சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Monday 25 August 2014

மீண்டுமோர் கனவு !அந்திபகல் சிந்தும்விழி சொந்தமொன்று நாடவிதி
                மந்தநிலை போக்கி விடுமோ -இல்லை
முந்தியிடி தந்தவலி சிந்தையிலே ஆடசதி  
               வெந்தணலில் வீழ்த்தி சுடுமோ !

பட்டகுறை விட்டகல கட்டிலிடை சிட்டுவர
               முட்டியொளி  மூச்சு தருமோ  - காதல்  
இட்டசிறை கட்டகல தொட்டிலிடை  மொட்டுவர
               பட்டுமொழி பேச்சு வருமோ!கூடிவிளை யாடியழும்  ஊடல்வலி அகல
              நாடிமனம் தேடும்கயல் மடியோ - மோகம்
மூடிமனை நாடியிளங் கூடல்வலி  முகிழ
             கோடிதனம் தேடும்செயல் முறையோ !

சிப்பியிலே முத்தொளிர சிந்தையிலே சீர்கள்விழ
             சொப்பனமும் சிந்து பாடுமோ  -  விழி
ஒப்பனைகள்  புத்தொளிர ஒத்திகையில்  போர்கள்எழ  
             முப்பொழுதும் நெஞ்சு வாடுமோ   !

வெட்டவெளி சுட்டவயல் நட்டவிதை மேலே
              சொட்டுதுளி  பட்டுவிட தளைக்கும் -மனம்
ஒட்டவழி விட்டகயல் இட்டவதை மேலே
              வட்டவிழி  முட்டிவிட  பிழைக்கும்  !

பிரியமுடன் சீராளன் 

21 comments:

Anonymous said...

கனவு மெய்ப்படுமோ?.. நல்ல வரிகள்.
இனிய வாழ்த்து.
Vetha.Elangathilakam.
( I wrote a poem about cancer.Please come and see in my w.site. Thank you)

சீராளன்.வீ said...

வணக்கம் கோவைக்கவி !

காதலிளங் காப்பியங்கள் காமுறவே நெஞ்சத்தில்
வேதனைகள் போக்கும் கனா !

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
வாழ்க வளமுடன்

அம்பாளடியாள் said...

மிக அருமையாக வடித்த நற் பாவரிகள் கண்டு வியந்தேன் !வாழ்த்துக்கள் சகோதரா .

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
செப்பிய வரிகளில் கவிஇரசம் சொட்டுகிறது ஐயனே.
சிந்திய வரிகளில் சிந்தை குளிர்ந்தது ஐயனே

நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஊமைக்கனவுகள் said...

அய்யா,
“துள்ளும்மொழி சொல்லும்வலி கொல்லும்மன மாற
முள்ளும்மலர் உள்ளம்தனை
வெல்லும் கவியூறும்“
நானும் இதுபோல் என்றோ முயன்ற
ஒரு சந்தம்!
பதிவிட்டுவிட்டு இங்கே வந்தால் எனக்கு முன்பே நீங்களும்...!
உங்களின் வருகையையும் கருத்தினையும் அப்பதிவினுக்கு வேண்டுகிறேன்.
தங்கள் வரவெதிர்பார்த்திருப்பேன்.

இளமதி said...

வணக்கம் சகோதரரே!

சிட்டெனவே வந்தஒரு சிந்தைகவர் சிலையோ?
பட்டெனவே தந்தஒரு சந்தமிகு கவியோ?
இட்டமொடு இங்குஒரு தந்தனன இசையோ?
விட்டகல முட்டிவிழி சிந்திடுதே முறையோ?

சீராளரே! உங்கள் சந்தக் கவிதையை என்னவெனச் சொல்ல!..
அருமையாக வந்திருக்கின்றது. ஈர்ப்பென்றால் இதுதான்!
என்னையும் இந்தப் பாடு படுத்திவிட்டது..:)
எழுதிப் பார்க்க விழைந்து ஈற்றடியில் சிக்கிக் கொண்டது.
இருப்பினும் தந்துள்ளேன். பிழை திருத்தம் ஐயா
வந்து பார்த்துத் தருவார்…:)

மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் சகோ!

த ம.3

இளமதி said...

சகோ!...
//பிழை திருத்தம் ஐயா
வந்து பார்த்துத் தருவார்//

இப்படிக் கூறியது எனது பாட்டிலுள்ள திருத்தத்தினை ஐயா வந்து பார்த்துத் தருவார்
என்பதாகும்...:)

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

Iniya said...

