சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 14 செப்டம்பர், 2022

மௌனத்தின் மொழி !சிறைவைத்து  மேகத்தைச் சிதைத்தாலும் நெருப்பாகா!

சில்லென்ற காற்றொன்றே வீசும் !-விழி 

நிறைந்திட்ட கண்ணீரால் நினைவென்றும் அழியாது !

நிதமுன்றன் கதையொன்று பேசும் !


மெழுகொன்று உருகித்தன் ஒளிகொண்டு இருள்போக்கும்

மிடுக்காக இருக்கின்றேன் இன்றும்! - தினம்

அழுகின்ற நிலைவந்து அடிநெஞ்சம் வியர்த்தாலும் 

அன்பைத்தான் விதைப்பேன்’நான் என்றும் !


மொழியொன்றை  உதிர்க்கின்ற முனைப்பொக்கும் செயலுண்ட 

மோனத்தால் இளங்காலம் போச்சு!- இனிச் 

செழிக்கின்ற நிலைவந்தும் சிறகொன்றிப் பறக்காது

சிந்தைக்குள்  அடைபட்ட மூச்சு!


அலையின்றிக் கடலில்லை! அழகின்றிக் கலையில்லை! 

அறிந்தார்க்கு! மயக்கங்கள் இல்லை !-இந்த 

நிலையில்லா வாழ்வொன்றில்! நிறைகாணா நெஞ்சத்தில் 

நிதஞ்சேரும் தயக்கங்கள் தொல்லை!


இடிவந்த வானத்தில் இடர்பட்டும் கார்மேகம் 

இசைபோல மழைக்காற்று வீசும்!- உடல்  

அடிபட்டுச் சிதறுண்டு அழிந்தாலும் ! உயிர்கொண்ட ! 

அணுவொன்றின் துகளொன்று பேசும் !


நிழலில்லா வானத்தில் நிழல்தேடும் பருந்தாக ! 

நினைவெல்லாம்  வெறுமைக்குள் வாடும் !-உன் 

கழல்பட்ட மண்ணெங்கும் களிப்போடு மலர்பூக்கும் 

காட்சிக்குள் தேனாறு ஓடும் !


பாவலர் சீராளன் 

சொப்பன விழிகள் !
காரிகையா, காரெழிலா, காட்டுமல்லி வாசனையா?

கற்பனைகள் உறங்குநிலை போச்சு! -விழி

தூரிகையா, ஓவியமா  தோகையிவள் நாணுகையில் 

சொப்பனத்தில் கரையுதென்றன் மூச்சு!


ஏதுமொழி, ஏதெழுத்து ,என்றறியா நெஞ்சமதில் 

ஏடுகளைத் தேடவைத்த கோதை  !- மறை

ஓதுமொழி யாயிருக்கும் ஒண்டமிழைப் பாடவைத்து 

ஓசைநயம் ஊட்டிவிட்ட மேதை!


வாழுமொரு நாளிகையும் வாழ்த்துபல கூறுமடி

வஞ்சியெழில் தந்தயிறை தேடி!- வலி

சூழுமொரு வேளையிலும் சகந்தமிக வீசுமடி 

சொல்லினிய உன்பெயரைச் சூடி! 


பதவுரைகள் அற்றகவிப் பார்வையொன்று போதுமடி

பயனறிய  ஏதுமில்லை பாரில்!- இனிப்

புதுமொழிகள் கற்றுமென்ன புலமைகளைத் தந்துவிடும் 

புத்துயிராய் நீயிருக்கும்  போதில்!


கோடைமழைப் பெருக்காகக் கோபத்தில் நீ...நடக்கக் 

கொலுசுகளும் மோனித்த காட்சி!-குளிர்

வாடைதொட்டு  மொட்டுகளை வம்புசெய்த போதுமவை 

வாய்மூடி நின்றகதை யாச்சு!


காற்றினிசை போலினிக்கும் கவிதைமொழி கற்றவனைக் 

களவாடிச் சென்றதொரு மேகம்!- இவன்

தோற்றமினி இங்கில்லை தொலைந்தயிடம் பால்வெளிதான்

துகள்களெனப் பிரிந்திருக்கும் தேகம்!

