சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 2 டிசம்பர், 2015

ஓரறிவின்றேல் ஆறறிவில்லை !
ஓரறிவைக் கொண்டிருந்தும் ஒவ்வோர் ஆண்டும்
           உதிர்க்கின்ற இலைகொண்டே உரத்தை ஊன்றும்!
ஊரறியாச் சுழியோடி உறிஞ்சும் நீரை
           உலகுக்கே மழையாக்கும் ! வீழும் போதும்
பாரறியப் பசிபோக்கும் உணவைச் செய்யும்
           பாமரனின் வயிற்றுக்காய் நெருப்பை உண்ணும்
கூரரிவாள் கொண்டதனை வெட்டிச் சாய்த்தும்
          குலங்காத்துக் குடிவாழக் குடிசை ஆகும்!


இரப்போர்க்கும் இல்லையெனாச் சமூகம் போலே
           இறக்கின்ற வரைதன்னில் பறவைக் கூட்டைக்
கரமேந்திக் காத்திருக்கும்! கிளையும்  தண்டும்
           கடவுளுக்கும் பூ..கனிகள்  காய்த்துக் கொட்டும் !
மரப்போரும் தேன்கூட்டை வளர்க்கச் செய்யும்
           மருந்தாகி உணவாகி வாழ்வைக் காக்கும்
வரம்போலும்  இறையீந்த மரத்தைக் காப்போம்
           வருங்காலச் சந்ததிக்காய்ப் பசுமை சேர்ப்போம் !

சூழலதன் சுத்தத்தைப் பேணும் மக்கள்
            சுவாசிக்கும் காற்றுக்கும் இனிமை கூட்டும்!
வாழவழி காட்டுகின்ற வம்சம் போலும்
            வருகின்ற வெயிலுண்டு  நிழலைத் தூவும்
ஏழைதனை எரித்தாலும் சாம்பல் ஒன்றாம்
            ஏற்றத்தாழ் வில்லையென எடுத்துக் காட்டும்!
வேழமுகம் கொண்டானும்  விரும்பும் இந்த
            விருட்சங்கள்  தனைக்காத்தால் விடியும் நாடே !

பருவத்தின் மாறுதலை உணரச் செய்யும்
            பகல்மூச்சில் ஒட்சிசனை இட்டுச் செல்லும்
உருவத்தை வலிந்துழவன்  பயிரை நட்டால்
           உயிர்ப்பூட்ட நல்லமழை காற்றும் நல்கும்
குருவித்தை போல்மரங்கள் காட்டும் கற்கை
           குறைவின்றி உணர்வுள்ளே சேர்க்கா  விட்டால்
துருவங்கள் போல்வாழத் தகுதி இல்லாத்
          துயரத்தில் பூவுலகும் தொலைந்தே போகும் !                             பிரியமுடன் சீராளன் 

24 கருத்துகள்:

மீரா செல்வக்குமார் சொன்னது…

இலக்கணம் பொருந்திய கவிதை...வாழ்க்கைக்கும் பொருந்தும் அதிசயம்.....பரவசம்...

சீராளன்.வீ சொன்னது…

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
சீர்

மனித வாழ்வியலுடன் பின்னி பினைந்த கவிதை...
அற்புத வரிகள் வெகு சிறப்பு வாழ்த்துக்கள் த.ம 2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் ரூபன் !

நீண்டநாளின் பின்னர் தங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன்
இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் தமிழ்மண வாக்கிற்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ரூபன் வாழ்க வளமுடன் !


கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

குருவித்தை போல்மரங்கள் காட்டும் கற்கை
குறைவின்றி உணர்வுள்ளே சேர்க்கா விட்டால்
துருவங்கள் போல்வாழத் தகுதி இல்லாத்
துயரத்தில் பூவுலகும் தொலைந்தே போகும் !

அருமை
அருமை
உண்மை
உண்மை
தம +1

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கரந்தை மைந்தா !

இயற்கையும் மனிதனும் இரண்டறக் கலந்தால்
இல்லாமைகள் அற்றுப் போகும் இல்லையா
அதுதான் இப்படி ஒரு கவிதையை எழுதினேன்

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றிகள்
வாழ்க வளமுடன் !

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் கவிஞரே வழக்கம் போலவே மிகவும் ரசித்தேன்
தமிழ் மணம் 4

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கில்லர் ஜி !

வழக்கம் போலத்தான் எழுதியும் இருக்கிறேன் இல்லையா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றிகள்
வாழ்க வளமுடன் !

வல்வை சுஜேன் சொன்னது…

குருவித்தை போன்றே மரங்கள் காட்டும் கற்கையும் குறைவின்றி ஏற்றுடுவோம் உணர்வுள்ளே ஏறுமுகம் இல்லையேல் என்றும் இறங்கு முகம்தான் - ஆறறிவென்கிறாய் உனக்கு ஓரறிவு ஜீவன் எப்படி உன்னை கடந்தது தேடு மனிதா நீ தேடு தேடலில் மனிதன் என்றும் தேய் பிறையானதில்லை ... அருமை சீராளா அகக் கண்ணிலும் காணலாம் அறிவை...


Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் வால்வைக் கவிஞரே !

அழகான தங்கள் கருத்துக்கு ஆயிரம் நன்றிகள்
அகக்கன்னிலும் அறிவைக் காணலாம் உண்மைதான் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

Yaathoramani.blogspot.com சொன்னது…

குருவித்தை போல்மரங்கள் காட்டும் கற்கை
குறைவின்றி உணர்வுள்ளே சேர்க்கா விட்டால்
துருவங்கள் போல்வாழத் தகுதி இல்லாத்
துயரத்தில் பூவுலகும் தொலைந்தே போகும் !

