கண்ணுக்குள் நீரில்லை கனவுக்குள் வலியில்லை
காற்றோடு கலந்தாடும் எண்ணம் - உயிர்
மண்ணுக்குள் போனாலும் மனக்கூட்டில் தினம்காயும்
மனச்சாட்சி இல்லாதோர் வண்ணம் !
காலத்தைக் குறைகூறிக் காணாமல் போனோரால்
காயங்கள் ஆறாது கேளீர் - இந்தச்
சீலத்தைச் சிதைப்பார்கள் செய்கின்ற செயல்நம்மைச்
சிறைவைக்கும் வழிதப்பப் பாரீர் !
ஊருக்கு உபதேசம் உரைக்கின்ற பேரெல்லாம்
உண்மைக்கும் வெளிப்பாட்டைத் தேடார் - தினம்
பேருக்குப் புகழ்தேடித் பிழைக்கின்ற உளம்கொண்டார்
பிறப்பெங்கும் மனச்சாட்சி நாடார் !
வாரங்கள் ஆனாலும் வருடங்கள் போனாலும்
வலிதந்த எண்ணத்தின் இருப்பு - மனப்
பாரங்கள் குறைந்தாலும் பதிந்திட்ட வடுதன்னின்
படிமங்கள் தினம்மூட்டும் நெருப்பு !
பேராசைப் படுகின்ற பிறப்புக்குள் நானில்லை
பிறகேனோ? எனக்கிந்தப் பிரிவு - எந்த
நீராம்பல் ஆனாலும் நிலம்நீரின் தொலைவைத்தான்
நிதம்காட்டும் அதுபோலென் தெரிவு !
காற்றாடும் கொடிதாங்கக் கைநீட்டும் மரம்போல
காதல்'தன் இருப்புக்கு மில்லை - தினம்
சேற்றாடும் செடிதன்னில் செழிக்கின்ற மலரன்னச்
சிலநேரச் சுகமிங்கு தொல்லை !
நியாயத்தைத் மறைக்கின்ற நிகழ்காலச் சொந்தங்கள்
நிலையாமை அறியாத தேட்டம் - வாழ்வின்
மாயத்தை உணராமல் மடிகின்ற நிலைவந்தும்
மாறாத பகையுள்ளக் கூட்டம் !
பாவலர் சீராளன்