சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 2 ஜூலை, 2014

கவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுக்குப் பதிற்றந்தாதி
நாவடைத்து நிற்கின்றேன் நற்றமிழ் வேந்தராம்
பாவலரின்  பட்டம்  பரிசேற்று  - ஆவலுடன்
பூவெடுத்து ஆன்மாவால்  கோர்க்கின்றேன்! பண்புடைய
பாவேந்தா் பாதம் பணிந்து !

பணிந்துநான் ஏற்கின்றேன் பாவலரின் பட்டம்!
அணிந்துநான் ஆடுகின்றேன் ஐயா - துணிந்துநான்
இவ்வுலகில் தூயதமிழ் கற்க! துணைநிற்பாய்
எவ்விடத்தும் என்னுள் இருந்து !


இருந்தேன் இதுகாறும் இவ்வுலகின் ஓரம்
பெருந்தேன் அடையில் பிணைத்தீர் - மருகா
உனது மனமோ! உயிராளும் மூச்சோ
எனதுள்ளம் கொண்ட எழுத்து !

எழுத்தில் எழிலாட என்குருவே நெஞ்சில்
கொழிக்கவை இன்றமிழ் கோர்த்துச் - செழிப்பான
அந்தாதி சீர்விருத்தம் அத்தனையும் செம்மையுற
வந்தெடுத்து வைப்பேன்நல் வாழ்த்து !

வாழ்த்துகிறேன் பாவலரே! வண்டமிழின் காவலரே!
ஆழ்ந்துறங்கும் வேளையிலும் ஆன்மாவில் - சூழ்ந்திருக்கும்
நல்லுரைகள் சேர்த்துருக்கி நன்றிசொல்வேன் ! நானிலத்தின்
எல்லா இடத்தும் இருந்து!

இருக்கும் வரைக்கும் இருகரம் கூப்பி
திருவருள் தன்னைதொழு தாலும் - திருவாய்
கமழும் திருவாச கம்போல்! உருகும்
உமதன்பு போதும் உயிர்க்கு!

உயிரின் முதலோன் உமக்களித்த இன்பப்
பயனில் எமக்கும் பகிர்ந்தீர் - முயன்றிங்குக்
கற்றதனை முன்மொழிவேன் காப்பியமாய்! அவ்வழிக்கே
பெற்றேன் இனிய பிறப்பு !

பிறப்பின் பயன்கண்ட பேரின்ப நாளில்
அறத்தின் வழிநடக்க ஆள்க! - நிறைந்த
நறுமலர் காடாய் நனிச்சுவை தேனாய்ச்
சிறப்புறும் என்னுடைச் சீர் !

சீர்பெருகும் இப்புவியில் சீராளன் என்பெயரும்
ஒர்யுகம் வாழ உயிர்தந்த - பார்புகழ்
வீசுகின்ற பாவலா் வாழ்மண்ணும் நன்றெனவே
பேசும் கவிதைகள் பெற்று !

பெற்றேன் பெருமனத்தின் பேறொன்றே! உம்மிடத்தில்
கற்றேன் கவியறிவு காவலரே - நற்றமிழ்ச்
சொல்லெடுத்து நன்றிபல சொல்கின்றேன்!நாளெல்லாம்
நல்லுரையைக் கூறுமென் நா!

இன்கவிஞர் பட்டம் எனக்களித்த பாவலர்க்கு 
மென்நெஞ்சம் போடுமிந்த மெட்டு !

பிரியமுடன் சீராளன் 

29 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

சீராளன் சீரடிகள் கண்டு சிலிர்த்தது நெஞ்சம் இன்றுஇவை பாராள வேண்டும் என்று போற்றுகின்றேன் பணிந்து !

வாழ்த்துக்கள் அன்புச் சகோதரனே இன்பத் தமிழை இணையாய்க் கொண்டு இன்புற்றிருக்க மகிழ்ந்து ..

Yarlpavanan சொன்னது…

பாரதிதாசன் அவா்களுக்குப் பதிற்றந்தாதி பகிர்ந்த
பாக்கருத்துகள் அத்தனையும் உண்மையே!

இளமதி சொன்னது…

இனிய வணக்கம் சகோதரரே!...

பாவலா! உன்பெயர் பாரெல்லாம் போற்றிடக்
காவலன் ஆனாய் கனிமொழிக்கே! - ஆவல்
பெருக்கிடும் அந்தாதிப் பேரலை! அன்பால்
உருக்குதே! ஓங்கி ஒலித்து!

