சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

செவ்வாய், 30 டிசம்பர், 2014

புலர்ந்திடு புத்தாண்டே !வந்திடும் ஆண்டின் தொடக்கம்
      வலியெலாம் மறைய  மீண்டும்
தந்துநல் ஆட்சி முறைமை
      தரணியும் மகிழ வேண்டும்
எந்தையும் தாயும் வாழ்ந்த
      எழில்மிகு ஈழத் தீவில்
சிந்தனை செல்வம் அமைதி
     சிறப்புற சேர வேண்டும் !

திங்கள், 1 டிசம்பர், 2014

எப்போதும் உன்னுள்ளே ..!விறகுள்ளே எனைவைத்து விதியென்று தீமூட்ட
          விழியுண்ட காதல்வெ  டிக்கும்  - மீண்டும்
பிறந்தாலும்  உனதன்பை பிரியாத வரமொன்று
          பிரம்மனிடம் கேட்டுத்து  டிக்கும் !

தன்மானச் செருக்கென்னில் தடுத்தாலும்  உன்னினைவே
         தள்ளாத வயதுள்ளும் வாழும்  - ஈன்ற
என்தாயின் அன்பின்றி  இருந்திட்ட நாள்போல
         ஏக்கங்கள் இளநெஞ்சைச்  சூழும்  !

வியாழன், 25 செப்டம்பர், 2014

கவிஞர் கி. பாரதிதாசன் பொன்விழா அந்தாதிஅன்பும் அறநெறியும் ஆயகலை அத்தனையும் 
முன்னே அறிந்திட்ட முத்தமிழே - என்றென்றும் 
வள்ளலாய் எங்கள் வரகவியாய் வாழ்.கி.பா 
அள்ளித் தரும்பாவில் ஆடு!

ஆடும் மயிலாகப் பாடும் குயிலாகச்
சூடும் கவிகள் சுவையூற்றே! -  நாடுவக்கும் 
பொன்விழா நாள்காணப் பூஞ்சோலை காத்திருக்கும்! 
கன்னித் தமிழ்பேசும் காற்று!

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மீண்டுமோர் கனவு !அந்திபகல் சிந்தும்விழி சொந்தமொன்று நாடவிதி
                மந்தநிலை போக்கி விடுமோ -இல்லை
முந்தியிடி தந்தவலி சிந்தையிலே ஆடசதி  
               வெந்தணலில் வீழ்த்தி சுடுமோ !

பட்டகுறை விட்டகல கட்டிலிடை சிட்டுவர
               முட்டியொளி  மூச்சு தருமோ  - காதல்  
இட்டசிறை கட்டகல தொட்டிலிடை  மொட்டுவர
               பட்டுமொழி பேச்சு வருமோ!

புதன், 13 ஆகஸ்ட், 2014

வாழ்வில் கண்ட பாடங்கள் ..!


வாழ்வில் கண்ட பாடங்கள் 
வாட்டும் நினைவின் கீதங்கள் 
கேள்விகள் உள்ளே  நம்பிக்கை 
கேட்டு வாழ்ந்திட  துயரமில்லை !

                                  ( வாழ்வில் கண்ட பாடங்கள் .)

புதன், 2 ஜூலை, 2014

கவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுக்குப் பதிற்றந்தாதி
நாவடைத்து நிற்கின்றேன் நற்றமிழ் வேந்தராம்
பாவலரின்  பட்டம்  பரிசேற்று  - ஆவலுடன்
பூவெடுத்து ஆன்மாவால்  கோர்க்கின்றேன்! பண்புடைய
பாவேந்தா் பாதம் பணிந்து !

பணிந்துநான் ஏற்கின்றேன் பாவலரின் பட்டம்!
அணிந்துநான் ஆடுகின்றேன் ஐயா - துணிந்துநான்
இவ்வுலகில் தூயதமிழ் கற்க! துணைநிற்பாய்
எவ்விடத்தும் என்னுள் இருந்து !

புதன், 25 ஜூன், 2014

கேட்டாளே சில கேள்வி !
ஊர்சுற்றும் இந்த பத்து வினாக்களுக்கும் விடை எழுத வலைப்பூவின் உறவுகள் இளமதி, இனியா இருவரும் என்னையும்  அழைத்தார்கள் அந்த அன்புக்கு நன்றி சொல்லி இதோ எழுதி இருக்கிறேன் தங்கள் ஆசீர்வாதங்களுடன் ....நன்றி உறவுகளா..!


கொளுத்திப் போட்டோர்  கொலுவிருக்க 
இழுத்துப் போட்டு எழுதுகிறேன்
என்னையும் எனக்குள் உள்ளதையும் ..! 

வந்து பாருங்கள் இளமதி & இனியா யார்கிட்ட !
ஹி ஹி ஹி இது முயற்சி தவறெனில் மன்னியுங்கள் 
மகராசிகளா  !

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

நடவா இடரேகி நாவுளறும் நாள்முன்
அடக்கம் அடைதல் அழகு !

நான் அவனில்லை ! க க மு ......எப்புடி 

திங்கள், 16 ஜூன், 2014

நெஞ்சோடு பேசும் நினைவுகள் !

புத்தியிலே ஊடுபுகும் புதுக்கவிதை உன்பேச்சில்
முத்தமிழும் தேன்சுரக்கும் முகிலினங்கள் கவிபாடும்
வித்தினிலே பூவரும்பும் விழிமடலும் புன்னகைக்கும்
இத்தனையும் நீகொண்ட எழிலுக்கு ஏற்றமடி    !

இன்பத்துப் பாலுக்கும் இலக்கணமாய் மௌனங்கள்
கன்னலிடை அசைவினிலே காட்டுகின்ற சில்மிசங்கள்
மின்னலென  மறைகின்ற மிடுக்கான வெட்கங்கள்
இன்னுயிரை வதைக்கின்ற  இதயத்தின் ஸ்வரங்களடி  !

