பாப்புனைந்தீர்.
படமும் பாவரிகளும் நன்று
தொடருங்கள்
வணக்கம் இனியா !
அன்பாக வெண்பாவில் ஆறுதல் சொன்னீர்கள்
என்நெஞ்சில் ஏக்கம் கரையுதே என்சொல்வேன்
உம்மினிய நட்பால் உயிர்வாழும் நாள்வரையில்
அம்மாவாய் அன்பை அளி !
மிக்க நன்றி தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
வாழ்க வளமுடன்
வணக்கம் தனிமரம் !
உங்களுக்குப் பிடித்தவரிகள் எனக்கும் பிடித்தது தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
தங்கள் வலையினையும் அழகாக்க வேண்டுமா வாருங்கள் கற்றுத் தருகிறேன் நன்றி
வணக்கம் முனைவர் ஐயா ஜம்புலிங்கம் அவர்களே !
எல்லோர்க்கும் உள்ள இதயத்தின் ஏக்கத்தைச்
சொல்லால் வடித்தேன் சுவைத்து !
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் !
என்றமிழே சொக்கிவிட எந்நாளும் பாதருவேன்
நன்றே படித்திட நாடு !
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம் புலவர் ஐயா ராமானுஜம் அவர்களே !
இனிமை வாழ்வில் சேர்கவென இன்புடன் தந்த கவிதையில் மெய்மறந்தேன் ஐயா
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் இனிய கவிதைக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம் பேராசிரியரே மகேஸ்வரி பாலச்சந்திரன் !
ஏழையின் காதல் எதிர்நீச்சல் போட்டாலும்
வாழும் வரைக்கும் வலி !
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம் யாழ்ப்பாவாணன் ஐயா !
அழகுறப் பாப்புனையும் ஆற்றல்கள் ஊட்டிப்
பழக்கினார் பாரதி தாசன் - தொழுதவரைத்
தூயதமிழ் கற்றுத் துணிவுடன் பாப்புனைந்தேன்
மாய உலகில் மடிந்து !
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
அருமை அருமை! நெஞ்சில் நிறைந்து விட்டன வரிகள்....
//தார்விட்டுப் பூப்பூக்கும் பாரி சாதம்
தருகின்ற வாசனையாய் உந்தன் காதல்
ஊர்விட்டு நீபோயும் உள்ளம் தன்னில்
ஒன்றித்து நிற்கிறது ஒவ்வோர் நாளும்
மார்புவிட்டு நினைவழிக்கும் மருந்தாய் நீயும்
மறுஜென்மக் கூட்டுக்குள் வருவாய் என்றே
நீர்விட்டுக் காய்கின்ற விழிகள் எல்லாம்
நெடுந்தவத்தை செய்கிறது நித்தம் நெஞ்சில் !//
ஆஹா இதை வாசிக்கும் போது கண்ணில் நீர் ...அறியாமல் வந்தது என்பது உண்மை நண்பரே! மிக மிக ரசித்தோம்....ரசிக்கின்றோம்....ரசிப்போம்....
வணக்கம் ஐயா துளசிதரன் !
தங்கள் ரசனைக்கும் இனிய கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தொடர்பில் இருக்க வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
உதிர்த்தப் புன்னகை யினாலே
உயிரை மாய்த்தும் சென்றுவிட்டாள் .
சித்தம் கலங்கி நிற்கின்றாய் .
சிதறி வீழ்ந்தும் கலங்குகின்றாய் . அருமையான காதல் தரும் வேதனையை சொல்லும் பாடல் .
நெஞ்சில் என்றும் நீங்காது
நிலையாய் இடத்தைப் பிடித்துவிட்டாள் .
வஞ்சி அவளும் இதழ்களினால்
வண்ணச் சிரிப்பும் உதிர்க்கின்றாள் .
வணக்கம் சகோ சரா !
தங்கள் முதல் வருகைக்கு என் வந்தனங்கள்
நெஞ்சில் இனிக்கும் நினைவுகள் என்றென்றும்
பிஞ்சுக் குழந்தைகொள் பேறு !
தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள் சகோ வாழ்க வளமுடன்
Post a Comment