சிந்தனை கொண்டெழில் சேர்த்திருப் பாள்- உயிர்ச்
சித்திரம் யாவையும் கோத்திருப் பாள்!
விந்தனை கொள்'இரு வேல்விழி யால்- கவி
வித்தகங் கற்றத மிழ்மொழி யாள் !
போரெழ வைத்திடும் புன்னகை யில் -சிலர்
பொல்லாக் கனவறும் நித்திரை யில்!
காரெழ வைத்திடும் காரிகை யாள்- உளக்
கற்பனை தீண்டிய தூரிகை யாள்!
வண்ணக்க ருங்குழல் வாசனை யில்- பல
வார்த்தைகள் தானெழும் தூங்கிசை யில் !
எண்ணப்பெ ருவெளி எல்லைக ளில்- இவள்
இட்டமூச் செல்லாமே! மூங்கிசை கள்!
சங்குக ழுத்திடை சந்தமென -மழைச்
சாரல்கள் மோனைகள் கொண்டுவர!
பொங்குத மிழொரு பாவெழு தும் -அந்தப்
பாவிலி வள்பெயர் தேர்வெழு தும்!
நீலப்பெ ருவானத் தாரகை யாய்!- உளம்
நீந்தும்மு துமொழிக் காரிகை யாய்!
கோலப்பு றாக்குணம் கொண்டிருப் பாள் !- இதங்
கூடிய வார்த்தைகள் பூண்டிருப் பாள்!
காலத்தி னிமைகள் தேய்ந்து வர! -வளர்
காலைத்த னிமைகள் காய்ந்து வர!
சோலைக்க னிச்சுவை ஊட்டிடு வாள் !- உளஞ்
சொக்கிட வாசனை தீட்டிடு வாள் !
இன்னுமி ருந்திடும் ஏக்கம் பல - அதன்
எச்சத்தி லூறிய தாக்கம் சில !
பின்னும்ம னத்துளே பேரிசை யாய்!- உயிர்ப்
பேழையு டைத்திடும் சாரிகை யாய்!
காலப்ப ருவத்தி னோசைக ளை! - உன்
காதுகள் சேர்த்திட நாணுகை யில் !
தூலப் பிடிமனத் துள்ளிருக் கும் ! - இவன்
சொப்பனம் முற்றிய ழிந்திருக்கும்!
பாவலர் சீராளன்