 

பாவலர் சீராளன் 

வியாழன், 14 ஜூலை, 2022

எண்ணத்தின் சில எச்சங்கள் !சிந்தனை கொண்டெழில் சேர்த்திருப் பாள்- உயிர்ச்

   சித்திரம் யாவையும் கோத்திருப் பாள்!

விந்தனை கொள்'இரு வேல்விழி யால்- கவி 

   வித்தகங்  கற்றத  மிழ்மொழி யாள் !


போரெழ வைத்திடும் புன்னகை யில் -சிலர்

   பொல்லாக் கனவறும் நித்திரை யில்!

காரெழ வைத்திடும் காரிகை யாள்- உளக்

   கற்பனை தீண்டிய  தூரிகை யாள்!


வண்ணக்க ருங்குழல் வாசனை யில்- பல

   வார்த்தைகள் தானெழும் தூங்கிசை யில் !

எண்ணப்பெ ருவெளி எல்லைக ளில்- இவள்

   இட்டமூச் செல்லாமே! மூங்கிசை கள்!


சங்குக ழுத்திடை சந்தமென -மழைச் 

    சாரல்கள் மோனைகள் கொண்டுவர!

பொங்குத மிழொரு பாவெழு தும் -அந்தப் 

    பாவிலி வள்பெயர் தேர்வெழு தும்!


நீலப்பெ ருவானத் தாரகை யாய்!- உளம்

    நீந்தும்மு துமொழிக் காரிகை யாய்!

கோலப்பு றாக்குணம் கொண்டிருப் பாள் !- இதங்

   கூடிய வார்த்தைகள் பூண்டிருப் பாள்!


காலத்தி னிமைகள் தேய்ந்து வர! -வளர்

   காலைத்த னிமைகள் காய்ந்து வர!

சோலைக்க னிச்சுவை  ஊட்டிடு வாள்  !- உளஞ்

   சொக்கிட  வாசனை  தீட்டிடு வாள் !


இன்னுமி ருந்திடும் ஏக்கம் பல - அதன்

   எச்சத்தி லூறிய தாக்கம் சில !

பின்னும்ம னத்துளே பேரிசை யாய்!- உயிர்ப்

   பேழையு டைத்திடும் சாரிகை யாய்!


காலப்ப ருவத்தி னோசைக ளை! - உன்

   காதுகள் சேர்த்திட நாணுகை யில் !

தூலப் பிடிமனத் துள்ளிருக் கும் ! - இவன்

   சொப்பனம் முற்றிய ழிந்திருக்கும்!

 

 பாவலர் சீராளன் 

வியாழன், 5 நவம்பர், 2020

நாணக் குடை !ஏக்கங்க ளைந்திடும் பாசறை யோ -தமிழ் 

ஏடும்ம ணத்திடும் வாசனை யோ ?

தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் - அவள் 

தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில்  !


மின்னல சைத்திடும் மோகவி ழி - உயிர் 

மீட்டியி சைத்திடும் கோதைமொ ழி 

தன்னல மற்றொரு பார்வையி லே - கவி 

தாண்டவ மாடுது   ஓர்மையி லே ! 


பண்ணில டங்கிடாப் பாவின மோ ?  - கம்பன் 

பாடம றந்தொரு பூவின மோ ?

எண்ணில டங்கிடாக்  கற்பனை கள் - அவள்

ஏக்கத்தி லாயிரம் சொப்பனங் கள்!


ஒய்யார மாகவே சாய்ந்திருப் பாள்- வண்ண 

ஒப்பனை  அற்றெழில்  சேர்த்திருப் பாள்!

பொய்யாமொ ழிக்குள்ளே பூத்தம றை - இவள் 

போகுமிட மெங்கும்  பூக்கும்பி றை ! 


ஆயக லைகளில்  ஓவிய மோ? - வஞ்சி 

ஆனந்த யாழிசைக் கீர்த்தனை யோ ?   

தூயம ணந்தரும் ஜாதிமுல் லை -என்றும் 

தூவிடுந் தாதினில்  பேதமில் லை !


நாணக்கு டையவள் கண்ணிமை கள் - வாழும் 

நாகரி கங்களின் வல்லமை கள் 

காணக்கி டைக்குமோ தோணவில் லை  - இவன்

கானல்நீ ராகினான் சாரலில் லை !


