சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

செவ்வாய், 3 நவம்பர், 2015

கவிதையவள் கவிஞனிவன் !

வண்டமிழ் வதனம் காட்ட
       வகைவகை யாகப் பாக்கள்
கொண்டலைப் போலே நெஞ்சில்
      கொட்டிடும் அவளின் ஆற்றல்
அண்டரே மயங்கிப் போகும்
      அழகொளிர் அங்கம் தன்னில்
சுண்டிடும் விழிகள் கண்டேன்
      சுயநினை விழந்து போனேன்!


மழலையாய்க்  கொஞ்சிப் பேசி
      மனமுறுங் காயம் போக்கத் 
தழுவிய கரத்தின் மென்மை
      தந்திட உணர்ச்சிப்  பாதை 
சுழலுமென் குருதி ஓட்டம்
      சுரிதகம் பாடக் கேட்டே
உழலுமென் உயிரின் ஓசை 
      ஒவ்வொரு உலகும்  கேட்கும் !

பெண்ணிலேழ் அறிவைக் கொண்ட
      பிறப்பவள் என்றே சொல்லக்
கண்ணிலேழ் சுரத்தின்  கீதம்
      கருவிடக் காதல் ஆசை
விண்ணிலேழ் நிறத்தில் கோலம்
       விதைத்திடும் வான வில்லாய்
மண்ணிலேழ் அதிச யத்தை
       மனத்திலே ஒளிரச் செய்தாள் !

பெண்ணினம் பெருமை கொள்ளப்
      பிறந்தவள் அவளே என்னும்
எண்ணமே எவர்க்கும் நாவில்
      எழுந்திட வாழும் இந்தத் 
தண்ணிலா நெஞ்சத் தாளைத் 
       தமிழுடல் வேகும் போதும்  
மண்ணிலே வாசம் கொள்ள
       மாகவி உரைத்துப்  போவேன்!

தன்னையே தாங்கும் மண்ணைத்
       தருவிலை வளமே ஆக்கும்
பொன்னையே சுட்டும் தீ..தான்
       பொழிலுற  வகையும் செய்யும்!
என்னையே உருகச்  செய்தாய்!
       எழில்தமிழ் பருகச் செய்தாய்!
கன்னலே! கனியே! உன்னால்
       கவிஞனாய் ஆகிப் போனேன் !
               
                     **************

             பிரியமுடன் சீராளன் 

38 கருத்துகள்:

இளமதி சொன்னது…

மனமெலாம் நல்ல மகிழ்வினைத் தந்தே
தினம்பாட வைத்தாளோ தேர்ந்து!

அருமையான விருத்தம் சகோதரரே!
சீர்களின் சந்தம் சிறப்பாக நர்தனம் புரிகிறது!
மிகமிகச் சிறப்பு! வாழ்த்துக்கள்!

த ம 2

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை அருமை நண்பரே
தம +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருமையான கவிதை. மனதில் ஆழப்பதிந்தது. நன்றி.

Yaathoramani.blogspot.com சொன்னது…

கன்னல் அவளால்
கவிஞன் ஆகிப் போனதால்
கவிதையும் அதுவாகிப் போகுது
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்று...

sury siva சொன்னது…

சீர்களை அளந்து போட்டு இருக்கிறீர்களே !!
சீராளா ! நுமக்கு நான் என்ன
சீர் செய்ய முடியும்.
சிறப்பாக பாடிடலாம்.
பாடவா ?

சுப்பு தாத்தா.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா அருமை நண்பரே!

KILLERGEE Devakottai சொன்னது…


வணக்கம் கவிஞரே கவிதையை பாராட்ட தகுதியின்றி ரசித்தேன்,,,, தேன்.
தமிழ் மணம் 6

சென்னை பித்தன் சொன்னது…

சிறப்பான கவிதை

Unknown சொன்னது…

கன்னலே! கனியே! உன்னால்
கவிஞனாய் ஆகிப் போனேன் !
கவிஞனின் ஆதிமூலம் இதுதானா :)

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

உயிருள் கலந்தவுற வெண்ணிக் குளிர்ந்த
தயிருள் கலந்ததமிழ் தந்தாய்! - குயிலாக
உன்றன் வலைகூவும்! இன்பக் கலைமேவும்!
என்றும் தமிழை இசைத்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

Yarlpavanan சொன்னது…

இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!

யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/

மீரா செல்வக்குமார் சொன்னது…

என்னையே உருகச் செய்தாய்!
எழில்தமிழ் பருகச் செய்தாய்!#அருமை...வாசிக்க வாசிக்க இனிமை.....இனி வருவேன்

சீராளன் சொன்னது…

வணக்கம் சகோ இளமதி !
முதல் முறையாக வந்து முத்தான குறளில் கருத்திட்டேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

சீராளன் சொன்னது…

வணக்கம் கரந்தையாரே !

தங்கள் இனிய கருத்திற்கும் தமிழ்மண வாக்கிற்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !

சீராளன் சொன்னது…

வணக்கம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா !

தங்கள் இனிய வரவும் கருத்தும் கண்டு நெஞ்சம் மகிழ்கிறேன்
வாழ்க வளமுடன்

சீராளன் சொன்னது…

மிக்க நன்றி ரமணி ஐயா !

அழகான கருத்திட்டு ஊக்கமும் வாழ்த்தும் இனிதாகத் தந்தீர் மிக்க நன்றி
வாழ்க வளமுடன்

சீராளன் சொன்னது…

மிக்க நன்றி வலைச்சித்தரே !
தங்கள் வரவுக்கும் இனிய கருத்திற்கும்
வாழ்க வளமுடன் !

சீராளன் சொன்னது…

வணக்கம் துளசிதரன் ஐயா !

அன்பான கருத்திட்டு அகமகிழ வைத்தீர்கள் மிக்க நன்றி
வாழ்க வளமுடன் !

சீராளன் சொன்னது…

வணக்கம் கில்லர் ஜி !

தேனாய்ப் பருகிய கவிதைக்கு தித்திக்க கருத்திட்டீர் மிக்க நன்றி தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் வாழ்க வளமுடன்

சீராளன் சொன்னது…

வணக்கம் சென்னைப் பித்தன் ஐயா !

தங்கள் வரவும் கருத்தும் கண்டு நெஞ்சம் நிறைகிறேன்
வாழ்க வளமுடன் !

சீராளன் சொன்னது…

வணக்கம் பகவான் ஜி !

ஆமா ஆமா ஆதிமூலமே அதுதான் அறிந்து கொண்டீர்களா ம்ம் மிக்க மகிழ்ச்சி
தங்கள் இனிய கருத்திற்கு வாழ்க வளமுடன்

சீராளன் சொன்னது…

வணக்கம் கவிஞர் ஐயா !

அன்பைப் பெருக்கி அமுதப்பா தந்தென்னை
இன்பூட்டும் உங்கள் எழுத்து !

தங்கள் வழிகாட்டலிலும் கற்பித்தலிலும் என்றும் இனிய பாக்கள் தருவேன்
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா தங்கள் இனிய வரவுக்கும்
இனிய வெண்பாக் கருத்துக்கும் வாழ்க வளமுடன்

சீராளன் சொன்னது…

வணக்கம் ஜீவலிங்கம் ஐயா !

தங்களுக்கும் இனிய நாட்களாகட்டும் என்றும் என்றென்றும்
அன்பான வாழ்த்திற்கு அகம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !

சீராளன் சொன்னது…

வணக்கம் நான் ஒன்று சொல்வேன் !

முதன் முதலாய் என் வலைத்தளம் வரும் உங்களை நெஞ்சார வரவேற்கிறேன்
தங்கள் இனிய கருத்திற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தங்கள் தொடர் வருகையினையே
எதிர்பார்க்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் !

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
சீர்

அழகு மங்கைக்கு
ஆபரணம் போட்டால் போல்
இரசனையில் பட்டுத்தெறிக்கும் வரிகள்
மின்னல் வெட்டுகிறது.
அழகு தமிழில் செப்பிய
வரிகள் என் சிந்தை குளிர்ந்தது.

