சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 27 ஜனவரி, 2016

குருவருள் பதிற்றந்தாதி !ஓடித் திரிந்த உணர்வுகளை ஒன்றாக்கிப்
பாடிக் களிக்கப் பகலிரவாய்ப் - பாடங்கள்
நாடிக் கொடுத்திட்ட நற்குருவுக் கோர்புகழைத் 
தேடிக் கொடுப்பேன் தினம்!


1. கற்றுப் பயனடையக் காத்திருக்கும் எல்லோர்க்கும்
    பற்றுடனே பாடம் பயில்விக்கும் - நற்கவிஞர்!
    என்னுள் கவியும் இருப்பதைக் கண்டுணர்ந்து 
    நன்றே'கற் பித்தார் நயந்து!


2. நயந்தே'என் ஆற்றல் நலமுறவே நாளும்
    வியன்றமிழ் என்னுள் விளைத்தார்! - பயங்கொள்
    இடத்தில் பரிவோ[டு] எனையணைத்து, நெஞ்சில்
    திடங்கொள்ள வைத்தார் தெளிவு!

3. தெளிவாய் இலக்கணத்தைத் தித்திக்கும் வண்ணம்
    அளித்துப் பெயர்தந்த அன்பர்! - ஒளிரும் 
    தமிழறிவால் ஓங்கும் தமிழ்த்தொண்டர்! அத்தன் 
    அமிழ்தெனக் கொண்டார் அகம் !

4, அகத்துள் அழகொளிரும்! அன்புநிறைந் தோங்கும்!
    இகத்தின் இறையுணர்த்தும் துாயர்! - முகத்தின்
    மலர்வில் முகிழ்ந்திருக்கும் முத்தமிழ் வாசம்! 
    வலவன் அளித்த வரம்!

5. வரமொன்று பெற்றார்! வளர்தமிழ்த் தாயின் 
    கரமென்றும் ஆனார்! கடமை! - உரமிட்டு
    மன்றம் வளர்த்தார்! மறையெல்லாம் கற்பித்தார்!
    என்றும் எழுத்தாணி ஏற்று!

6. ஏற்றம் அளித்திடுவார்! இன்றமிழ்ப் பாவலர்க்குப் 
    போற்றும் புலமை புகட்டிடுவார்! - ஆற்றல்
    செறிந்த கவியரசைச் சேர்ந்தடைந்தேன்! நல்ல
    நெறிகளைக் கற்கும்என் நெஞ்சு!

7. நெஞ்சில் கனவுகளை நித்தம் சுமப்போர்க்கும்
    அஞ்சாமல் கல்வி அளித்திடுவார்! - விஞ்சையனைத்
    தஞ்சம் அடைந்தே தகைமை வளர்த்திடுவோம்
    கொஞ்சும் கவிகள் கொடுத்து!

8. கொடுத்தும் குறைவுதனைக் கொள்ளாத கல்வி
    கொடுத்துக் களிப்பார் குழுவில் - விடுப்பின்றிப் 
    பற்றுடன் கற்றுவரும் பாட்டரசர் மாணவரைப் 
    பொற்புடன் போற்றும் புவி!

9. புவியைப் புரட்டும் புலமையைத் தந்து 
    கவியை வளர்க்கும் கவிஞர்! - செவியுள்
    இனிக்கும் செழுந்தமிழை ஈந்திடுவார்! பாரில் 
    தனித்தமிழ் செய்த தவம்!

10தவமொளிர் நெஞ்சும் தமிழொலிர் வாயும் 
    உவந்தளிக்கும் கையும் உடையார்! - கவிமனமே! 
    சொல்லாண்மை மேவிச் சுடர்த்தமிழ் பாடிடுவாய்
    வில்லாளன் வேகத்தில் கற்று

பிரியமுடன் சீராளன் 

21 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

Coming Again

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி ஜி வாருங்கள் காத்திருக்கிறேன் !

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
சீர்

சொல்லிய வரிகளை கண்டு மகிழ்ந்தது மனம்
நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் சீர்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் ரூபன் !

தங்கள் இனிய வாழ்த்துக்கும் கருத்துக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ரூபன் வாழ்க வளமுடன் !

அம்பாளடியாள் சொன்னது…

வணக்கம் !
வாழ்த்துக்கள் சகோ ! அருமையான
பதிற்றந்தாதி கண்டு மகிழ்ந்தேன் மென்மேலும் தங்களின் இப் புலமை ஓங்கட்டும் .

பெயரில்லா சொன்னது…

மிக நன்று
இனிய வாழ்த்துகள்
(வேதாவின் வலை)

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் சகோ அம்பாள் !

தங்கள் வரவுக்கும் இனிய வாழ்த்துக்கும் கருத்துக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கோவைக் கவி !

தங்கள் வரவுக்கும் இனிய வாழ்த்துக்கும் கருத்துக்கும்
நெஞ்சம் நிரந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !

Iniya சொன்னது…

பதிற்றந்தாதி மிக மிக அழகு சீர்! உம்புலமை மேலும் ஓங்கட்டும் பாவலரே !


சொல்லாண்மை கொண்டுநீ சொக்கக் கவிபடைப்பாய்
இல்லாண்மை ஏதினியிங் கெல்லாமும் - நல்வழிக்கே
பாட்டரசர் பற்றோடு பாடம் எடுத்தவிதம்
சூட்டும் புகழைச் சுடர்ந்து !

வாழ்க வளமுடன் ...!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பதிற்றந்தாதி படித்து மகிழ்ந்தேன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் அருமை... வாழ்க நலம்...

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் பாவலரே.... நேற்று இரவே செல்லில் படித்து விட்டேன் கருத்துரை இட முடியவில்லை பொறுத்தருள்க...

குருவருள் பதிற்றந்தாதி படித்து மகிழ்ந்தேன் கவிஞரே
பாராட்ட தகுதி இல்லை வாழ்த்துகள் தொடரட்டும்

தமிழ் மணம் 5

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அந்தாதி ரசித்தேன். வாழ்த்துகள்.

balaamagi சொன்னது…

ஆஹா அருமை அருமை பாவலரே, அந்தாதியில் அழகாக கவி வடித்துள்ளீர், வாழ்த்துக்கள்,

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் இனியா !

அழகிய வெண்பாவில் அமிர்தமாய்க் கருத்துரைத்தீர் அகமகிழ்கிறேன்
தங்கள் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கரந்தை மைந்தா !

தங்கள் வரவு கண்டு மகிழ்ந்தேன் மிக்க மகிழ்ச்சி தங்கள் இனிய வாழ்த்திற்கு வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வாருங்கள் வலைச் சித்தரே !

தங்கள் வருகை நல்வரவாகட்டும் இனிய கருத்துக்கும் வாழ்த்திற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் கில்லர் ஜி !

தங்கள் முதல் வரவிலே அறிந்து கொண்டேன்
தாங்கள் படித்து முடித்து இருப்பீர்கள் என்று

தங்கள் அன்புக்கு நன்றி ஜி
தங்கள் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி வாழ்க வளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் முனைவர் ஐயா !

தங்கள் வருகையே எனக்கு மகிழ்ச்சி வாழ்த்துகளும் நன்றிகளும் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ சொன்னது…

வணக்கம் பேராசிரியரே !

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குருவருள் பதிற்றந்தாதி அருமை சீராளன். மிகவும் ரசித்தோம்! குருவருள் பெற்றிடுவீர் வாழ்த்துகள்