உங்கள் அந்தாதி வெண்பாக்கள் அற்புதம்!...
வார்த்தைக்குள் அடங்காத மகிழ்வு படிக்கும் எமக்கே என்றால்...
ஐயாவுக்கு எப்படி இருக்கும்!

தொடருங்கள்!.. பாதை உங்களதே!..
வாகை சூடி இன்னும் இன்னும் உயர்ந்த இடத்தில் பரிணமிக்க
உளமார வாழ்த்துகிறேன்!

வாழ்க வளமுடன்!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…

வணக்கம்!

சீராளன் அவர்கள் பா புனையும் ஆற்றலையும் பைந்தமிழ்ப் பற்றையும் கண்டு கவிஞர் என்றும் பட்டம் அளித்தேன்.

கவிஞர் சீராளன் அவர்களுக்கு மிக மிக ஏற்புடையது என்பதை அவர் பாடிய இந்தப் பதிற்றந்தாதி சான்று!

கவிஞர் சீராளன் காலம் வெல்க!

காற்றலை போன்று கவிபாடும் உன்னுடைய
ஆற்றலைக் கண்டேன்! அகங்குளிர்ந்தேன்! - போற்றுமுயர்
பட்டம் அளித்திட்டேன்! பைந்தமிழ்ப் பூங்குயிலே
கொட்டும் முரசடித்துக் கூவு!

என்றன் பெயரில் எழுதிய அந்தாதி
இன்றேன் சுரக்கும் இதயத்துள்! - என்றென்றும்
சீருடன் வாழ்க! செழுங்கவிஞர் சீராளன்
பேருடன் வாழ்க பெருத்து!

அருந்தம்பி சீராளன் அந்தமிழ் காக்கும்
பெரும்நம்பி என்றபெயர் பெற்று - வரும்காலம்
ஓங்கட்டும்! வாழ்நலம் தேங்கட்டும்! நற்புகழைத்
தாங்கட்டும் அன்னைத் தமிழ்!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

KILLERGEE Devakottai சொன்னது…


எமது இனிய வாழ்த்துக்களும் நண்பரே...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை வாழ்த்துக்கள் நண்பரே
தம +1

பெயரில்லா சொன்னது…

சீராளன் மிக மகிழ்வு. எல்லா இடமும் சென்று வாசித்து அறிந்தேன்.
இனிய நல்வாழ்த்து. பதிற்றுப் பதில்களும் மிக அருமை.
பட்டம் உமக்கே பொருந்தும்.
மேலும் புகழடைக! வளர்க! வாழ்க!
வேதா இலங்காதிலகம்.

priyasaki சொன்னது…

பதிற்றந்தாதி நன்றாக எழுதி, கவிஞர் ஐயாவை பெருமையடைய வைத்திருக் கிறீங்க.உங்களுக்கு பட்டம் தந்தது மிகப்பொருத்தமே.வாழ்த்துக்கள் சீராளன்

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

நாவன்மை கொண்டு செம்மொழியை சீராக சீராட்டிய சீராள உன்புகழ் பாரெல்லாம் புகழடைய நான் வாய்விட்டு வாழ்த்துகிறேன் பாவலனே.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் சகோ அம்பாள் !

அம்பாளின் வாழ்த்தில் அகம்குளிர பாதொடுப்பேன்
இம்மா நிலத்தில் இனி!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ !

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் ஜீவலிங்கம் !

உண்மையென உன்நா வுரைக்க உயிர்பூவில்
வண்ணமுறும் என்பா வளர்ந்து !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ !

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் சகோ இளமதி !

உளமார வாழ்த்தும் உறவுநீ என்றன்
வளமான வாழ்வின் வரம் !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ !

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கவிஞர் அண்ணா !

என்காலம் வெல்ல இனிதாக வாழ்த்துகின்ற
கன்னல் கவியே கனிமரமே - அன்பின்
இலக்கணத்தில் அள்ளி இடுகின்ற பாக்கள்
உலகுக்கும் ஊட்டும் ஒளி !

அன்னைத் தமிழின் அறங்காவ லர்நீங்கள்
இன்புற வேண்டும் இனி !

என்ன சொல்லி நன்றியுரைப்பேன் எனக்கே தெரியவில்லை ஐயா ...இனி எல்லாம் காலத்தின் கரங்களில் ..!