பாவலர் சீராளன்.வீ 

சனி, 27 ஜூலை, 2019

அமிழ்தானவள் !சித்தம் நுழைந்திடும் சோர்வைச் - சிறு 
சேலைத் தலைப்பினால் கழைவாள் 
நித்தம் உறங்கிடும் போதில்  - தலை 
நீவித் துயில்தர விளைவாள் !

வெல்லக் குவளையாய் இதழ்கள்  - இரு 
விழிகளும் அமிழ்தக்  குறள்கள் 
செல்லக் குழந்தையாய்ச்  சிரிப்பு  - இதம் 
சேர்க்கும் செந்தமிழ்   விரிப்பு    !

முல்லை மணந்தரும் பேச்சில் - நறு 
முகையென மலர்வாள்  மூச்சில் 
இல்லை எனும்சொல் அறியாள் - தினம் 
இறைமனம் காட்டும்  நெறியாள் !

எது..கை கொடுத்தும்  இசைப்பாள் - கவி 
எதுகை விடுத்தும்  இனிப்பாள் 
மதுகை இருந்தும் மறைப்பாள்  - மலர்   
மது..கை கொடுத்தும் முறைப்பாள்  !

புத்தகம் அவளது தங்கை - எனைப்  
பொலிய வைத்திடும் மங்கை 
வித்தகம் புரியும் விரலாள்  - இசை 
வியக்கும் மதுரக் குரலாள் !

பச்சைப் பார்வைகள் தந்தாள் - என் 
பருவத் தீபுக வந்தாள் 
இச்சைப் போர்வைகள் களைந்தாள் - மனம் 
இருக்கும் இடத்தில் நுழைந்தாள் !

வண்ணக் கனவுகள் இன்னும் - உயிர் 
வளர்த்துக் கவியாய்  மின்னும்   
எண்ணச் சிறகுகள்  அல்லும் - வலி  
இருந்தும் பறந்ததைச்  சொல்லும் !

வெள்ளி, 8 மார்ச், 2019

கைக்கிளை அல்ல !
ஓரிரு மாதங்கள் ஒத்தையி லே - தினம் 
உள்ளம் அழுதது மெத்தையி லே 
போரிரு வாளிடைச் சத்தங்க ளாய் - எண்ணம் 
போட்டுயிர் கீறுதே முத்தங்க ளாய் !

வெட்டவெ ளிப்பந்தல் போடலை யே ! - வஞ்சி 
வெட்கத்தில் மாவிலை ஆடலை யே !
வட்டநி லாவெழில் காணலை யே - கொஞ்சும் 
வண்ணக்க னாவரத்  தோணலை யே !

அச்சக மேறலை பத்திரி கை - ஐயோ 
அங்குமே காணலை ஒத்திரு கை 
இச்சையு டைக்குது தேகவில் லை - மனம் 
இன்னுந்து டிக்குது நோகவில் லை !

அன்றிலு ளக்கிய பூக்களெ ன - ஆசை 
அங்குமிங் கானது ஏக்கமெ ழ 
ஒன்றிய ழிந்தது ஓர்மயக் கம் - இன்னும் 
ஓடியொ ளிக்கின்றாய் ஏன்தயக் கம் !

உச்சிவ ரையாசை ஏறிய தும் - உன்றன் 
ஊடலி லெல்லாமும் மாறிய தும் 
வச்சிர மாயுயிர் ஒட்டிநிற் கும் - காடு 
வந்துமு டல்தனைத் தொட்டுநிற் கும் !

நானாக நானாக நானிலை யே - அந்த 
நந்தவ னக்குயில் பாடலை யே 
மானாகப் பாய்ந்தவள் ஆடலை யே - வண்டு 
மார்கழிப் பூவையும் தேடலை யே !

காதலைப் பாடுமோ யாழினி ழை - அந்தக் 
காற்றைந னைக்குமோ ஈரம ழை !
வாசலெ ழில்தரும் வாசமுல் லை - இனி 
வாவென் றழைத்திட யாருமில் லை !

பாவலர் வீ.சீராளன்