சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Sunday 21 June 2015

மௌனம் கலைத்தவள் ..!




விழிகள் எழுதும் விதியின் சரிதம் 
வெற்றி கொண்டது - உன் 
மொழிகள் உதிரும் மூச்சின் இதழ்கள் 
மௌனம் கலைத்தது !

எதுகை மோனை இருந்தும் கவிதை 
எழிலை இழந்தது - உன் 
புதுமை கொண்ட பதிலின் பின்னே 
பூக்கள் படர்ந்தது !


வேத னைக்குத் தூது செல்ல 
வெட்கம் மறுத்தது - விதிச் 
சோத னையின் காலம் போகச் 
சோகம் அறுந்தது  !

வாரம் இரண்டை வலிகள் மேவி 
வாழ்வைச்  சுட்டது - உயிர் 
ஓரம் வந்து உவகை தந்தாய் 
ஓலம் விட்டது !

பிரிவைக் கூடப் பிரியச் செய்யும் 
பிரியம் நீயடி - உன்றன் 
சிரிக்கும் இதழும் செந்தேன் கமழும் 
செம்மல்  பூவடி !

இனிக்கும் வார்த்தை எடுத்துச்  சொன்னாய் 
இதயம் நிறைந்தது  - என்  
தனிமைச் சிறையின் விடுத லைக்கும் 
தடைகள்  மறைந்தது  !

பிரியமுடன் சீராளன் 

36 comments:

KILLERGEE Devakottai said...


இனிக்கும் வார்த்தை எடுத்துச் சொன்னாய் இதயம் நிறைந்தது - என் தனிமைச் சிறையின் விடுதலைக்கும் தடைகள் மறைந்தது

மிகவும் அருமையான வரிகள் கவிஞரே.... வாழ்த்துகள்
தமிழ் மணம் 1

சீராளன்.வீ said...

வணக்கம் கில்லர் ஜி !

ஆஹா முதல் ஆளாய் வந்து முத்தான கருத்துச் சொன்னீர்கள் மிக்க நன்றி
பதிவிட்டு இன்னும் ஐந்து நிமிடமும் கூட ஆகலையே .......?

என்னென்று சொல்லி எடுத்துரைப்பேன் நன்றிதனை
பொன்னான நட்பைப் புகழ்ந்து !

வாழ்க வளமுடன்

UmayalGayathri said...

முன்னர் வந்து இரண்டு மூன்று முறை கருத்துரையிட முயன்றேன். ஆனால் திறக்கவில்லை...அப்பாடா...இன்று முயன்றதும் திறந்து விட்டது...

அழகாய் வடிக்கிறீர்கள் கவிதைகளை...வாழ்த்துக்கள் சகோ

நன்றி

அம்பாளடியாள் said...

வணக்கம் !
சொற்சுவையும் பொருட் சுவையும் ஒருங்கே அமைந்த அருமையான கவிதை வாழ்த்துக்கள் என் அருமைக் கவிஞர் சகோதரா !

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ காயத்திரி !

என் வலைப்பூவில் உள்நுழைய அவ்வளவு கடினமாகவா இருக்கிறது கூடுதல் அனிமேசன் படங்கள் இருப்பதால் அவ்வாறு இருக்கும் என்று நினைக்கிறேன் எல்லாம் குறைத்துக் கொண்டு வருகிறேன் விரைவில் இலகுவாய் உள்நுழையலாம் சரியா !

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ அம்பாள் அடியாள் !

அருமைக் கவிஞரென அன்பொழுகச் சொன்னீர்
உருகுதே எந்தன் உயிரும் - பெருமையிது
தந்தவரைப் போற்றித் துதித்திருப்பேன்! எந்நாளும்
செந்தமிழில் சீர்கள் தொடுத்து !

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ
அருமைக் கவி சகோதரா என்றாலே போதுமே !

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சீர்

கவிதையில் ஆயிரம் காதல் வார்த்தைகள் புரையோடிள்ளது
படித்த போது மனம் மகிழ்ந்தது எல்லாம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

தனிமைச் சிறையின் விடுத லைக்கும் தடைகள் மறைந்தது !

பிறகென்ன நண்பரே
வாழ்த்துக்கள்
தம +1

சீராளன் said...

வணக்கம் ரூபன் !

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

ஆயிரம் அர்த்தம் கவிதைதான் சொல்லுது நானில்லை ஹா ஹா ஹா ஒரு கற்பனை
எனக்குள் நானே உருவாக்கியவளும் அவளோடு பேசாமல் இருந்த நாட்கள் இப்போ பேசிய போது இருக்கும் உணர்வுகள் எல்லாமே கவிதை ஆக்கினேன் ஆனால் யாவும் கற்பனை

நம்பிட்டீங்களா ? அதேதான்

சீராளன் said...

வணக்கம் கரந்தை மகனே !

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !

யாவும் கற்பனை நண்பரே
இவ்வாறு நடந்தால் எவ்வாறாகும் என்பதின் உயிர்பிறப்பு இக்கவிதை
அவ்வளவே மீண்டும் நன்றிகள் வாழ்க வளமுடன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தனிமைக்கு விடுதலை தந்த கவிதையை ரசித்தேன். அருமை.

