சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Monday 12 November 2012

வேற்றுக்கிரகம் எல்லாம் வெவ்வேறு கிரகணங்கள்....!மொட்டுக்கனி ஈனும் 
சொட்டுத் தேன் துளிகள் 
உன் பட்டுக் கன்னத்தில் 
தினம் எழுதும் மோகனங்கள்
தித்திக்கும் என் வாழ்வில்  ...!

தாழ்வார நீருக்குள் 
தலை குனியும்  காளான் பூ 
ஏழைக்குடிசை வரை 
எங்கெங்கும் வாசமிடும் 
ஓசை இன்றி நீ நடந்தால் ...!

வெள்ளி நிலவுக்குள் 
கிள்ளை மொழி கீதங்கள் 
மெள்ள மெள்ள ஒலித்திடுமே 
செல்லமாய் நீ சிரிக்கின்ற 
சிப்பி பூக்கும் வேளைகளில் ...!

காற்றும் மொழி உதிர்த்து 
காதல் மொழி பிரித்தறிய 
மூச்சுக்குள் நீ சிரிக்கும் 
மூன்றாம் பிறை நிழலில் 
வேற்றுக்கிரகம் எல்லாம் 
வெவ்வேறு கிரகணங்கள்....!

தினம்தோறும் மாற்றங்கள் 
விழி தொறும் வதம் செய்ய 
மனம்போகும் புதிய வழி 
தினம் புயலில் அலைபாய 
வாரா உன் வாசத்தில் 
வனம் ஆகும் என் தேசம் ...!

தடையற்ற தவமிருந்தும் 
கிடைக்காத வரத்திற்காய் 
விடை வேண்டி விதைத்திட்ட 
விழி நிலங்கள் உவர்ப்பாக 
செழிக்காமல் போனதொரு 
செவ்வந்தி என் வாழ்வில் ....!

ப்ரியமுடன் சீராளன் 

No comments: