செவ்வாய், 19 செப்டம்பர், 2017
சனி, 2 செப்டம்பர், 2017
பச்சை இதழ் இட்ட மது !
சந்தமிகத் தந்தகவிச் சிந்தனையும் எந்தனுயிர்
வந்தவளைச் சார்ந்துமணம் வீசுதே - அவள்
கந்தமிகக் கொண்டகுழல் விந்தையெனத் தென்றலதும்
உந்தியெழத் தந்துதமிழ் பேசுதே !
அந்திவருந் தந்தியவள் அஞ்சிறையுள் இட்டதனால்
முந்திவரும் கந்தமதைக் கூறுதே - விழி
குந்திமகன் அம்பெனவும் கோதைமகன் அன்பெனவும்
விந்தைபுரிந் துள்ளமதைக் கீறுதே !
எந்தயிடம் வந்திடினும் ஏந்திழையாள் அன்புதனைச்
சிந்தைதனில் வைத்துமகிழ்ந் தாடுவேன் - விதி
மந்தகுணந் தந்துவுடல் மண்ணறையில் இட்டபினும்
மஞ்சரியாள் கொஞ்சுதமிழ் தேடுவேன் !
பங்கயமாய்க் காலையவள் பண்ணழகுப் பார்வைதரப்
பாவலனாய்ப் பாடிமகிழ்ந் தாடுவேன் - இல்லை
கங்குலெழும் முன்னொளியில் இங்கவளும் இல்லையெனில்
கற்பனைகள் ஈன்றமனம் மூடுவேன் !
பண்பொளிரும் பைங்கொடியாள் பஞ்சுமொழிப் புன்னகையாள்
பச்சையிதழ் இட்டமதுக் காரிகை - வான்
தண்ணொளிரும் வெண்மதியின் தங்கையெனத் தன்னினைவைத்
தந்துயிரைத் தொட்டபுதுத் தாரகை !
பாவலர் வீ. சீராளன்
புதன், 31 மே, 2017
நீ துவைத்த மனம் !
கனியிதழில் கசியும்துளி
கண்டுமனம் வாடும் - தினம்
கருங்குழலாய் ஆடும் - விழி
கண்டகனா பாடும் - உயிர்க்
கவிதையிலே எழுதிவிடக்
கற்பனைகள் தேடும் !
பனிமலராய்ப் பருவவெழில்
பளிச்செனவே மின்னும் - அதில்
பதிந்தவிழி பின்னும் -உனைப்
பார்த்திருந்தால் இன்னும் - மனம்
பறிகொடுத்துப் பறந்துவிடும்
பருவங்களைத் தன்னும் !
அணியழகுத் தமிழ்மொழிபோல்
அணங்கவளின் பார்வை - இதழ்
அரும்புகளின் கோர்வை - இதம்
அளித்தமூச்சுப் போர்வை - அலை
அடித்துமனம் அறுக்கவரும்
அன்பிலாத தீர்வை !
துணிமணிகள் போல்கிழித்தாய்
தொங்குதடி நெஞ்சு - நீ
துவைத்தமனம் பிஞ்சு - நீள்
துயில்கொடுக்கும் நஞ்சு -இது
தொடர்கதையாய் ஆகுமுன்னே
தொட்டணைத்துக் கொஞ்சு !
உறங்குநிலை கண்டதடி
உள்ளிருக்கும் மூச்சு - உடல்
உணர்விழந்து போச்சு - இது
உறவுகளின் பேச்சு - மனம்
உருக்குலைந்தும் குறையவில்லை
உன்னினைவின் வீச்சு !
துறந்திடவே எண்ணுகிறேன்
துதிபலவும் பாடி - விதி
துரத்துதடி தேடி - இனித்
துளிர்விடுமோ தாடி - உடல்
துண்டுதுண்டாய் வெட்டிப்போட்டும்
துடிக்குதடி நாடி !
************
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)