சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 21 மார்ச், 2013

சேரும் காதல் எல்லாம் ..!
காற்றைத்தேடும் பூக்களிலே 
கனியை செருகும் ஆண்டவனே 
நோவை விலக்கும் வரம்தந்து 
சாவைக்கொடுத்திடல் சாத்தியமா...!


சாரல் தீண்டி காய்வதில்லை 
சருகில் வேர்கள் முளைப்பதில்லை 
அருகில்வந்து அணைத்தாலும்
அக்கினிக்கென்றும் உயிரில்லை ...!

கொல்லைப்புறத்து செடிஎன்று 
குருவிகள் வெறுத்து ஒதுக்கவில்லை 
நெல்லை சுமந்தால் தலைகுனியும் 
நிலையை அடைந்தேன் நானிங்கு ..!

காரைமுள்ளும் கள்ளிச் செடியும் 
கால்களைக்கண்டு ஒதுங்கிடுமா
சீரைக்கொண்டு செதுக்குகின்ற 
சீமந்தம் வாழ்வில் நிலைத்திடுமா ..!

ஓரப்பார்வையில் ஒதுங்கிடினும் 
உயிரின் காதல் தொலைவதில்லை 
நேரக்கூண்டில் துயின்றாலும் 
பறவைக்கென்றும்  அலாரம் இல்லை....!

தாழும் வேர்கள் அழுகும் வரை
வாழும் மரங்கள் மரிப்பதில்லை 
நாளும் உன்னை நினைப்பதனால் 
நாவில் உன்பேர் மறைவதில்லை...!

வெட்டிப்போகும் வாள்முனைக்கு 
வேற்றுமை தேடும் தேவையில்லை 
கட்டிப்போட்டபின்  கானகத்தில் 
காற்றில் நலனை கேட்காதே ...!

என்னை எரிக்கும் எதிர்காலம்
இதயத்துளையில் புகைகிறது 
சொல்லில் அணைத்திட நினைத்தாலும் 
உன் சொல்லா மௌனம் சுடுகிறது...!

வீழும் விதைகள் எல்லாம் 
மண்ணில் விருட்சங்கள் ஆவதில்லை
சேரும் காதல் எல்லாம் 
வாழ்வில் சேர்ந்தே இறப்பதில்லை ..!


பிரியமுடன் சீராளன் 


6 கருத்துகள்:

இளமதி சொன்னது…

எட்டிப்போன காதலை எண்ணி
முட்டி வழிகிறநினைவுடனே
கட்டிப்போட்ட கைதியாய்
மட்கிப்போகாதே என்தோழா!

வலியுற்ற நெஞ்சக்கவி சொல்லி
பொலிவுகாட்டினாய் நற்றமிழில்
வருங்காலம் உனதேயென்று
வாழ்த்துகிறேன் அன்பினோடே!

வரவேண்டும் மீண்டும்! நலம்தானே...

வாழ்க வளமுடன்!

சீராளன்.வீ சொன்னது…


இதயமெல்லாம் கவிசுமக்கும்
இளமதிஎனும் என் தோழியே
தொலைந்ததை நினைத்தேன்
துயர்மிக கவிவடித்தேன்
விலையற்ற உயிர் வார்த்தை
உதிர்க்கின்றாய் எனக்காக
வரும்காலம் பதில்சொல்லும்
வலியெல்லாம் பறந்தோடும்
அன்றுனக்கு சொல்லுகின்றேன்
அத்தனைக்கும் நன்றியுடன்...!

வந்துவிட்டேன் வனவாசம் விட்டு
மிக்க நன்றி இளமதி வாழ்கவளமுடன்

கவியாழி சொன்னது…

சீரான கருத்துடன் சிறந்து உள்ள உம் கவிதை நன்று.தொடர வாழ்த்துக்கள்

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் அவர்களே தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

பெயரில்லா சொன்னது…

காற்றைத்தேடும் பூக்களிலே
கனியை செருகும் ஆண்டவனே
நோவை விலக்கும் வரம் தரட்டும். சாந்தி...சாந்தி.
கருத்துடை வரிகள்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...வாழ்கவளமுடன்