சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

என் உறைவிடம் நோக்கி ...!

நேரங்காலம் தெரியாத 
நள்ளிருள் கனவுக்குள்
வாழ்ந்து மடிந்து போகிறது
நம் வாழாத நினைவுகள்...!

செம்பருத்தி பூவோடு
சேர்த்து சொன்ன உன்னழகை
நெருந்திக்கு ஒப்பாக்கி
நெஞ்சுக்குள் வைக்கவில்லை...!

விரும்புகின்ற விழிகளுக்கு
அரும்பும் நீர் ஆறுதல்தான் 
எனக்கும் இப்போ 
இடைவெளிகள் அற்ற மாறுதல்கள்..!

திரும்பிப் பார்க்கவில்லை
கடந்தகாலத்தின் உச்சியில்
தற்கொலை செய்த ஞாபகங்கள் 
உயிர் பெறும் என்பதால்
திரும்பிப் பார்க்கவில்லை...!
சாட்சிகள் வைத்து சடங்கு செய்ய
மணவறை அல்ல
மண்ணறை என்பதால்
வெறுங்கையோடு  தனியே போகிறேன்..!

ஆனாலும் நெஞ்சம் 
ஏதோவொன்றை சுமப்பதாய்
உள்ளுணர்வு சொல்கிறது
நீயாகவும் இருக்கலாம் இல்லை
என் நீண்ட ஆயுளாகவும் இருக்கலாம்,,!

மூச்சு போகும் முன் 
முடிவு தெரியும் என்பதால்
கவனத்தில் கொள்ளாமல் 
கால்கள் போகின்றன,,,,,,!

மீண்டும் நாம் இணைந்திட
வட்டப்பாதையில் போகவில்லை
இருதுருவம் நோக்கிய திசையில்
போவதால் சேருமிடம்
நாம் சேராத இடம்தான்....!

எனக்கான தேசம் அங்கே
இடிமின்னல் அற்றே இருக்கும்
உயிரினங்கள் வாழா இடத்தில்
இயற்கை அமைதி என்பதால். மட்டுமல்ல
என்  உ(ம)றைவிடமும் அதுவே என்பதால்...!  

ப்ரியமுடன் சீராளன்