சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வெள்ளி, 8 மார்ச், 2019

கைக்கிளை அல்ல !
ஓரிரு மாதங்கள் ஒத்தையி லே - தினம் 
உள்ளம் அழுதது மெத்தையி லே 
போரிரு வாளிடைச் சத்தங்க ளாய் - எண்ணம் 
போட்டுயிர் கீறுதே முத்தங்க ளாய் !

வெட்டவெ ளிப்பந்தல் போடலை யே ! - வஞ்சி 
வெட்கத்தில் மாவிலை ஆடலை யே !
வட்டநி லாவெழில் காணலை யே - கொஞ்சும் 
வண்ணக்க னாவரத்  தோணலை யே !

அச்சக மேறலை பத்திரி கை - ஐயோ 
அங்குமே காணலை ஒத்திரு கை 
இச்சையு டைக்குது தேகவில் லை - மனம் 
இன்னுந்து டிக்குது நோகவில் லை !

அன்றிலு ளக்கிய பூக்களெ ன - ஆசை 
அங்குமிங் கானது ஏக்கமெ ழ 
ஒன்றிய ழிந்தது ஓர்மயக் கம் - இன்னும் 
ஓடியொ ளிக்கின்றாய் ஏன்தயக் கம் !

உச்சிவ ரையாசை ஏறிய தும் - உன்றன் 
ஊடலி லெல்லாமும் மாறிய தும் 
வச்சிர மாயுயிர் ஒட்டிநிற் கும் - காடு 
வந்துமு டல்தனைத் தொட்டுநிற் கும் !

நானாக நானாக நானிலை யே - அந்த 
நந்தவ னக்குயில் பாடலை யே 
மானாகப் பாய்ந்தவள் ஆடலை யே - வண்டு 
மார்கழிப் பூவையும் தேடலை யே !

காதலைப் பாடுமோ யாழினி ழை - அந்தக் 
காற்றைந னைக்குமோ ஈரம ழை !
வாசலெ ழில்தரும் வாசமுல் லை - இனி 
வாவென் றழைத்திட யாருமில் லை !

பாவலர் வீ.சீராளன்

14 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
பாவலருக்கு வாழ்த்துகள்

KILLERGEE Devakottai சொன்னது…

இரசித்தேன் பாவலரே அழகிய வார்த்தைக் கோர்வைகள்...

அதிரா From அந்தாட்டிக்கா:) சொன்னது…

ஆவ்வ்வ்வ்வ் இது எப்போ நடந்தது?:).. நான் இம்முறை கொமெண்ட்டில் கடன்காரர் ஆக்குறீங்களே எனச் சொன்னேன், ஆனா இதை செக் பண்ணவில்லையே... நம்ப முடியவில்லை.. ஹா ஹா ஹா வெல்கம் வெல்கம்.

அதிரா From அந்தாட்டிக்கா:) சொன்னது…

சொல்வதற்கேதுமில்லை, வழமைபோல் சூப்பர் கவிதை.
ஆனாலும் இன்னும் சோக கீதம் பாடுவதை நிறுத்தாதது ஏனோ?:)..

//நானாக நானாக நானிலை யே - அந்த
நந்தவ னக்குயில் பாடலை யே //
கவலை தரும் வரிகள்.

நெல்லைத்தமிழன் சொன்னது…

//வட்டநி லாவெழில் காணலை யே - கொஞ்சும்
வண்ணக்க னாவெழத் தோணலை யே !// - இரண்டாவது வரி சரியா? கனா எப்படி எழுவதற்குத் தோன்றும்?

//மனம்
இன்னுந்து டிக்குது நோகவில் லை !// - இந்த வரியும் சரிபோல் தெரியலையே. மனம் அவளைப் பிரிந்து துடிக்குது. ஆனால் வலியில்லை. அப்படியா?

