சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Saturday 27 July 2019

அமிழ்தானவள் !



சித்தம் நுழைந்திடும் சோர்வைச் - சிறு 
சேலைத் தலைப்பினால் கழைவாள் 
நித்தம் உறங்கிடும் போதில்  - தலை 
நீவித் துயில்தர விளைவாள் !

வெல்லக் குவளையாய் இதழ்கள்  - இரு 
விழிகளும் அமிழ்தக்  குறள்கள் 
செல்லக் குழந்தையாய்ச்  சிரிப்பு  - இதம் 
சேர்க்கும் செந்தமிழ்   விரிப்பு    !

முல்லை மணந்தரும் பேச்சில் - நறு 
முகையென மலர்வாள்  மூச்சில் 
இல்லை எனும்சொல் அறியாள் - தினம் 
இறைமனம் காட்டும்  நெறியாள் !

எது..கை கொடுத்தும்  இசைப்பாள் - கவி 
எதுகை விடுத்தும்  இனிப்பாள் 
மதுகை இருந்தும் மறைப்பாள்  - மலர்   
மது..கை கொடுத்தும் முறைப்பாள்  !

புத்தகம் அவளது தங்கை - எனைப்  
பொலிய வைத்திடும் மங்கை 
வித்தகம் புரியும் விரலாள்  - இசை 
வியக்கும் மதுரக் குரலாள் !

பச்சைப் பார்வைகள் தந்தாள் - என் 
பருவத் தீபுக வந்தாள் 
இச்சைப் போர்வைகள் களைந்தாள் - மனம் 
இருக்கும் இடத்தில் நுழைந்தாள் !

வண்ணக் கனவுகள் இன்னும் - உயிர் 
வளர்த்துக் கவியாய்  மின்னும்   
எண்ணச் சிறகுகள்  அல்லும் - வலி  
இருந்தும் பறந்ததைச்  சொல்லும் !