சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 13 ஆகஸ்ட், 2014

வாழ்வில் கண்ட பாடங்கள் ..!


வாழ்வில் கண்ட பாடங்கள் 
வாட்டும் நினைவின் கீதங்கள் 
கேள்விகள் உள்ளே  நம்பிக்கை 
கேட்டு வாழ்ந்திட  துயரமில்லை !

                                  ( வாழ்வில் கண்ட பாடங்கள் .)


ஒளிவழி செல்லும் பார்வை 
ஒருமுறை நெஞ்சில் ஊர்ந்தால் 
மறுமுறை மனதின்  மடியை 
கருவறை ஆக்கிச் சேரும் 
நிலவினை தீண்டும் மேகம் 
நீரினால் நனைப்பதும் இல்லை
அலைகடல் போலே மனதும் 
ஆறுதல் கொள்வதும் இல்லை .!
                         
                     ( வாழ்வில் கண்ட பாடங்கள் .)

மூச்சுக் கூட கனவுகளை 
முழுக்க முழுக்க யாசிக்கும் 
பேச்சுக் கூட பிரிவுகளை 
போகப் போக யோசிக்கும் 
அச்சங்கள் ஆன்மா சேர்த்தால் 
அணைக்காதே வெற்றிப் படிகள் 
மிச்சங்கள் அன்பில் வைத்தால் 
இணைக்காதே இதய சுவர்கள் 

                           ( வாழ்வில் கண்ட பாடங்கள் .) 

இருக்கும் இடத்தில் இறைவனையும் 
எண்ணிப்பார்க்க முடியுமென்றால் 
தெருக்கள் கூட்டும் ஏழைகளை 
விருப்பத்தோடே காத்திடலாம் 
வடுக்கள் இல்லா வாழ்வென்று 
வாழ்ந்து சென்றார் யாருமில்லை 
தடைகள் தாண்டப் பழகிக்கொண்டால் 
விடைகள்  அறியா கேள்விகள் இல்லை !

                                             ( வாழ்வில் கண்ட பாடங்கள் .)

நேற்றுப் பூத்த பூக்கள் எல்லாம் 
இன்று சாட்சி சொல்வதில்லை 
என்றோ பட்ட வலிகள் மட்டும் 
இன்றும் சாட்சி சொல்லக்கூடும் 
ஆற்றல் அற்ற மனிதன் என்று 
ஆண்டவன் மண்ணில்  படைக்கவில்லை 
தேற்றிக் கொள்ள துணிவு கொண்டால் 
தேடல் என்றும் தொலைவில் இல்லை  ..!

                            ( வாழ்வில் கண்ட பாடங்கள் .)

பிரியமுடன் சீராளன் 

24 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
சீராளன் (அண்ணா)

நேற்றுப் பூத்த பூக்கள் எல்லாம்
இன்று சாட்சி சொல்வதில்லை
என்றோ பட்ட வலிகள் மட்டும்
இன்றும் சாட்சி சொல்லக்கூடும்

கவிதையில் கருத்துச்செறிவு கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பெயரில்லா சொன்னது…

''...வடுக்கள் இல்லா வாழ்வென்று
வாழ்ந்து சென்றார் யாருமில்லை
தடைகள் தாண்டப் பழகிக்கொண்டால்
விடைகள் அறியா கேள்விகள் இல்லை !..''
Arumai.....
Eniya vaalththu.
Vetha.Elangathilakam.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

//அச்சங்கள் ஆன்மா சேர்த்தால்//
//வடுக்கள் இல்லா வாழ்வென்று //
//என்றோ பட்ட வலிகள் மட்டும் //
//தேற்றிக் கொள்ள துணிவு கொண்டால் // மிக அருமை சகோதரரே.
ஒவ்வொரு வரியும் அருமை.. மிக ரசித்தேன். பகிர்விற்கு நன்றி

Iniya சொன்னது…

நிலவினை தீண்டும் மேகம்
நீரினால் நனைப்பதும் இல்லை
அலைகடல் போலே மனதும்
ஆறுதல் கொள்வதும் இல்லை .!

'வடுக்கள் இல்லா வாழ்வென்று
வாழ்ந்து சென்றார் யாருமில்லை
தடைகள் தாண்டப் பழகிக்கொண்டால்
விடைகள் அறியா கேள்விகள் இல்லை ! ஆஹா அனைத்தும் ரசித்தேன் அருமை கவிஞரே!

வாழ்வில் கண்ட பாடங்கள்
வளர்ச்சிக்காகத் தான் அன்றோ
தேற்றிக்கொள்ள துணிவுகொண்டால் உள்ளம் துவண்டு போகாது
துயரம் வற்றிப் போனாலே
தோல்வி கூட வெற்றி தானே....! தொடரவாழ்த்துக்கள்! கவிஞரே! தொடர்ந்து கவிதை படையுங்கள்.

இளமதி சொன்னது…

வணக்கம் சீராளா!

