சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வெள்ளி, 8 மார்ச், 2019

கைக்கிளை அல்ல !
ஓரிரு மாதங்கள் ஒத்தையி லே - தினம் 
உள்ளம் அழுதது மெத்தையி லே 
போரிரு வாளிடைச் சத்தங்க ளாய் - எண்ணம் 
போட்டுயிர் கீறுதே முத்தங்க ளாய் !

வெட்டவெ ளிப்பந்தல் போடலை யே ! - வஞ்சி 
வெட்கத்தில் மாவிலை ஆடலை யே !
வட்டநி லாவெழில் காணலை யே - கொஞ்சும் 
வண்ணக்க னாவரத்  தோணலை யே !

அச்சக மேறலை பத்திரி கை - ஐயோ 
அங்குமே காணலை ஒத்திரு கை 
இச்சையு டைக்குது தேகவில் லை - மனம் 
இன்னுந்து டிக்குது நோகவில் லை !

அன்றிலு ளக்கிய பூக்களெ ன - ஆசை 
அங்குமிங் கானது ஏக்கமெ ழ 
ஒன்றிய ழிந்தது ஓர்மயக் கம் - இன்னும் 
ஓடியொ ளிக்கின்றாய் ஏன்தயக் கம் !

உச்சிவ ரையாசை ஏறிய தும் - உன்றன் 
ஊடலி லெல்லாமும் மாறிய தும் 
வச்சிர மாயுயிர் ஒட்டிநிற் கும் - காடு 
வந்துமு டல்தனைத் தொட்டுநிற் கும் !

நானாக நானாக நானிலை யே - அந்த 
நந்தவ னக்குயில் பாடலை யே 
மானாகப் பாய்ந்தவள் ஆடலை யே - வண்டு 
மார்கழிப் பூவையும் தேடலை யே !

காதலைப் பாடுமோ யாழினி ழை - அந்தக் 
காற்றைந னைக்குமோ ஈரம ழை !
வாசலெ ழில்தரும் வாசமுல் லை - இனி 
வாவென் றழைத்திட யாருமில் லை !

பாவலர் வீ.சீராளன்