Iniya said...

கவிஞரே நலம் தானே?
என்ன இப்படி எல்லாம் கற்பனை வருகிறதா ம்..ம்.ம் எப்படி எல்லாம் அசத்திறீங்கய்யா... அசத்துங்க அசத்துங்க.

மௌனம் கலைய மனம்பொங்க இசைத்தாயோ
கானம் இனிமை யுடன்!

போற்றிப் புகழஒரு பொன்னான நாள்இன்று
ஊற்றாய் உருகவே அன்பு!

பிரிவுதான் அன்பைப் புரியவைக்கும்
பரிவு கொள்ள பாசம் பெருகும்
உரிமைகளால் உறவு வலுக்கும்... இல்லையா ம்..ம்.ம் அற்புதமா ஒன்று போட்டாச்சு. ஐயா இனி எப்போ அடுத்த பதிவு போடுவதாக உத்தேசம். ம்..ம்.ம் சரி பார்க்கலாம். சும்மா எல்லாம் முறைக்கக் கூடாது. அடுத்த பதிவு சீக்கிரம் போடணும் ok வா ....

சசிகலா said...

தங்கள் மெளனம் கலைத்தவள்..
எங்களுக்கு அழகான கவிதையை அல்லவா மகுடமாய் கொடுத்திருக்கிறாள்..
மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் அழகான சொற்கோர்வை.

balaamagi said...

வணக்கம் கவிஞரே,நலமா?

பிரிவைக் கூடப் பிரியச் செய்யும் பிரியம் நீயடி

உண்மைதான், பிரியம் இருந்தால் எல்லாம் நடக்கும் போலும்,,,,,,,,,
வாழ்த்துக்கள் கவிஞரே,
நன்றி.

Unknown said...

இனிக்கும் வார்த்தை எடுத்துச் சொன்னாய் இதயம் நிறைந்தது - என் தனிமைச் சிறையின் விடுத லைக்கும் தடைகள் மறைந்தது !

சீராளன் கவிதைக்கே
செப்பிடவே ஈடில்லை
பாராளும் வலைதன்னில்
பரவாத நாடில்லை
ஏராளம் எனவென்றே
எழுதிடவும் தினமென்றே
தாராளம் ஆகட்டும்
தமிழ்வாழ ஓங்கட்டும்

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்!

மதுவைக் குழைத்து வடித்த கவிகள்
மனத்தைப் பிடித்தனவே! - பல
புதுமைக் கருத்தைப் பொழியும் அடிகள்
புலமை வடித்தனவே! - பொற்
பதுமை அழகாய்ப் படைத்த அசைகள்
பசுந்தேன் பொழிந்தனவே! - தமிழ்ப்
புதுவைக் கவிநான் புனைந்த மொழிக்குள்
பூக்கள் வழிந்தனவே!

சீராளன்.வீ said...

வணக்கம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா !

தாங்கள் ரசித்த தனிமையின் விடுதலைக் கவி எல்லோரையும் மகிழ்வித்தமை எனக்கான பாராட்டுகள் ஆகின்றன மிக்க நன்றி ஐயா
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ இனியா !

நான் மிக்க நலம் தங்கள் அன்பான விசாரிப்புக்களுக்கு மிக்க நன்றிகள்

இப்படியும் கற்பனை வரும் இதைவிட மோசமாயும் வரும் ஹா ஹா ஹா
என் அசத்தல்கள் தொடரும் அடுத்த கவிதை ஆயத்தமாகவே இருக்கிறது காத்திருங்கள்

இருவரிப் பாவில் இதயம் நனைத்தாய்
உருகுதே எந்தன் உயிர் !

அன்பால் இனியா அளித்த குறளில்
இன்பா மணக்கும் இனித்து !

மிக்க நன்றி சகோ
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

மிக்க நன்றி சகோ சசிகலா !

மௌனம் கலைத்தவள் கவிதையை ஈந்தாள்
மனதில் இருப்பவள் மகிழ்ச்சியும் கொண்டாள்
இரண்டுமே வேறதாய் இருந்திடும் போதும்
இதயத்தில் கற்பனை இன்னுமே நீளும் !

மிக்க நன்றி சகோ
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
வாழ்க வளமுடன்








சீராளன்.வீ said...

வணக்கம் பேராசிரியர் பாலமாகி அவர்களே !

நான் மிக்க நலம் நன்றி நன்றி !

பிறப்பைப் பிரியமாய் ஆக்கினாள்! நெஞ்சை
அறுக்கும் பிரிவைத் தடுத்து !

மிக்க நன்றி
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் புலவர் ஐயா இராமாநுசம் !

தாராளம் ஆகித் தமிழ்வாழ ஓங்கிநிற்கும்
சீரான வாழ்த்தில் செழித்திருக்கும் - பாராளப்
பாப்புனையும் பண்புகளும் தேடிவரும்! உம்கவியால்
பூப்போல் பொலியும் புகழ் !

மிக்க நன்றி ஐயா
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

இனிய வணக்கம் கவிஞர் அண்ணா கி. பாரதிதாசன் அவர்களே !

என்றென்றும் என்கவியில் ஏற்றங்கள் கூடிவர
இன்றமிழை என்னுள்ளே ஈன்றவரே - நன்றிகளை
நாவினிக்க நாளெல்லாம் சொல்லிடுவேன்! பாப்பூக்கள்
தூவித் துதிப்பேன் கழல் !

மிக்க நன்றி ஐயா
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் இனிய கவிதைக்கும்
வாழ்க வளமுடன்

sury siva said...

கவிதை மிகவும் இனிமை.



சரியான சூப்பர் கவிதை.

பாடலாமா ?? யாருன்னு தெரியாம பாடிட்டு , இது காபி ரைட், டீ ரைட் அப்படின்னு கேஸ் போட்டுட்டாங்க அப்படின்னா இப்ப இருக்கிற நிம்மதியும் போயிடும்.

எஸ் அப்படின்னா இன்னொரு பின்னோட்டம் போடுங்க அதே தளத்திலே.

நானும் பாடி என்னுடைய இந்த தலத்திலே நாளை பதிவு செய்கிறேன்.

இப்போது தான் உங்கள் வலைக்கே வருகிறேன்.

ஒரே பாடல் மயம் .. இங்கே சுக்ரன் அரசனோ !! ஸ்வர்க லோகம் போல வண்ண வண்ணமாக காட்சி அளிக்கிறது.

சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com

சீராளன்.வீ said...

வணக்கம் சுப்புத் தாத்தா !

அன்போடு கேட்கின்ற ஆசைக்கு என்சொல்வேன்
இன்போடு பாடுங்கள் என்னுயிரில்!- நன்றே
பலகவிகள் நாவினிக்கப் பாடிடலாம்! உங்கள்
சலங்கைக்கும் ஏற்றசந் தம் !

//ஒரே பாடல் மயம் .. இங்கே சுக்ரன் அரசனோ !! ஸ்வர்க லோகம் போல வண்ண வண்ணமாக காட்சி அளிக்கிறது.//

அள்ளிப் பருகி ஆனந்தம் கொள்க சுக்ர திசைக்கும் சுகந்தம் சேரட்டும் ஹா ஹா ஹா
மிக்க நன்றி சுப்புத் தாத்தா
வாழ்க வளமுடன்

UmayalGayathri said...

செவிவழி விருந்து...!!! / கவிதை

என் பக்கம் தங்களின் கருத்துக் கவிதைக்கு நானும் ஒரு கவிதை முயற்சித்தேன் சகோ நேரம் இருக்கும் போது காண வாருங்கள் மகிழ்வேன். நன்றி

ஊமைக்கனவுகள் said...

சிந்தும் கவித்தேனில் சொக்கிக் கிடக்கிறதோ
செந்தமிழ் வண்டொன்று சீராள? - சந்த
உரைகல்லாம் நெஞ்சம் உருகச்செய் தின்பத்
திரைகொண்டு போகுதே தின்று!

கவிஞரே அருமை. அருமை.


நன்றி.

sury siva said...

ஹிந்தோள ராகத்தின் சாயல்
இந்தப் பாடல் .
வந்து இங்கு கேட்டிட
வாரீர்.

உங்கள் பாடல் நான் பாடுகிறேனா
இல்லை
நானும்
அந்த வனத்து தேவதையை ,
கனவுகளைக் கலைக்கும் காரிகையை
நானும்
ஆராதிக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=ve_S5dppG2E


சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com


சீராளன்.வீ said...

வணக்கம் சகோ உமையாள் காயத்திரி !

தங்கள் அன்பான வரவுக்கு நன்றிகள் கண்டிப்பாக வந்து பார்க்கிறேன்
வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் பாவலரே !

தங்கள் இனிய வெண்பாவில் மிக மகிழ்ந்து போகின்றேன்
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

வணக்கம் சுப்புத் தாத்தா !

பாடல் கேட்டேன் அருமையோ அருமை இப்போதான் என் கவிதைக்கும் அழகு பிறந்தது நெஞ்சார்ந்த நன்றிகள் தொடரட்டும் தங்கள் பணி வாழ்க வளமுடன் !

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அழகான கவிதை . வாழ்த்துகள்

http://bharathidasanfrance.blogspot.com/ said...
This comment has been removed by the author.
http://bharathidasanfrance.blogspot.com/ said...
This comment has been removed by the author.
G.M Balasubramaniam said...


அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள். இதற்கு நடுவில் என் எழுத்து அபஸ்வரம் போல் இருக்கலாம் . இருந்தாலும் பலரும் சொல்ல விரும்பாததை நான் கூறுவேன் இந்தப் பதிவைப் படிக்க அதன் பின் புலமும் நிறக் கலவையும் படுத்துகின்றன. மாற்றினால் எளிதே வாசிக்கலாம்

நக்கீரன் மகள் said...

அழகான கவிதை

நக்கீரன் மகள் said...

அருமை