வாழ்க்கையாம் ஏட்டில் வருந்துயரும் பாடமே!
வீழ்ந்திடச் செய்யலாம் வேதனையை! - சூழ்ந்திடும்
துன்பம் தொலையத் தொடங்குக நற்பணி!
நன்மைகள் செய்வீரே நன்று!

வாழ்வியல் காட்டும் வழித்தடங்கள் என்றுமுனைச்
சூழ்ந்திடச் செய்யும் தொடர்ந்து!

வாழ்க்கை கற்றுத் தந்த, தருகின்ற பாடங்களை
வடித்திட்ட கவிதை மனதில் நிற்கின்றது சகோ!

வாழும்வரை போராடு! வழியுண்டு என்றே பாடு! ..:)

அருமை! வாழ்த்துக்கள் சகோ!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

--//வாழும்வரை போராடு! வழியுண்டு என்றே பாடு//
அருமை
அருமை
தம +1

Yarlpavanan சொன்னது…

சிறந்த பா வரிகள்
தொடருங்கள்

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

வாட்டும் நினைவுகளைக் கூட்டும் கவிதைகளை
நாட்டும் நறுங்கவி சீராளன்! - தீட்டும்
கருத்தெல்லாம் என்னைக் கவர்ந்தனவே! காதல்
குருத்தெல்லாம் ஓங்கும் கொழித்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் ரூபன் !


கருத்து முதலாய் கனிவாக தந்தீர்
விருப்போடு நெஞ்சம் விழைந்து !

மிக்க நன்றி
வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கோவைகவி !

பட்ட வலிகள் பகர்கின்றேன் பாட்டெடுத்து
தொட்டகுறை யோடத் தொலைந்து !

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் 2008rupan !

தேக்கம் அடையாத தேடல்கள் நான்கொள்ள
வாக்கிட்டான் தம்பி வரிந்து !

மிக்க நன்றி வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கிரேஸ் !

தேன்மதுர மண்ணின் திசைகாட்டி நீயாக
வான்கொட்ட வாழ்க வளர்ந்து !

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் இனியா !

வாழ்த்துக்கள் கண்டே வளர்ந்திடும் என்கவிகள்
தாழ்வுநிலை இன்றித் தளிர்த்து !

தங்கள் வாழ்த்தும் கருத்தும் என்னை மிக மகிழ வைக்கின்றன மிக்க நன்றி சகோ வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் சகோ இளமதி !

சூழும் வினைகள் சுடர்விடும் ஏக்கங்கள்
வாழும்நாள் வாட்டும் வருந்தாதே - மீழெளும்
நாட்கள் மிகவிரைவில் நான்பெறுவேன் அன்புள்ளக்
கோட்டைகள் யாவும் குடைந்து !

தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ
வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் !

பாட்டோடு வாழ்த்தும் பகர்ந்த கரந்தையார்
நாட்டம் இனித்தேன் நயந்து !

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கவிஞர் ஐயா !

காதல் குருத்தோங்கும் காப்பியங்கள் நற்தோன்றும்
சாதனைகள் ஓங்கும் சரித்திரத்தில் - வேதமாய்
நீங்கள் வெளியிடும் நற்பாக்கள் கற்றுவிட
பொங்கும் கவிகள் பொலிந்து !

தங்கள் வருகைக்கும் கருத்து பாவுக்கும்
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் யாழ்ப்பாவாணன் !

சிறந்தபா என்றும் சிதையாமல் வாழும்
நிறைந்த மனதில் நிலைத்து !

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி !

ஊமைக்கனவுகள் சொன்னது…

எதைத் தொட ...?
எதை விட .....?
சீராளன் .....
காரணப்பெயர்ப் பொருத்தம் கண்டு வியக்கிறேன்.
நல்லது அய்யா!
நன்றி

அம்பாளடியாள் சொன்னது…

ஓவொரு வரிகளிலும் உயிர்த் துடிப்பு மெய் சிலிர்க்க வைக்கின்றது
சகோதரா ! அருமை அருமை ! வாழ்க தமிழ் !

சிவகுமாரன் சொன்னது…

உங்கள் கவிதைகளைப் படித்ததும் மீண்டும் காதல் வெண்பாக்கள் எழுத ஆவல் பிறந்தது.
அத்தனையும் அருமை.

சீராளன்.வீ சொன்னது…

எதை தொட்டாலும் எதை விட்டாலும் உங்கள் கருத்துக்கள் மட்டும் போதும் ஐயா ஊமைக்கனவுகளே !

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

இலக்கணமும் இலக்கியமும் நிறைந்த கவி ஆக்கும் அம்பாள் அடியாளே
வணக்கம்

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் சிவகுமாரன் தங்கள் முதல் வருகைக்கு என் வந்தனங்கள்
உங்கள் குறள்பாக்கள் கண்டு வியந்தேன் என் வலைக்கு வந்து சொன்னதுபோல் காதல் பாக்கள் எழுதுங்கள் ஆவலுடன் இருக்கிறேன்

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்