என்னை வாழ்த்தி வெண்பாக்கள் தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ..!

வாழ்க வளமுடன் !
சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கில்லர்ஜீ !

கில்லர்ஜி அண்ணல் கிளர்ந்துள்ளம் வாழ்த்திவிட்ட
நல்லுரை கண்டேன் நயந்து !

மிக்க நன்றி அன்புச் சகோதரனே
தங்கள் வாழ்த்தும் வளம்சேர்க்கும் எனக்கு

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் !

வாக்கோடு வாழ்த்தும் வழங்கிட என்பாக்கள்
பூக்கோலம் கண்ட பொலிவு !

தங்கள் வாழ்த்தும் வாக்கும் எண்ணெய் மேலும் வளர்க்கும்
மிக்க நன்றி

வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கோவைக்கவி !

எல்லா இடத்தும் எழிலாக பூத்திருப்பேன்
நல்லோர்கள் வாழ்த்தில் நனைந்து !

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி அம்மா !

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் ப்ரியசகி அம்மு !

அம்முலு வார்த்தை அமிர்தம் கொழித்திடும்
செம்மொழி தூவிய செண்டு !

தங்கள் வரவும் வாழ்த்தும்
என்னுள்ளம் கொண்ட இன்பத்தின் ஊற்று !
மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

Iniya சொன்னது…

இன் கவிஞரே
இனிமை பொங்க
இட்ட பாக்கள்
சேர்க்கும் பெருமை
என்றும் உமக்கு!

பாரெல்லாம் புகழ
போற்று தமிழை புகழ்ந்து!

சீர் சீர் என்று காற்றெல்லாம்
கதைபேச மகிழட்டும் உன் உள்ளம் என்றும் தணிந்து!

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ...!

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் ரூபன் !

வாய்விட்டு வாழ்த்துகிறாய் வாழ்நாள் உறவான
தாய்வீட்டு நட்பாகத் தந்து !

மிக்க நன்றி ரூபன்
தங்கள் வாழ்த்தும் கருத்தும் கண்டு மிக மகிழ்கின்றேன்

வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் சகோ இனியா !

காற்றும் கதைபேசும் காதல் கவிவடிப்பேன்
போற்றும் உமதன்பை போன்று !

மிக்க நன்றி இனியா
தங்கள் வாழ்த்தும் கருத்தும் கண்டு மிக மகிழ்கின்றேன்

வாழ்க வளமுடன்

ஊமைக்கனவுகள் சொன்னது…

செழித்த தமிழ்வயலுள் செந்தமிழின் இன்தேன்
கொழிக்கக் கவிபடைத்த அன்பில் - எழிலாகும்
பத்துவந் தாதிபடை முத்திரையில் இத்தரையில்
நித்திலமே நீயே உளாய்!

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் ஊமைக்கனவுகள் !

நித்திலம் வாழ்த்த நினைவுகளை தூவுகிறேன்
இத்தரையின் இன்பங்கள் சேர்த்து !

தங்கள் வருகைக்கும் அழகிய வெண்பாவுக்கும்
மிக்க நன்றி
வாழ்க வளமுடன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பு...

மனமார்ந்த பாராட்டுக்கள்... நல்வாழ்த்துக்கள்...

Iniya சொன்னது…

http://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_22.html
வாருங்கள் வலைச்சரப் பக்கம்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் இனியா !

அழைப்பிற்கு நன்றி வருகிறேன்

rajamelaiyur சொன்னது…

அருமை

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-6.html?showComment=1409356554900#c1920465853613641210
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

rajamelaiyur சொன்னது…

வலைசரத்தில் நீங்கள் பல்சுவை பதிவர்கள் பகுதி -1

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கவிஞர் பாரதிதாசன்
பாரதி தாசன் ஆனதால்
பார் புகழும் கவி ஆனாரோ!!

தாங்கள் இக் கவிஞர் பாரதிதாசனின் தாசன் ஆனீர் இப்படி ஒரு அழகு தமிழில் அவர்களுக்கு பதிற்றந்தாதி புனைந்து!!

அருமை! அருமை! தங்கள் எல்லோரது தமிழும் எங்களை கட்டிப்போட்டு வியக்க வைக்கின்றது!

வாழ்த்துக்கள் நண்பரே!

தொடர்கின்றோம்!