சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 16 December 2015

உயிரோவியம்!ஆருமறி யாமலுயிர் ஆடும் வலியூட்டும்
சாருமலர்ப்  பூங்குழலி  சாய்ந்துவிடத்  - தீருமிதன்
பாரமொரு நாளில் பறந்திருக்கும் ! பாவையவள்
நேரமொரு நீள்கனவில் நெஞ்சு !

இதழ்முகிழும் ரோசாவோ! இன்றமிழோ! மின்னும்
நுதலழகும் நூற்பாவோ? கன்னம்   - புதுக்கவிதைப்
பூவனமோ? பொய்கைமலர்ப் பூந்தாதோ? என்னவளின் 
ஓவியமும் கொள்ளும் உயிர் !


உன்னினைவே உள்ளத்தில் ஓங்கி ஒலித்திருக்கும்!
புன்னைவனப் பூவாகப் பூத்திருக்கும்!  - சின்னவளே!
முன்னம் இதுபோல மூச்சில் இனித்ததில்லை
கன்னலிதழ் தந்த களிப்பு!

என்னடா இவ்வாழ்க்கை என்றேங்கிச் சோர்வடையப் 
பொன்னடா நீயும் புலம்பாதே - என்றுரைத்த
அன்னமே! பெண்ணே! அணிநடையே! வெண்பாட்டின்
கன்னலே! நீயென் கனி!

சின்னதாய்க் கோபம் சிரிப்பில் மறைத்திருப்பாய்!
முன்னதாய்ப் பேசி முறுவலிப்பாய்  - என்னதான்
என்னையிகழ்ந் தாலும்  எழிலரசி நீயென்றன்
முன்னைப் பயனின் மொழி!

சிந்தை நிறைந்துயிர் சேர்ந்திடு மோர்கவி
விந்தை புனைகிறேன்  வேர்விடும் - முந்திய
எந்திர  நாட்களின்  ஏக்கமுடன் என்னுளம் 
நொந்திடும் நோயால் நொடிந்து

பிரியமுடன் சீராளன் 

20 comments:

அம்பாளடியாள் said...


அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோதரா !

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ !

தங்கள் முதல்வருகைக்கு என் வந்தனங்கள்
அன்பான வாழ்த்துக் கருத்துரைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
அருமை
தம =1

shyamala raajasekar said...

அழகு!

Unknown said...

உயிரைப் பறிக்கும் உயிரோவியமா இது :)

ஊமைக்கனவுகள் said...

வணக்கம் பாவலரே!

பூதங்கள் ஐந்தும் புதைத்தவளைப் பாடுகின்ற
நாதத்தில் வெண்பா நடையழகில் - காதலின்‘உம்
கீதத்தில் வெல்லும் கவியழகில் வீழாளோ
பாதத்தில் வந்தந்தப் பெண்.

இனிமையான வெண்பாக்கள் சட்டென முடிந்ததுதான் துயர்.

தொடருங்கள் பாவலரே!

த ம

நன்றி.

Iniya said...

நெஞ்சைத் துளைக்கும் நினைவால் கவிதைகளை
துஞ்சாமல் ஆக்கிச் சொரிகின்றாய் - வஞ்சியவள்
மேனி அழகெண்ணி வேகாதே உள்ளுறைந்து
தேனீபோல் கொட்டும் தினம்!

உயிரோவியம் உருக்குலைக்காமல் இருக்கட்டும் சீர். கரைக்கும் கவிவரிகள் தான் ஆனாலும் கற்கண்டுக் கவிகள். சொல்வன்மை காண மகிழ்வே. மேலும் மிளிர என் வாழ்த்துக்கள் ...!

KILLERGEE Devakottai said...

உன்னினைவே உள்ளத்தில் ஓங்கி ஒலித்திருக்கும்! புன்னைவனப் பூவாகப் பூத்திருக்கும்! - சின்னவளே! முன்னம் இதுபோல மூச்சில் இனித்ததில்லை கன்னலிதழ் தந்த களிப்பு!

மிகவும் ரசித்தேன் பாவலரே...
தமிழ் மணம் 6

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சீர்
ஒவ்வொரு வரிகளும் இரசனை மிக்க வரிகள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசித்துப்படித்தேன். வாழ்த்துகள்.

Yarlpavanan said...


"சின்னதாய்க் கோபம் சிரிப்பில் மறைத்திருப்பாய்!
முன்னதாய்ப் பேசி முறுவலிப்பாய் - என்னதான்
என்னையிகழ்ந் தாலும் எழிலரசி நீயென்றன்
முன்னைப் பயனின் மொழி!" என்ற அடிகள்
எனக்குப் பிடித்திருக்கிறது!
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்

http://www.ypvnpubs.com/

balaamagi said...

அருமையான கவி வரிகள் பாவலரே,

Thulasidharan V Thillaiakathu said...

யப்பா என்ன அருமையான படைப்பு!! வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

உயிரோவியம் தந்த
கவியோவியம்
அருமை அற்புதம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Krishna Ravi said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

யதார்த்தமாய் உள்ளது! அருமை! அருமை நண்பரே!

http://www.friendshipworld2016.com/

Yarlpavanan said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

மனோ சாமிநாதன் said...//நாவை அடக்கியே நற்சொல் உரைத்திடு நாடும் உனையணைக்கும்!
கோடு போட்டொரு கொள்கை வகுத்திடு கொஞ்சிக் குலமணைக்கும்!//

உங்களின் அருமையான கவிதை வரிகளுடன் புத்தாண்டு இனிதே பிறக்கட்டும்!!!
அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே,

கவிதை அருமையாக உள்ளது.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந்த புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Unknown said...

புதிய‌ தமிழன் திரட்டி (http://www.tamiln.in)