சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 7 February 2013

காதல் விடும் கண்ணீர் ..!வாழ்வின் 
ஒவ்வொரு நொடிகளும் 
ஏதோ ஒன்றுக்கான 
ஏமாற்றங்களை சுமந்தபடி...!


வலிகள் இங்கே அர்த்தமற்றாலும் 
அதன் வகிபாகம்  
நெரிந்தி முள்ளாய்
நெஞ்சை குத்தத்தான் செய்கின்றன..! 

எங்கோ பெய்யும் மழையை
சுமந்தவாறே  
ஓடிக்கொண்டிருக்கும் மேகங்களாய்
நாமும் தேடிக்கொண்டிருக்கிறோம் 
அமைதியை உள்ளுக்குள்
சமாதியாக்கிவிட்டு ..!

கற்பத்தில் மழலை 
கதைப்பதில்லை
காற்றுக்கும் நிறம் புரிவதில்லை 
காதலுக்கு மட்டும் 
எல்லாம் தெரிந்தும் 
நடிக்க கற்றுக்கொள்கிறது 
இன்னொரு 
சிறப்பான தெரிவை தேடியே ...!

வாய்க்கரிசி போடும்வரை 
வாழ்வென்னும் தத்துவத்தில்
மூர்ச்சையாவது 
அறியாக்காதல் மட்டும்தான் 
இருந்தும் அதற்காகவாவது
மௌனிக்கிறேன்  
ஈரிதயம் நெருப்பில்
எரியக்கூடாது என்பதற்காக...!

நெருப்பில் கூட 
நீர்த்துளிகள் பனிக்கும்
நினைவுகள் நிஜமாய் 
உயிரை தொடும்போது 
ஆதலால்
களங்கம் இல்லா
காதலை சுமந்து பாருங்கள் 
காற்றும் உமக்காய் 
சாட்சி சொல்லும்..!

இயற்கையின் 
எல்லாக் கொடைகளுக்குள்ளும் 
இன்றுவரை சமதாக்கம் கொண்டது
ஒருசில விதிகளாய் இருக்கலாம்
காதல் விதியில்  மட்டும்
மூன்றுவிதிகளும்  
முப்பரிமாணம் கொள்வதால் 
நியூட்டனும் தோற்று போகிறான்
சமதாக்கம் இங்கே சமாதியானதால்..!  

அஞ்ஞானம் அகிம்சை கொள்வதால்
அமைதியாகிறேன் 
இதய இழைகளுக்குள் 
மரபணு மாற்றம் கொண்டு 
நாளைய நிறமூர்த்தங்கள் 
கூர்ப்பு விதிகளில் 
குற்றுயிர் ஆகக்கூடாது என்பதற்காக...!

உரியத்தின் ஊடாய்   
உணவைப்பெறும்
ஓரறிவுள்ள மரமல்ல நான்
உயிரின் ஊடாய் 
உணர்வுகளை  பெற்று வாழும் 
ஆறறிவுள்ள அழகிய  கலசம்
அதலால் பிச்சை இங்கே 
பெயருக்கும் இடவேண்டாம்
வெறுமையாய் இருந்தாலும்
வேதனைகள் சுகமானது 
அனாதையாக காதலிப்பதைவிட
ஆசைப்பட்டு சாவது மேல் என்பதால்..! 

முடிந்தால் 
முகவரி இன்றி கடிதம் போடுங்கள்
தேடிக்களைக்கும் தபால்காரனாய்
நானும் இருந்துவிட்டு போகிறேன்
மாயை உலகின் சாபங்கள் சுமந்த 
விலாசம் தேடியே...!

பிரியமுடன் சீராளன் 13 comments:

இளமதி said...

வேதனை இல்லா வாழ்வது இல்லை
வேதனை விரும்பிக்கேட்பாரும் இல்லை
வேதனை என்று வெந்து சாகாமல்
சாதனை செய்ய யோசனைசெய்!

சென்றதை எண்ணி வருந்தியிருந்தால்
வருவது நன்றாய் ஆவதெப்போ... நீ
நொந்ததுபோதும் உன்றனைமாற்று
வந்தனை செய்யும் உன்னைஉலகு !

Priya said...

முதல் பாதியில் சீராளன் அண்ணனை காணவில்லை... உங்கள் பாணியை விட்டு விலகி செல்லும் முயற்சியா

DiaryAtoZ.com said...

நல்ல கவிதை.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி இளமதி
என்னுயிர்கேட்டு கருத்திட்டீர் மகிழ்ச்சி
காலத்தின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும்போது
நானும் மாறிக்கொள்கிறேன்

சீராளன்.வீ said...

மிக்க நன்றி பிரியா
எல்லோரையும் போல நானும் மாறிக்கொள்ளாமல் எனக்கான திசையை தேடும் முயற்சி பிரியா ..மிக்கநன்றி என்னுயிர் கேட்க வந்தமைக்கும் கருத்து இட்டமைக்கும்

சீராளன்.வீ said...

மிக்க நன்றி DairyAtoZ.com என்னுயிர் கேட்க வந்தமைக்கும் கருத்து இட்டமைக்கும்

Anonymous said...

'..வாழ்வின்
ஒவ்வொரு நொடிகளும்
ஏதோ ஒன்றுக்கான
ஏமாற்றங்களை சுமந்தபடி...!'' இதை சொல்பவர் சிலர், சொல்லாதவர் சிலரென வாழ்வு ஓடுகிறது.
கொட்டுங்கள் கலி (வலி) தீரட்டும்.
இனிய வாழ்த்து சீராளன்.
Vetha.Elangathilakam.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் என்னுயிர்கேட்டு கருத்திட்டமைக்கு வாழ்கவளமுடன்

http://bharathidasanfrance.blogspot.com/ said...
This comment has been removed by the author.
http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

உன்னுயிர் மெல்ல உருகும் குரல்கேட்டே
என்னுயிர் தீட்டும் எழுத்தக்கள்! - என்தோழா!
சீராளா! சிந்தனை கண்டு சிறைப்பட்டேன்!
பேராளா! காண்கவே பேறு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

சீராளன்.வீ said...

மிக்க நன்றி நண்பர் திரு கவிஞர்.கி.பாரதிதாசன் அவர்களே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் சிரம்தாழ்த்தி நிற்கின்றேன்

Vijayan Durai said...

ஏமாற்றம் என்ற வார்த்தையில் கூட "மாற்றம் " என்ற வார்த்தையை வைத்து படைத்த தமிழனை வியக்கிறேன் !! காலம் மாறும் காட்சி மாறும்
// எங்கோ பெய்விக்க போகும் மழையை சுமந்து ஊர்வலம் போகும் மேகங்கள் !!//

மேகம் மழையாகும் தாகம் அது தீரும் :)

சீராளன்.வீ said...

தங்கள் முதல்வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி விஜயன்

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்