//ஒன்றிய ழிந்தது ஓர்மயக் கம் - இன்னும்
ஓடியொ ழிகின்றாய் ஏன்தயக் கம்// - இரண்டாவது வரியில் தளை சரியா வந்திருக்கா? 'ஒன்றிய' - 'ஓடியொ ழிகின்றாய்' - சரியா இருந்தாலும் எதோ வித்தியாசம் தெரியுது

பாடல் நன்றாக வந்திருக்கிறது என்றாலும் சீராளன் அளவுக்கு வரவில்லை என்றுதான் சொல்ல நினைத்தேன், கடைசி வரியைப் படிக்கும்வரை. அப்போதுதான் தெரிந்தது எழுதியது சீராளன் என்று.

கவிதை நல்ல முயற்சி.. ஒரு சில உவமைகளைத் தவிர சிறப்பாக வந்ததுபோல் தோன்றவில்லை.

நெல்லைத்தமிழன் சொன்னது…

//ஒன்றிய ழிந்தது ஓர்மயக் கம் - இன்னும் ஓடியொ ழிகின்றாய் ஏன்தயக் கம் !

இதுல, ஓடியொ ளிகின்றாய் என்று வரவேணும். 'ஒழிதல்' என்பது ஒழிந்துபோதல், இனிமேல் வரவே போவதில்லை என்னும் நிலை. அப்போ 'ஒழிகின்றாய்' என்று வரக்கூடாது. 'ஒழிந்தாய்' என்பதுபோல past tenseல வரணும்.

பாரதிதாசன் ஐயா என்ன சொல்லுகிறார் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் !

கரந்தை மைந்தனே தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

வாழ்க நலம் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் ஜி !

தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் அன்பின் நன்றிகள் !

வாழ்க நலம் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் தீர்க்கதரிசி அதிரா !

எதிர்பாரா நேரத்தில் எழுதி போடுவதுதான் நமது வேலையே ஹா ஹா ஹா !
எழுதுவதற்கு நினைத்தாலே இப்படி ஒப்பாரிப் பாடல்கள்தான் நெஞ்சிலே வருது என்ன பண்ணலாம் ! மாற்ற முயற்சிக்கிறேன் இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த சமூகக் கவிதையா பதிவிடுகிறேன் நன்றி பூசாரே !

வாழ்க நலம் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் நெல்லைத் தமிழன் !

தங்கள் வருகைக்கும் சிறந்த விமர்சனத்திற்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கும் முதற்கண் நெஞ்சார்ந்த நன்றிகள் மாற்றம் செய்து விட்டேன் !

இப்பாடல் சிந்துப்பா பா வகையில் கும்மிச் சிந்து ! இதில் ஒவ்வொரு சொல்லிலிலும் ஒற்று நீக்கி மூன்று எழுத்துக்கள் வரல் வேண்டும் அத்தோடு இயைபும் சரியாக ஒன்றித்து இருக்க வேண்டும் ( எல்லாம் தங்கள் அறிந்ததுதான் ) தளை சரியாகவும் இருக்கிறது தங்கள் சொன்ன இடத்தில் மட்டும் ///ஓடியொ ளிக்கின்றாய் என்றே வந்திருக்க வேண்டும் தவறுக்கு மன்னிக்கவும் திருத்தம் சொன்னமைக்கு மீண்டும் நன்றிகள் !

//மனம்
இன்னுந்து டிக்குது நோகவில் லை !// - இந்த வரியும் சரிபோல் தெரியலையே. மனம் அவளைப் பிரிந்து துடிக்குது. ஆனால் வலியில்லை. அப்படியா?

அப்படியேதான் நெ.த

மீண்டும் மீண்டும் நன்றிகள் வாழ்க நலம் !

Nanjil Siva சொன்னது…

அருமை ... கவிதையில் அழகு கொஞ்சுகிறது...

Nanjil Siva சொன்னது…

ஆஹா ... கவிதை என்றால் இதுதான் கவிதை .... படிக்கும்போதே மனம் தாளம் போடுதுல்ல ... நன்று !!!>> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

சீராளன் சொன்னது…

மிக்க நன்றி

சீராளன் சொன்னது…

காலதாமதத்திற்கு மன்னிக்கவும் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்