சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 16 டிசம்பர், 2015

உயிரோவியம்!ஆருமறி யாமலுயிர் ஆடும் வலியூட்டும்
சாருமலர்ப்  பூங்குழலி  சாய்ந்துவிடத்  - தீருமிதன்
பாரமொரு நாளில் பறந்திருக்கும் ! பாவையவள்
நேரமொரு நீள்கனவில் நெஞ்சு !

இதழ்முகிழும் ரோசாவோ! இன்றமிழோ! மின்னும்
நுதலழகும் நூற்பாவோ? கன்னம்   - புதுக்கவிதைப்
பூவனமோ? பொய்கைமலர்ப் பூந்தாதோ? என்னவளின் 
ஓவியமும் கொள்ளும் உயிர் !

புதன், 9 டிசம்பர், 2015

உன்னால் முடியாதெனில் ...!நாரும் மணத்திடப் பூக்கள் சிரித்திடும்!
          நன்மண் கரங்கொடுக்கும்!
நாளும் மனிதரைச் சூழும் நன்னெறி
         நன்றே வரங்கொடுக்கும்!
சேரும் கனவினைச்  சிந்தை நிறைந்துளம்
         செய்தல் நலங்கொடுக்கும்!
சேவை சிறந்திடச் சீர்கள் நிறைந்திட
        செய்க புகழ்தொடுக்கும்!
ஊரும் எறும்பென ஒன்றாய் நடந்திட
        உயர்வு நிலையொளிக்கும்!
உள்ளம் துளைத்திடும் எண்ணம்  பகைஅழி
        ஒண்மை படையெடுக்கும்!
தீராக்  குறைகளும் திண்மை மனங்கொளத்
        தீயில் எரிந்திருக்கும்!
தேகச் சுமைகளைத் தேடி அழித்தெறி
        செல்வம் சொரிந்திருக்கும் !

புதன், 2 டிசம்பர், 2015

ஓரறிவின்றேல் ஆறறிவில்லை !
ஓரறிவைக் கொண்டிருந்தும் ஒவ்வோர் ஆண்டும்
           உதிர்க்கின்ற இலைகொண்டே உரத்தை ஊன்றும்!
ஊரறியாச் சுழியோடி உறிஞ்சும் நீரை
           உலகுக்கே மழையாக்கும் ! வீழும் போதும்
பாரறியப் பசிபோக்கும் உணவைச் செய்யும்
           பாமரனின் வயிற்றுக்காய் நெருப்பை உண்ணும்
கூரரிவாள் கொண்டதனை வெட்டிச் சாய்த்தும்
          குலங்காத்துக் குடிவாழக் குடிசை ஆகும்!

செவ்வாய், 3 நவம்பர், 2015

கவிதையவள் கவிஞனிவன் !

வண்டமிழ் வதனம் காட்ட
       வகைவகை யாகப் பாக்கள்
கொண்டலைப் போலே நெஞ்சில்
      கொட்டிடும் அவளின் ஆற்றல்
அண்டரே மயங்கிப் போகும்
      அழகொளிர் அங்கம் தன்னில்
சுண்டிடும் விழிகள் கண்டேன்
      சுயநினை விழந்து போனேன்!

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

பிரியங்கள் தொடர்கதை ..!கொஞ்சிடும் கனவுகள் குறுக்கிடும் பொழுதும்
கோபத்தில் மௌனங்கள் இறுக்கிடும் பொழுதும்
நெஞ்சினை ஏக்கங்கள் நெருக்கிடும் பொழுதும்
நீர்த்துளி கன்னத்தில் நினைவுகள் எழுதும் !

ஒவ்வொரு  இறப்பிலும் உன்னதம் படரும்
ஒவ்வொரு பிறப்பிலும்  உயிரினில் தொடரும்
ஒவ்வொரு  நினைப்பிலும்  உயிரணு சுடரும்
அவ்வொரு பொழுதிலும் அகவிழி அதிரும் !

செவ்வாய், 30 ஜூன், 2015

பொன்விழா நிறைவு மலர் வாழ்த்து ! இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் !இறைமகன் கந்தன் இனிமை விளைக்க 
முறையுடன் பொன்விழா முந்தும் ! - நிறைவுடன் 
இன்பம் குடிகொள்ளும் ! இன்றேன் மழைசொரியும் 
மன்றம் கமழும் மலர்ந்து !

ஞாயிறு, 21 ஜூன், 2015

மௌனம் கலைத்தவள் ..!
விழிகள் எழுதும் விதியின் சரிதம் 
வெற்றி கொண்டது - உன் 
மொழிகள் உதிரும் மூச்சின் இதழ்கள் 
மௌனம் கலைத்தது !

எதுகை மோனை இருந்தும் கவிதை 
எழிலை இழந்தது - உன் 
புதுமை கொண்ட பதிலின் பின்னே 
பூக்கள் படர்ந்தது !

புதன், 27 மே, 2015

நீர்பூக்கும் நினைவுகள் ..!


பற்றில்லா வாழ்வுதனைத் தந்து  மெய்யின்
          பகுத்தறிவைத் தினமழித்துப்  பாடை தேடும்
சுற்றங்கள் சூழ்ந்திருந்தும் சிந்தை வானில்
          சுடுகாடாய் நினைவுகளும் தனிமை காக்கும்
கற்றறிந்த பாவலரும் கண்ணீர்ப் பாக்கள்
           காரிகையை நினைத்தெழுதக் கருக்கள் கூட்டும்
பெற்றதாயைத்  தந்தையரைப்   பிரிய வைத்துப்
           பெரும்பாவம் செய்விக்கும் பிணியோ காதல் !

செவ்வாய், 10 மார்ச், 2015

வாழ்வியல் முற்றத்தில் ..!
பக்குவம் என்பதே பண்போ டிணைகின்ற
மக்களின் மாண்பாம்! மனிதத்தின்  - முக்திதனை
எக்கணத்தும் சேர்க்கும்  எழிலான  இவ்வாழ்க்கை
சக்கரம் இல்லாச் சகடு!

முற்றிய வித்தே முளைவிடும்! மற்றெல்லாம்
இற்றே உரமாகும் இம்மண்ணில்  - கற்றுத்
தெளிவடைதல் வாழ்வின் சுழல்புாியும்! மாயை
ஒளியறுத்து உய்யும் உலகு!