சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Tuesday 10 March 2015

வாழ்வியல் முற்றத்தில் ..!




பக்குவம் என்பதே பண்போ டிணைகின்ற
மக்களின் மாண்பாம்! மனிதத்தின்  - முக்திதனை
எக்கணத்தும் சேர்க்கும்  எழிலான  இவ்வாழ்க்கை
சக்கரம் இல்லாச் சகடு!

முற்றிய வித்தே முளைவிடும்! மற்றெல்லாம்
இற்றே உரமாகும் இம்மண்ணில்  - கற்றுத்
தெளிவடைதல் வாழ்வின் சுழல்புாியும்! மாயை
ஒளியறுத்து உய்யும் உலகு!


மாயக் கனவுகளில் மாழும் மனிதர்க்குக்
காயங்கள் என்றும் கலையாதே - நோயில்
துடிப்பார்கள் நுண்ணறிவு தோர்ப்பார்கள்! நாளும்
பிடிப்பற்றுப் போகும் பிறப்பு!

ஏங்குகின்ற ஆன்மாவில்  ஏராளம்  காயங்கள்!
தூங்கும் விழிதுளைத்தும் தூங்காதே  - ஓங்கிவரும்
தாங்கும் மனம்கொண்டால் தாகமுறும் நெஞ்சத்தில்
பூங்குவளைத்  தேனாய்ப்  புகும்!

எல்லோர்க்கும் ஏற்றம் எளிதில்லை வையத்தில்
சொல்லாண்டார் கோடிச் சுகம்பெற்ற - நல்லோராய்ப்
பொல்லாத் துயர்சேர்க்கும் போகத்தைத் தாண்டுகின்ற
வல்லோரைச் சேரும் வளம்!

விட்டில்பூச் சிக்கும் விளக்கென்ன  காதலியா
கட்டிப் பிடித்துக் கருகுவதேன்?   - எட்டிப்
பிடிக்கும் இடத்தில் பகையிருந்தும் கொல்லத்
துடிக்கின்ற நெஞ்சைத் துற !

சீதையவள் தீக்குளிக்கச் செய்தவினை  ஏதுமில்லை!
பாதையவள் மாறவில்லை! பாரில்ஏன் - வாதை
அளிக்கும் வலியவளை அண்டியது? மோகம்
களைந்திடத் தந்த கதை!

பாரெல்லாம் நாளும் பலவாறு பொய்கூறும்
ஊரென்ன பேசும் உடையாதே - சீரெல்லாம்
வாழ்வின் சினத்தில் வளமாகா ! உள்மன
ஆழ்நிலை காணல் அறிவு

வாழும் கலையறிந்தும்  வன்கொடுமை செய்வோரின்
பாழும் மனதறியும் பாவமென்று!  -  நாளும்
பொழுதும் நலமளிக்கப் பூத்திட்டால் வாழ்வின்
விழுமியங்கள் காணும் விடிவு!

தெய்வத்தின் உண்மை தெரிந்திட மெய்யறிவு
செய்யும் செயலென்றும் தெய்வீகம்  - பெய்யும்
மழையெனப்  பேதமற்றார் மாண்புகளால்! நாடும்
தழைத்தோங்கும் தர்மம்  தாித்து!

பிரியமுடன் சீராளன் 

18 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஒவ்வொரு வரிகளும் மனதை நெருடுகிறது தொடக்கிய விதமும் முடித்த விதமும் நன்று சீர்.... வாழ்க வளமுடன்... வாழ்த்துக்கள்
த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

மிக அருiமான சொல்வாடல்.
இனிய பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

ஊமைக்கனவுகள் said...

காதல் மலர்பூக்கும் கற்பகக் காட்டினிலோ
நோதல் தணிக்கும் நெடுமொழிகள் - வேதனையைப்
போர்புரிந் தாற்றும் பதவுரையில் நான்கண்டேன்


நீர்நனைந் தாடும் நெருப்பு!!!

அருமை சீராளரே..

அருமை அருமை

அடிக்கடி வாருங்கள்!!!

நன்றி


த ம 3

சசிகலா said...

