சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Monday 16 September 2013

உயிரைத்தொலைத்தேன் ..!


உனக்கும் எனக்கும் உள்ளப்  பொருத்தம்
உயிர்கள் இரண்டிலும்  எம்மால்  நெருக்கம் 
கண்களும் இமையும்  காதலைப்   பெருக்கும்  
கடுகைப் போலே  உன்மொழிச்  சுருக்கம்..!


சௌமிய தேசத்தின்  சந்தன வாசமாய்க்  
கௌவிட சொல்லும் கனியிதழ் குளிர்ச்சியில் 
லௌகிகம்  செழிக்கும் லட்சியம் கொழிக்கும் 
யௌவனம் அவளின் ஜனனத்தின் மிருட்சியில்...!

இலக்கிய வானில் என்றும் மின்னும்
இவள்பெயர் என்றே இலக்கணம் கொஞ்சும் 
வஞ்சனை தீண்டா   வார்த்தையே  வரமாய் 
நெஞ்சினில் படிந்த நித்திய அழகே..!

இத்தரை  அழகின் இயக்கம்   என்றே 
எழுதும் பாக்கள் இசைகள்  தேடும் 
சித்திரை நிலவாய் செழிக்கும்  உன்றன் 
சிணுங்கல் பட்டுச்  சிவக்கும் மின்மினி !
 

 
மெட்டிச் சத்தம் மேகத்தை உரசிட 
கொட்டும் மழையும் சிட்டுனை நனைக்கும் 
பட்டாம் பூச்சிகள் பலவும் சேர்ந்து 
பட்டுடை  போலுன்னில் பவ்வியம்  சுற்றும்....!

குவளை மலர்விழி குனியும் நாளில் 
குருவிகள் கீச்சிட மறுக்கும் கூட்டில் 
அவதிப் பட்டுன்  அழகில் கரைந்திட  
அரும்புகள் நுனியில் அமிர்தம்  பூக்கும் .!

தென்னங் கீற்றில் தவழும் தென்றல் 
உன்னை தேடி ஊமையாய் வீசும்
கன்னல் தண்டின்  சுவைகள்   எல்லாம்
கசக்கும் நாவில் இனிப்பும் மீந்து .!

வற்றா நதியின் வாழ்வியல் ஓட்டமாய்க் 
கற்றால் நிமிரும் கவலையின் வாட்டம்
நற்றாய் ஆனாய் நளினங்கள்  முகிழ்ந்தாய் 
பெற்றேன் கவிகள் பெண்ணே  உன்னால்...!

பிரியமுடன் சீராளன் 

23 comments:

சசிகலா said...

உங்கள் கவிதை சற்று மாறுவேடம் போட்ட மாதிரி இருக்கே.. எனக்குத்தான் அப்படி தெரிகிறதா ?

புது முயற்சி நன்றாக இருக்கிறது. சாரலாய் வரிகள்.

Seeni said...

rasanai...!

Unknown said...

கவிதை அருமை வாழ்த்துக்கள் நண்பரே

சீராளன்.வீ said...

மாறுவேடம்தான் போட்டுப் பார்த்தேன்
பொருத்தமா இருக்குதா என்று நீங்கள்தானே சொல்லணும்

மிக்க நன்றி சசிகலா
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

தங்கள் வருகைக்கும் ரசனைக்கும்
மிக்க நன்றி சீனி
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

சீராளன்.வீ said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ராசன் நாகா

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா..அடடா.. என்னா ஒரு வர்ணிப்பு.. சூப்பராக இருக்கு ஒவ்வொரு வரியும்...

ஆனா காதலிக்கு இது கொஞ்சம் ஓவர்தான்ன்:)

முற்றும் அறிந்த அதிரா said...

மீண்டும் காதலியைக் காணவும், சேரவும் வரம் கிடைக்க, மீயும் வேண்டுகிறேன்ன்..

சீராளன்.வீ said...

ஹா ஹா ஹா வணக்கம் அதிரா வாங்கோ...

வர்ணிப்பு லைட்டா ஓவரான மாதிரி இருக்கோ....

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நன்றி...

இளமதி said...

இருக்கும் பொருத்தம் இயல்பாக
பெருக்கும் ஆசையோ பெரிதாக
நெருக்கம் கொள்ளுதோ நிழலாக
உருக்கும் உன்கவி உயர்வாகவே!...

அருமை! அழகிய சொற்பிரயோகங்கள்!
வாழ்த்துக்கள் சகோ!

சீராளன்.வீ said...

வாருங்கள் சகோ இளமதி

அழகிய கவியில் கருத்திட்டீர்
அன்பாய் வாழ்த்தும் செர்த்திட்டீர்

தங்கள் வருகைக்கும் கவிக்கும்
மிக்க நன்றிகள்

வாழ்த்துக்கள் சகோ

Iniya said...

காணும் வரம் எதற்கு உம் உயிரில் கலந்திருக்கும் போது, தொலைக்கவில்லை இன்னும் நிஜமாக நீந்துகின்றள் கனவினிலே என்றும். இல்லை என்றால் அழகான படைப்புகள் அடுக்கடுக்காய் தோன்றுமா வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...

வணக்கம் இனியா

உள்ளக்கிடக்கை எரிந்தாலும்
உயிரில் பூக்கும் அவள் நினைவு
மெல்லத் திறக்கும் இமைக்கதவில்
மெல்லினமாக உள்நுழைந்து
சொல்லிச் செல்லும் வார்த்தைகளில்
சுடர்வேன் என்றும் ஒளிகொண்டு...!

தங்கள் வருகையும் வாழ்த்தும்
மகிழ்வாய் தருகின்றன
மிக்க நன்றி இனியா

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

கோமதி அரசு said...

தென்னங் கீற்றில் தவழும் தென்றல்
உன்னை தேடி ஊமையாய் வீசும்//

தென்னங் கீற்றில் தவழும் தென்றலாய் கவிதை அருமை.
வாழ்க வளமுடன்.

சீராளன் said...
This comment has been removed by the author.
சீராளன் said...

வாருங்கள் கோமதி தங்கள் முதல் வருகைக்கு வந்தனங்கள்

அழகிய கருத்துக்கும் வாழ்த்துக்கும்

நன்றிகள் பல

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்...!

கீதமஞ்சரி said...

மனத்தை இதமாய் வருடும் இன்தமிழால் மனத்தில் உறையும் இனியவளுக்கு பாமாலை. வரிகள் ஒவ்வொன்றும் ரசனையின் உச்சம். மனமார்ந்த பாராட்டுகள் சீராளன்.

சீராளன்.வீ said...

தங்கள் முதல் வருகைக்கு வந்தனங்கள்
கீத மஞ்சரி

அன்பான கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்

வாழ்கவளமுடன்

Anonymous said...

இனிய சொல்லடுக்கு.
நல் வாழ்த்து.
Vetha.Elangathilakam

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

சீராளன்.வீ said...

// kovaikkavi கூறியது...
இனிய சொல்லடுக்கு.
நல் வாழ்த்து.
Vetha.Elangathilakam//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

சீராளன்.வீ said...

//Ramani S கூறியது...
அற்புதமான கவிதை
தொடர வாழ்த்துக்கள் //

மிக்க நன்றி ரமணி சார்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

அம்பாளடியாள் said...

காய்க்கும் பூக்கும் கல கலக்கும்
கண்ணீர்க் கவிதை வரிகளைக் கண்டு
தாய்க்கும் உள்ளம் தாங்காதிங்கே
தங்கத் தாமரை மனமே தூங்கு !

என்று ஆறுதல் சொல்லி வாழ்த்தச் சொல்கிறது கவிதை வரிகளைக் கண்டு என் மனமும் அவ்வாறே வாழ்த்துக்கள் சகோதரா .