சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Friday 28 February 2014

மௌனங்களின் மொழிபெயர்ப்பு



நாற்றோடும் வேரணைத் தேநீரும் நல்கின்ற
ஆற்றலே பச்சையத்தி னாதாரம் - ஊற்றாகி
உள்ளத்தில் சேர்க்கும் உனதன்பே  என்னுயிரில்
அள்ளி அளிக்கும் அமுது!

மாணிக்கப் பந்தல் மணக்கோலம் பூணுகையில்
நாணிக் குறுகிநின்றாள் நற்கனியாள் -வாணிக்கே
கற்பிக்கும் வண்ணவிழி கொண்டவளே ! என்பாட்டில்
சொற்சிறக்கப் பார்ப்பாய் தொடா்ந்து !

என்னுயிரில் என்றும் எழிலாடும்  உன்னுருவம்
பொன்னொளியில் மின்னும் பொலிவுடனே - என்றென்றும்
வண்ணவிழி எண்ணி வலிமேவும் நேரத்தும்
கொண்டல் பொழியும் குளிர்ந்து

கண்விட்டுப் போகும் கனவுகளின் எச்சங்கள்
புண்பட்டுக்  காயும் புலனழித்தே  - எண்ணத்தில்
இன்புற்றுப் பின்னழியும்  இல்லாதான் கற்பனைபோல்
உன்னுருவைத் தேடும் உணர்வு !

மொழிகள் முளைக்காமல் மௌனம் சுமந்தே
அழியா நினைவால் அறுத்தாய்  - இழித்தாலும்
முன்னல் எரிக்காதே  மூச்சோடும் போகாதே
உன்னோ டிருந்த உறவு !

இல்லாதான் காதல் இனத்தின் இழிசெயலாம் 
செல்வந்தன் சொல்லும்  நெறி

கொண்டல் - மேகம் 
முன்னல் - நினைவு ,நெஞ்சு 

பிரியமுடன் சீராளன்