மிகவும் ரசித்துப் படித்தேன். அற்புதம் தொடருங்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

மனதைத் தொடும் வரிகள் நண்பரே
நன்றி
தம +1

Iniya said...

விட்டில் பூசிக்கும் விளக்கென்ன காதலியா கட்டிப் பிடித்துக் கருகுவதேன்-எட்டிப் பிடிக்கும் இடத்தில் பகை கொல்லத் துடிக்கின்ற நெஞ்சைத் துற!

\\\\ஆஹா என்ன அருமையான சிந்தனைகள் சொற்றொடர்கள். நீண்ட நாட்களின் பின் முத்தான தத்துவங்கள் தொடரட்டுமே. வையம் செழிக்க நற்றமிழில் வார்ப்பாய் நற்கவிகள் நயந்து ///

வாழ்க்கையின் தத்துவத்தை வார்த்துவிட்டாய் சொற்றொடரில்
வீழ்வில்லா வாழ்வு வையத்திலே தென்றுணர்ந்தும்
மாழுகின்றோம் நொந்து தினமழியா தென்றெண்ணி
ஆளுகிறோம் பூச்சியத்தை காத்து!

பெற்றுவிட்ட பக்குவங்கள் கற்றிட்ட பாடங்கள்
சிற்ரறிவால் ஏற்பட்ட சீரழி வல்லவே
பொற்பதங்கள் பற்றினும் பட்டிடு என்பானே
அற்புதம் நிறைந்தவன் தீர்ப்பிது !

சீராளன் said...

வணக்கம் ரூபன் !

தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி வாழ்க வளமுடன்

சீராளன் said...

வணக்கம் கோவைக்கவி !

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி வாழ்க வளமுடன்

சீராளன் said...

வணக்கம் ஊமைக்கனவுகள் !

காதல் மலர்பூக்கும் கற்பகக் காட்டினிலோ
நோதல் தணிக்கும் நெடுமொழிகள் !

ஆஹா அற்புதமாய் சொன்னீர்கள்
மீண்டும் காதல் மலர்பூக்கும் காணுங்கள் நன்றி

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி வாழ்க வளமுடன்

சீராளன் said...

வணக்கம் சசி கலா !

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி வாழ்க வளமுடன்

சீராளன் said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் !

தங்கள் ரசனையே என்றன் எழுத்துக்கு உரம்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி வாழ்க வளமுடன்

சீராளன் said...

வணக்கம் இனியா !


பாட்டோடு என்னைப் பலவாறு மேலுயர்த்திக்
காட்டுகின்ற அன்பில் கமழ்கின்றேன் - வாட்டும்
சுமையழியும் வாழ்வும் சுகம்காணும் ! அன்பால்
எமைசேரும் இன்பத் தெழில் !

தங்கள் வருகைக்கும் கவிதைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

Unknown said...

அருமைசகோ

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா! அருமையான வரிகள்! மனதை வருத்தமும் கவ்வியதே! நண்பரே!

சாரதா சமையல் said...

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் ! எனது வலைப்பூவுக்கு வருகை தந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி.உறுப்பினராக சேர்ந்து தொடர்ந்து வந்து கருத்துக்களை சொல்லுங்கள்.

KILLERGEE Devakottai said...

ஏங்குகின்ற ஆன்மாவில் ஏராளம் காயங்கள் தூங்கும் விழிதுளைத்தும் தூங்காதே

அருமை நண்பரே ஸூப்பர்
ஆஹா இவ்வளவு நாட்களாக இந்த ஏரியாவுக்கு வராமல் இருந்து விட்டேனே.... இனி தொடர்கிறேன்

KILLERGEE Devakottai said...


தளத்தில் இணைந்து கொண்டேன் நண்பரே...

balaamagi said...

சாவு நிச்சயம் எனத் தெரிந்தும் விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகள்.
அது தானே உண்மை. காதல் என்பது வாழவைப்பதா?
தங்களின் ஒவ்வொரு வரியும் அருமை. இனித் தங்களைத் தொடர்வேன்.