நிச்சயமாக
ஆழமான கருத்துடன் கூடிய
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்balaamagi சொன்னது…

மரம் தங்கள் கவிதையால் மயங்குகிறது
பன்னீர் தெளித்து பரவசப்படுகிறது
பாவலரே பார்த்தீர்களா,,,,

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் ரமணி ஐயா !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்
வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் பேராசிரியரே !

//மரம் தங்கள் கவிதையால் மயங்குகிறது
பன்னீர் தெளித்து பரவசப்படுகிறது
பாவலரே பார்த்தீர்களா,,//

ஆகா அந்த அதிசயத்தை நான் இன்னும் காணவில்லையே பேராசிரியரே கண்டுகொண்ட நீங்கள் அதிஸ்டசாலி !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
வாழ்க வளமுடன் !

கலையன்பன் சொன்னது…

மரங்கள் தரும் நன்மை, பயன்களை அழகான கவிதையில் படைத்திட்டீர்கள். மிகவும் நன்று!.

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கலையன்பன் !

என் வலைப்பூவிற்கு தங்களின் முதல் வருகை கண்டு மிகவும் மகிழ்கிறேன் !
இனிய கருத்துக்கும் அன்பான பாராட்டிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
வாழ்க வளமுடன் !

Iniya சொன்னது…

வணக்கம் சீரு!

தாமதத்திற்கு மன்னிக்கணும். ok வா ஒன்னும் முணுமுணுக்க வேண்டாம் எனக்கு கேட்கிறது.
அடேங்கப்பா என்ன கவிதை! சும்மா கமறுதே எத்தனை பொருளாளம் நிறைந்த கவிதை உண்மையில் எனக்கு பொறாமையாக இருக்கிறதாக்கும். ம்..ம்..ம் அடஎன் கண்ணே பட்டிடப் போகுது இல்ல சுத்திப் போடுப்பா.... ok வா ... ஹா ஹா ... என்ன இல்லையா சொன்ன கேட்கணும் ok வா ...இனிய கவிக்கு நன்றி மேலுமும் ஆற்றல் மிக என் வாழ்த்துக்கள்....!

ஒப்பற்ற உணர்வுகளை உதிரத்தில் கொண்டு
உயர்வான கவிதைகளை உதிர்க்கின்றாய் என்றும்
தப்பற்ற அறிவுரைகள் தட்டாமல் கேட்பாய்
தலைமுறைகள் தவிக்காமல் தாயாகி நிற்பாய்
எப்போதும் நற்கருத்தை எடுத்தியம்பும் உந்தன்
எழிலசைவைக் கண்டென்றும் இயன்றமிழே கொஞ்சும்
எப்பிறப்பும் உன்னோடு இசைந்திடுவேன் என்றே
ஏழிசையும் கூடவரும் ஏக்கமறு இன்றே !

சீராளன்.வீ சொன்னது…

இனிய வணக்கம் !

ஏக்கமறு இன்றென்றே என்னுயிரில் சொன்னாய்
.......ஏதுனக்கு நான்செய்வேன் இவ்விடத்து அன்னாய்
தூக்கமறு மப்பொழுதில் துடித்தவிழி ஒன்றாய்த்
.......தூசுதட்டி நினைவெடுத்து தொல்லைதரும் நன்றாய்
ஊக்கமறு முயிர்வலியில் உழன்றாலும் பொன்னாய்
.......ஓய்வுதனை ஆக்கிடவே ஓடுகிறேன் மின்னாய்
பூக்கமறு வென்றுரைக்காப் பூமித்தாய் போலே
.......புதுமறைகள் காண்பித்தாய் போற்றுகிறேன் தாயே !

நல்வாழ்த்துக்களோடு நயமாய்க் கவிதந்த தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தொடர்ந்தும் எனக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் மிக்க நன்றி தங்கள் வரவுக்கும் இனிய கருத்திற்கும் வாழ்க வளமுடன் !

நினைவோடு காய்ந்து நெருப்பாகும் வாழ்வின்
வினையோடு போராடி வேகும் !- எனைவிட்டுச்
சென்றாலு முள்ளச் சிறையிட்டுச் செல்லென்று
மன்றாடு மிந்த மகவு !

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

என்னவென்று சொல்ல!! அற்புதமான வரிகள்! எங்களுக்கு ரசிக்க மட்டுமே தெரியும். தங்களைப் போன்றெல்லாம் அழகிய தமிழில் கவிதை எல்லாம் புனைய வராது...

வாழ்த்துகள்!

சாரதா சமையல் சொன்னது…

மரத்துக்காக வடிவமைக்கப்பட்ட கவிதை அற்புதம் சீராளன்.

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் துளசிதரன் ஐயா !

இரசிக்க மட்டும் அல்ல உங்களாலும் எழுத முடியும் நீங்கள்தான் முயற்சிக்க வில்லையே !

மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் சாரதாம்மா !

விதவிதமாய்ச் சமையல் கலையினை வெளிவிடும் உங்களை விடவா அழகாய் எழுதுகிறேன்
நிக்க நன்றி தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் வாழ்க வளமுடன் !

சக்தி S சொன்னது…

வணக்கம் வணக்கம்..உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Unknown சொன்னது…

பல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி சுலபமாக இணைக்கலாம் (http://www.tamin.in)