சனி, 19 ஏப்ரல், 2014

இரண்டாம் காதல்ஒற்றை நிலவே ஒற்றை நிலவே
உயிரின் ஓசை கேட்கிறதா
சிற்றறை வெடித்தும்  சிரிக்கும் இதய
சிதைவுகள் கண்ணில் தெரிகிறதா !

                        ( ஒற்றை நிலவே ஒற்றை நிலவே )

சிப்பியை சிறைக்குள் வைத்தால்
முத்திற்கில்லை பாதிப்பு
முத்தமிட நீ மறுத்தால்
மூச்சிற்கென்ன யாசிப்பு !

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

என்னுயிர் பூவே நலமா ?என்னுயிர் பூவே
நலமா ?

இதயம் கரைத்தே
இசையில்
இனிமை தந்துவிட்டு
பூவாய்க் கருகிய
இந்தப் புல்லாங்குழலை
நினைவிருக்கிறதா ?

மூச்சுத்தான்
இவன் மொழி
ஆதலால்
ஊமையும்
மொழிபெயர்க்கும்
உன்னதம் என்னில்
தவறவிட்டாய் !

செவ்வாய், 18 மார்ச், 2014

கனவுகள் எழுதிய கவிதை ..!உனைத்தேடும் உன்னதம் இங்கே
உயிர்வாழும் உள்ளுக்குள் நெஞ்சே
கவிபாடக் கனவுகள் கண்டேன்
கண்ணுக்குள் நீயில்லை சகியே  !
                                   (உனைத்தேடும் உன்னதம் இங்கே )

சிறகுகள் முளைக்கின்ற நொடிகள்
பறத்தலை நினைத்திடும் மனது
உறவுகள் அணைத்திடும் வரையில்
துறவறம் நெஞ்சினில்  தொலைவில்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

மௌனங்களின் மொழிபெயர்ப்புநாற்றோடும் வேரணைத் தேநீரும் நல்கின்ற
ஆற்றலே பச்சையத்தி னாதாரம் - ஊற்றாகி
உள்ளத்தில் சேர்க்கும் உனதன்பே  என்னுயிரில்
அள்ளி அளிக்கும் அமுது!

மாணிக்கப் பந்தல் மணக்கோலம் பூணுகையில்
நாணிக் குறுகிநின்றாள் நற்கனியாள் -வாணிக்கே
கற்பிக்கும் வண்ணவிழி கொண்டவளே ! என்பாட்டில்
சொற்சிறக்கப் பார்ப்பாய் தொடா்ந்து !

என்னுயிரில் என்றும் எழிலாடும்  உன்னுருவம்
பொன்னொளியில் மின்னும் பொலிவுடனே - என்றென்றும்
வண்ணவிழி எண்ணி வலிமேவும் நேரத்தும்
கொண்டல் பொழியும் குளிர்ந்து

கண்விட்டுப் போகும் கனவுகளின் எச்சங்கள்
புண்பட்டுக்  காயும் புலனழித்தே  - எண்ணத்தில்
இன்புற்றுப் பின்னழியும்  இல்லாதான் கற்பனைபோல்
உன்னுருவைத் தேடும் உணர்வு !

மொழிகள் முளைக்காமல் மௌனம் சுமந்தே
அழியா நினைவால் அறுத்தாய்  - இழித்தாலும்
முன்னல் எரிக்காதே  மூச்சோடும் போகாதே
உன்னோ டிருந்த உறவு !

இல்லாதான் காதல் இனத்தின் இழிசெயலாம் 
செல்வந்தன் சொல்லும்  நெறி

கொண்டல் - மேகம் 
முன்னல் - நினைவு ,நெஞ்சு 

பிரியமுடன் சீராளன் 

சனி, 18 ஜனவரி, 2014

உயிர் உருகும் வேளையிலே..!


அன்னக் கொடியிடையும் அன்புநிறை பேச்சழகும்
வன்கூட்டில் வந்து வளம்சேர்க்கும் - நன்னெறியாள்
கன்னல் சுவைக்கும் கனியிதழ் காண்பதற்கே
மின்னல் ஒளிரும் மிகுந்து!

கொட்டும் மழைக்குள் கொடுகும் நுனினாக்கும்
மெட்டுக்கள் போடுமவள் மெல்லிடைக்கே  -பட்டுடுத்தி
மொட்டாய் நடந்தால் முழுநிலவு தாள்பணியும்
வட்டக் குடைபோல் வளைந்து !

பொன்னூஞ்சல் கட்டியுனை பூக்களால் சோடித்தும்
என்னெஞ்சில் ஏந்துகிறேன் ஏந்திழையே -மென்னுள்ளம்
வெந்துனிதம்  மேனி வியர்க்கையிலே  ! உன்நினைவும்
கந்தமாய் வீசும் கமழ்ந்து !

நாவில் இனிக்கும் நறுஞ்சொற்கள்  நீவிடுத்தே
நா..வில் சுமந்தாய் நளினமே -பூவில்
கமழும் புகழினிய கண்ணிதளால் ! பூப்பாய்
அமிழும் உயிருக்குள் அன்பு !

வெந்தழியும் வேளையிலும் வேகாதே  உன்நினைவு
சிந்தையிலே வாழுமடி சிற்பமாய் - நந்தியெனத்
தள்ளிநீ போகையிலும்  தாங்கும் வரம்பெற்றே
உள்ளுருகி நிற்கும் உயிர் !

கன்னலென காரிகையைக் கற்றுவிடச் சேர்ந்துவரும் 
என்பாவுக் கென்றும் எழில்!

பிரியமுடன் சீராளன்