சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 14 September 2022

சொப்பன விழிகள் !
காரிகையா, காரெழிலா, காட்டுமல்லி வாசனையா?

கற்பனைகள் உறங்குநிலை போச்சு! -விழி

தூரிகையா, ஓவியமா  தோகையிவள் நாணுகையில் 

சொப்பனத்தில் கரையுதென்றன் மூச்சு!


ஏதுமொழி, ஏதெழுத்து ,என்றறியா நெஞ்சமதில் 

ஏடுகளைத் தேடவைத்த கோதை  !- மறை

ஓதுமொழி யாயிருக்கும் ஒண்டமிழைப் பாடவைத்து 

ஓசைநயம் ஊட்டிவிட்ட மேதை!


வாழுமொரு நாளிகையும் வாழ்த்துபல கூறுமடி

வஞ்சியெழில் தந்தயிறை தேடி!- வலி

சூழுமொரு வேளையிலும் சகந்தமிக வீசுமடி 

சொல்லினிய உன்பெயரைச் சூடி! 


பதவுரைகள் அற்றகவிப் பார்வையொன்று போதுமடி

பயனறிய  ஏதுமில்லை பாரில்!- இனிப்

புதுமொழிகள் கற்றுமென்ன புலமைகளைத் தந்துவிடும் 

புத்துயிராய் நீயிருக்கும்  போதில்!


கோடைமழைப் பெருக்காகக் கோபத்தில் நீ...நடக்கக் 

கொலுசுகளும் மோனித்த காட்சி!-குளிர்

வாடைதொட்டு  மொட்டுகளை வம்புசெய்த போதுமவை 

வாய்மூடி நின்றகதை யாச்சு!


காற்றினிசை போலினிக்கும் கவிதைமொழி கற்றவனைக் 

களவாடிச் சென்றதொரு மேகம்!- இவன்

தோற்றமினி இங்கில்லை தொலைந்தயிடம் பால்வெளிதான்

துகள்களெனப் பிரிந்திருக்கும் தேகம்!

 

பாவலர் சீராளன் 

No comments: