சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday, 13 September 2012

கற்கமுன் பிறந்ததனால் ..!



காற்றுபடாத இடமென்பதால்
கருவறைக்குள்ளே -நான்
கதைத்திருக்க வேண்டும்
இப்போது மௌனித்திருக்க....!

இளமைக்குள் ஏக்கங்கள்
இறக்கைகட்டிப் பறக்கிறது
விழிகளிலும் விரகதாபம்
வீம்புக்குப் பிறக்கிறது...!

காற்றும் பேசும் என்பதை
தூக்கத்தில் கனவுகள் நினைவூட்ட
தாய்மடி வரமென்று -சுடும்
தலையணைகள் கவிஎழுத...!

இன்றுவரை தேடுகின்றேன்
எண்சான் உடம்புக்குள்
எங்கிருக்கு ஆசையென்று
எரித்திடவும் எறிந்திடவும்...!

உயிருக்குள் உயிர்பூவாய்
உலகைநான் காணும் முன்
உதைக்கும் போதெல்லாம்
மடிதடவி மகிழ்ந்தவளே....!

காதல் பாவமென்று
கருவிலே நீ சொல்லியிருந்தால்
காட்சிகள் நிறைந்த மண்ணில்
சாட்சிகள் இன்றி அழிந்திருப்பேன்...!

பூக்கள் கூட எனக்காய்
புலம்பி இருக்காது
நாட்கள் கூட எனக்காய்
நலிந்து இருக்காது.....!

ப்ரியமுடன் சீராளன் 

No comments: