சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

திங்கள், 1 டிசம்பர், 2014

எப்போதும் உன்னுள்ளே ..!விறகுள்ளே எனைவைத்து விதியென்று தீமூட்ட
          விழியுண்ட காதல்வெ  டிக்கும்  - மீண்டும்
பிறந்தாலும்  உனதன்பை பிரியாத வரமொன்று
          பிரம்மனிடம் கேட்டுத்து  டிக்கும் !

தன்மானச் செருக்கென்னில் தடுத்தாலும்  உன்னினைவே
         தள்ளாத வயதுள்ளும் வாழும்  - ஈன்ற
என்தாயின் அன்பின்றி  இருந்திட்ட நாள்போல
         ஏக்கங்கள் இளநெஞ்சைச்  சூழும்  !


பொன்னென்ன புகழென்ன பூந்தென்றல் காற்றென்ன
         பொய்யாத உன்னழகிற்(கு) ஈடோ  -  வாழ்வு
வென்றாலும் தோற்றாலும் விதிகாட்டும்  பயணத்தில்
         வலிதந்த  காதல்தான் வீடோ !

நீருள்ளே  மீனுக்கும் நிழல்காட்டும் அலைபோல
         நீவாழும் கண்ணுக்குள் காயம் - நெஞ்சைக்
கூருள்ள வாழ்கொண்டு குடைந்தாலும் என்காதல்
         குலையாத செயலென்ன மாயம் !

குருவின்றிக் கற்றாலும் குழந்தைமொழி போல்காதல்
         கொண்டாடும் இளமைக்குள் மோகம்  - தீயின்
அருகுள்ள செடிபோல அரும்போடு சருகாகும்
         அழகுன்னை மறந்தால்'என் தேகம் !

என்பாதை இருட்டென்று எப்போது கண்டாயோ ?
         எனைவிட்டு  நீ'போகும் முன்பு  - நாளை
அன்புக்காய் நீ..ஏங்கி அழும்முன்னே தலைகோதும்
         அழிந்தாலும்  இவன்கையின்  என்பு !

பிரியமுடன் சீராளன் 


12 கருத்துகள்:

Priya சொன்னது…

//குருவின்றிக் கற்றாலும் குழந்தைமொழி போல்காதல்
கொண்டாடும் இளமைக்குள் மோகம் - தீயின்
அருகுள்ள செடிபோல அரும்போடு சருகாகும்
அழகுன்னை மறந்தால்'என் தேகம் !//எப்பொழுதும் போல் அத்தனையும் அருமை அண்ணா.....

சீராளன்.வீ சொன்னது…தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கையே !

இளமதி சொன்னது…

வணக்கம் சீராளன்!

வலிதனைக் காட்சியாக வார்த்த கவியால்
நலிவுற்றேன் நானும் நலிந்து! - எளிதல்ல
ஊற்றெனக் கண்டேன் உருவான சீர்களை
போற்றுமுமைப் பாரே புகழ்ந்து!

வலிகளை வார்தைகளாக எத்தனை இலாவகமாகக்
கவிதையாய் யாத்துள்ளீர்கள்!..
உங்கள் திறமை கண்டு வியக்கின்றேன்!..

வாழ்த்துக்கள் சகோ!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை கவி
நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம4

சீராளன்.வீ சொன்னது…

தினம்தோறும் ஆற்றல் திளைத்தோங்க என்னில்
மனம்கொண்டு வாழ்த்தும் உறவே - கனம்கொண்ட
நெஞ்சத்து காயங்கள் நீங்குமோ ! நீங்காதே
வஞ்சியவள் தந்த வலி !

மிக்க அன்றி சகோ இளமதி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

திக்கெட்டும் என்கவிகள் தேன்சுவை காணவைக்கும்
வாக்கோடு தந்திட்ட வாழ்த்து !

மிக்க அன்றி கரந்தை நண்பா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

Iniya சொன்னது…

அழியாத நினைவுகள்உனை அழவைத்ததோ

தெளியாமல் தினமும்நீ தடுமாறவோ

விளையாடும் விதியோடு போராட்டமோ

வளைத்தாலும் வளையாது சதிராடுமோ

வலிதந்த வாழ்வை சலியாது விரும்பி

வலுவாக கேட்கின்ற மனம்என்ன மனமோ

பலியாகும் உன்வாழ்வை பகடையாய் நகர்த்துகின்ற

பண்பென்ன பண்போ புரியாத புதிரே

நிலையான இச்சோகம் நீங்காது போமோ

கலைந்தங்கு களிப்புகள் கலவாமல் போமோ

குலையாத இம்மாயம் விலை போகவில்லை

வலைவீசிப் பிடிக்கின்ற இவ்வாழ்வு சோகம்

வேதனை மிகுந்த வரிகளே யானாலும் ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன் சொல்லாடலை கண்டு வியந்தேன்.
வேரோடு அழியட்டும் வேதனைகள். இனிமையாக நகரட்டும் இனிவரும் நாட்கள். என்று வாழ்த்துகிறேன்...!

vimalanperali சொன்னது…

நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

ஊமைக்கனவுகள் சொன்னது…

அய்யா,
தாமத வருகையைப் பொறுத்தாற்றுங்கள்!
கவிதை அருமை!
துள்ளி வரும் சந்தம்!
மனதின் வலிகளைக் காண்போர் அகத்திலும்எதிரொலிக்கச் செய்து விட்டீர்கள்!

த ம 5

நன்றி அய்யா!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மனதின் வலிகள் கூட இப்படி அழகிய வரிகளாகுமோ?!!!!! அருமை அருமை! மிகவும் ரசித்தோம்!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…

வணக்கம்!

வண்ணக் கிளியவள் வார்த்த வலிகவிதை
எண்ணம் புகுந்தாடி இன்பூட்டும்! - உண்ணும்
மனமுடைந்து நிற்கின்றேன்! சீராளன் வாழ்வு
தினமுயர்ந்து காண்க திறம்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு