சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 27 October 2022

நாணப் புதையல் !
பொறைகொண்ட நாணத்தின்  புதையல் தேடிப் 

        புதைந்தகனா விழியோரப் புட்கள் நீவப் !

பிறைதேடும் வானத்தில் பிரியம் இன்றிப் 

        பிரிந்தவொளித் தாரகையாய் ! விம்மும் போதும்!

நிறைதாது வாசனையால்  நித்தம் நித்தம் 

        நீரசையும் காட்சிகளாய் உந்தன் எண்ணம் ! 

 மறந்தாலும் இனிக்கின்ற நினைவாய் நாளும் 

       மனதோடு உறவாடி மயக்கம் கொள்ளும்!

  


மண்மணக்க வைக்கின்ற மழைநீர் போலும்

         மாறுதலைத் தருகின்ற வார்த்தை போலும்

பண்பாட்டில் விளங்குமொரு பாதை தந்தாய்

         பருவநிலை கடக்கின்ற சிறகும் தந்தாய்!

கண்ணுக்குள் நீ..வந்த காட்சி யாவும்

        கம்பனுக்கும் தோணாத கற்ப னைபோல்!

எண்ணத்தில்  எதிரொலிக்கும் இதயம் வேர்க்க!

        எழுதுகின்ற கவிக்கெல்லாம்  எதுகை யாகும்!


பச்சையத்தின் மணம்போக்கிப் பருவம் நீங்கிப்

        பறந்துவிட்ட சருகாய்'என் மூச்சின் ஈரம்!

இச்சையற்ற போதினிலும்  எழுதும் வார்த்தை

       இசைக்காட்டின் பூவாக இனிக்கச் செய்யும்!

அச்சமிலை என்றவனின் அமிழ்தம் உண்டும்

       அருங்குறளின் முப்பாலும் அணைத்துக் கொண்டும்!

வச்சிரமாய் இதயத்தில் ஒட்டிக் கொண்ட

       வலிகளைய வாய்ப்பில்லை! வாழ்வின் சாபம்!


பாவலர் சீராளன் .வீ 

   

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வச்சிரமாய் இதயத்தில் ஒட்டிக் கொண்ட வலிகள்,மெல்ல மெல்ல இனிமையாய் மாறட்டும்

KILLERGEE Devakottai said...

காட்சிகள் மாறட்டும்...

சீராளன்.வீ said...

மிக்க நன்றி கரந்தை மைந்தரே !
தங்கள் அன்பான கருத்துக்கு தலைவணங்குகிறேன்

சீராளன்.வீ said...

மிக்க நன்றி ஜி !
காலங்கள் மட்டும் மாறுகின்றன காட்சிகள் மாறவில்லை
மீண்டும் நன்றிகள்