கனவுகள் நனவாக
உறவுகள் நிஜமாக-உன்
உள்ளமும் மகிழ்வாக
வாழ்ந்திட வேண்டும்
என்றும் வளமாக....!

அருமையான கவிதை வியக்கும் படியான பாவரிகள். பாடல் பாடவும் சூப்பராக இருக்கிறது.பதிவுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்...!

சீராளன்.வீ said...

வணக்கம் அம்பாள் அடியாள் !

கற்றிட நாளும் கனிந்துவரும் உள்ளத்தில்
நற்பாக்கள் நன்றே நயந்து !

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் ரூபன் !

சிந்தை குளிர்ந்திட செப்பியதை நீரசித்தாய்
எந்தன் கவிக்கே எழில் !

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் ஊமைக்கனவுகள் !

சிந்துக் கவியெனக்கு சீக்கிரமே வந்ததினால்
தந்துவிட்டேன் என்னை தகர்த்து !

ஹா ஹா ஹா அப்படியா நானும் இதை எழுதி ஒரு மாதம் ஆச்சு ..!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
பாவலரே வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ இளமதி !

வெண்பா உமக்கு விதவிதமா வந்திடுமே
எண்ணம் எடுத்து எழுதினால் - திண்ணமாய்
சிந்து திகட்டிட செய்திடுவாய் இப்புவியில்
முந்திநீ வைப்பாய் முடி !

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ
வாழ்க வளமுடன்

நீங்கள் எழுதிட்டு ஐயாவை பார்க்க சொல்றீங்க நன்று

சீராளன்.வீ said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் !

ஒருசொல் எனிலும் உயர்வாய் பகன்றீர்
திருவாய் அருளிய தேன் !

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் இனியா !

எண்ணம் இனிக்க எழுதுகிறேன் நாள்தோறும்
வண்ணமயில் வாசம் வடித்து !

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் அழகிய கவிதைக்கும் மிக்க நன்றி சகோ
வாழ்க வளமுடன்

http://bharathidasanfrance.blogspot.com/ said...
This comment has been removed by the author.
http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

சந்தமிடும் சிந்தழகை எந்தமுளம் சொந்தமிட
முந்திவரும் தந்ததன தாளம் போட்டு! - பாக்கள்
வந்தருளும் செந்தமிழை எந்தநிலை வந்திடினும்
சிந்தைதனில் கொண்டிடுக மானம் மீட்டு!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


இவ்வகைப் பாக்களை வண்ணம் என்று அழைப்பா்

சந்தப் பாக்களுக்குாிய இலக்கணத்தை வண்ணத்தில் வைத்தால் ஓசை தட்டும்!

காலம் வருகின்ற பொழுது வண்ணத்தை விளக்கி எழுதுகிறேன்

கூவிளங்கனி - கூவிளங்கனி - கூவிளங்கனி - கூவிளங்கனி - ...... என்று விருத்தப்பாவியல் உரைக்கும்படி பாடுதல் சந்தப்பாக்கள்.

தானதத்த - தானதன - தாதந்த - தத்தந்த - தந்ததன ஆகிய பலவகையான சந்தங்களில் அமைவது வண்ணப் பாட்டாகும். திருப்புகழ் நுால் வண்ணத்தால் பாடப்பட்டது. படித்துணா்க!

KILLERGEE Devakottai said...


கவிதை அருமை...
இன்றைய 30.08.2014 வலைச்சரத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
நேரமிருப்பின் கவிதைப்போட்டிக்கு அனுப்பிய எமது கவிதையை காண்க...

இளமதி said...

வணக்கம் சீராளன்!

எனது வலைப்பூவில் விருது ஒன்றை உங்களுக்குப் பகிர்ந்துள்ளேன்!

இணைப்பு http://ilayanila16.blogspot.de/2014/09/blog-post_16.html

வந்து பெற்றுக் கொள்ளுங்கள்!
மிக்க நன்றி!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!

என் வலைத்தளம் வந்து கருத்திட்டு என்னை மேலும் எழுத ஊக்கபடுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! சகோதரர் திரு. கில்லர்ஜி எனக்கு கொடுத்த “பல்திறப் புலமை விருதை” உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்..! பெற்றுக் கொள்வதற்கு நன்றிகள்..

வணக்கத்துடன்,
கமலா ஹரிஹரன்..