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சீர்.. தாமத்துக்கு மன்னியுங்கள்.. த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தனிமரம் சொன்னது…

அருமையான கவிதை வார்த்தை ஜாலம் ரசித்தேன்!

சீராளன் சொன்னது…

வணக்கம் ரூபன் !

தங்கள் இனிய ரசனைக்கும் இனிக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ஆமா எதுக்கு மன்னிப்பு எல்லாம் நேரம் கிடைக்கும் போதுதானே பார்க்க முடியும் அதற்கு பெரிய வார்த்தைகள் எல்லாம் வேண்டாமே ரூபன் ! தாங்கள் வந்ததே மகிழ்ச்சி வாழ்க வளமுடன் !

சீராளன் சொன்னது…

வணக்கம் தனிமரம் !

தங்கள் ரசனைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்

balaamagi சொன்னது…

தாமதமான வருகை,
அருமையான கவிதை, வாழ்த்துக்கள்.

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் பேராசிரியரே !

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்

ஊமைக்கனவுகள் சொன்னது…

ஆஹா.......

அறுசீர் விருத்தத்தில் காதல் உறுசீர் அழகு...!!

மிகத் தாமதமாக வருகிறேன் பாவலரே..!!

காதலின் அழகைத் தங்கள் மொழியில் கேட்கத் தமிழ் அழகாகிக் கொண்டே போகிறது.

தொடர்கிறேன்.

நன்றி.

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் பாவலரே !

காலம் தாழ்த்தி வந்தாலும் தங்கள் கருத்துக்கு என்று ஒரு தனி அழகுண்டு அது என் கவிதைக்கு கிடைப்பதே எனக்கு பேரானந்தம் மிக்க நன்றி பாவலரே ! தங்கள் வரவுக்கும் இனிய கருத்திற்கும் வாழ்க வளமுடன்

Iniya சொன்னது…

வணக்கம் பாவலரே!

என்னமா அசத்துகிறீர்கள். சீராளன் என்ற பெயர் கொண்டதால் சீருக்கு குறைவில்லை. சீரை - ஆள்பவன் அல்லவா இல்ல ஹா ஹா ... ம்..ம் காலம் தாழ்த்தி விட்டேனே என்று கவலையாக உள்ளது. என்ன இனிமையான சந்தம் வார்த்தைப் பிரயோகங்கள் பொருள் wow .....

ஏதோ என்னால முடிந்தது பார்த்து சிரிக்காதீர்கள் ok வா.....

கண்ணிலே காதல் வைத்து
- -கனித்தமிழ் கற்று னர்ந்தாய்
புண்ணென ஆன பின்னும்
- -புகழ்கிறாய் போற்றி என்றும்
பண்ணிலே வைத்து நீயும்
- -பலவகைப் பாக்கள் சூடி
எண்ணமும் இனிக்க வைத்து
- -ஏகிறாய் வாழ்வை என்றும்


மேலும் ஆற்றல் பெருக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சீராளன் சொன்னது…

வணக்கம் வாங்க வாங்க !

தாமதமாத் தந்தாலும் தங்கத் தட்டில் இனிப்புத் தந்ததுபோல் இருக்கு தங்கள் கருத்துப் பாவும் வாழ்த்தும்


விடிந்ததைக் கண்டு நாளும்
....விழிமடல் திறக்கும் பண்பாய்
முடிந்ததைச் செய்தேன் என்று
....முழுமனங் காட்டி நின்றாய்
வடிந்ததை மறைத்துக் கண்கள்
....வகையுளி செய்தும் காதல்
இடிந்ததை எடுத்துக் காட்டும்
.....இயல்பிது என்று கொள்வீர் !

இனிய வரவுக்கும் இனிக்கும் கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !

Surya சொன்னது…

படங்கள் பிரமாதமாக தேர்ந்தெடுக்கிறீங்க..வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

மிகமிகச் சிறப்பு! வாழ்த்துக்கள்