இறந்துபோன சிறகுகளாய்
உள்ளம் உதிராமல் பாரமாய் 
நடக்கையில் தடுக்கிறது 
ஓயாமல் ஓடுகிறேன் 
தீயாக துரத்துகின்ற 
திசையறியா காதலின் 
விழிகளில் நுழைந்தே...!
மெய்யறியா வார்த்தைக்குள் 
ஆகுதியான விவேகத்தின் 
யாகத்தீயினிலே தினம் 
சாம்பலானதென் சத்தியங்கள் ...!
செல்லாத சித்திரத்தின் 
சிதைவுகளில் ஓவியனின் 
சிந்தனைகள் தீயானது போல் 
வெந்தணலானதென் வேண்டுதல்கள் ...!
திண்மமொன்று திரவமாகி 
கண்ணின்வழி கரைந்தோட 
பெண்மை என்ற பூந்தென்றல் 
வன்மமானது வார்த்தைகளில்...!
பனி இதழ் சூடாக 
நுனிமூக்கில் நிழல் தழுவ 
கனிமுட்டிக் கண்ணயர்ந்த 
காலங்கள் காணவில்லை...!
ஓடிவிட உந்துகின்ற 
உயிர்மூச்சின் சொல்கேட்டு 
வாடிவிடா வெண்டாமரையின் 
வாசம் விட்டு போவேனோ ...!
இல்லை இல்லை என்று சொல்ல 
இதயத்தில் ஜீவனில்லை 
எல்லாமும் இருக்குதென்ற 
இயலாமை எனைதவிர...!
ப்ரியமுடன் சீராளன் 
 

2 comments:
''..மெய்யறியா வார்த்தைக்குள்
ஆகுதியான விவேகத்தின்
யாகத்தீயினிலே தினம்
சாம்பலானதென் சத்தியங்கள் ...!..'' நல்ல வரிகள் பிடித்துள்ளது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மிக்கநன்றி வேதா.இலங்காதிலகம் தங்கள் கருத்துரைக்கும் வலைப்பூ வந்தமைக்கும்
Post a Comment