சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

சனி, 20 அக்டோபர், 2012

ஏழைக்கவி...!

என்னோடு முடிந்துபோகும்
எனக்கான தேவைகளுக்குள்
எந்நாளும் தேடல்கள்
இருப்பதும் இல்லாததுமாய்...!இதயத்தில் விதைத்த 

இறையும் ,மறையும்
அறுத்துச் சென்றது
ஆசைகளின் விளைச்சலை...!

நிழல்கள் வளர்வதில்லை
அறிந்துகொண்ட மரங்களின்
அடாவடித்தனமாய் சருகுகள்
என் தெருக்களை விலை பேசும்...!

காத்திருப்புக்களை களவாடிய
அந்திப்பொழுதுகளை அணைத்தபடி
ஆதவன் மறைய தேகம் சுடும்
வெறுமைகளை என்னில் விட்டு செல்வதால்...!

இளமை அரும்புகள் ஒளிகளை தேட
நீரற்ற நெருப்புத் தீயாய்
பெருமூச்சுக்குள் நலம் விசாரிக்கும்
வேர்களின் கண்ணீர் ...!

ஆழ்மனம் அறுத்த விழிவாளின்
அசட்டுப் பார்வைக்குள் என்
பாவப்பட்ட நெஞ்சத்தின் பைந்தமிழ்
தரம்பிரிக்கப்பட்டது ஏழைக்கவி என்று..!

இகழ்ச்சி அற்ற எல்லா வார்த்தைக்கும்
இதயம் இருக்கும் உன் பெயரைப்போல்
இறப்பு மட்டும் தனித்தே தடம்புரளும்
இயங்கியலுக்குள் நான் இலக்கணம் கற்றதால்...!

மாற்றமற்ற மறவாமைகள் உனக்குள்
மலிந்து கிடப்பதால் மாறாதே
கல்லறைக்குள் கட்டாயம் தருவேனென்று
கால மாற்றம் கடன் சொன்னது அமைதியை .....!


ப்ரியமுடன் சீராளன்

கருத்துகள் இல்லை: