சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

வியாழன், 24 ஜனவரி, 2013

காதலின் ராகத்தில் ..!


தேன்மொழி பேசித் தெவிட்டாத புன்னகையால் 
பொன்னெழில் கொண்டு ஊனோடு என் 
உடலழிக்க நாவோடு நயம்பேசி நின்றாள் 
விடலைக் கண் விழித்து .!

சாலச் சிறந்தவொரு சங்கீத ராகத்தை 
ஞாலத்தை விட்டகல நஞ்சிட்டாய் காலத்
தருவொன்று உய்வடையா உரமிட்டு நீயகல 
கருவழித்துப் போனதிங்கே வாழ்வு.!

கற்பனைக் காதலென்று காயாத கண்ணீரை 
அற்புதங்கள் ஆக்கினாய் அகமகிழ்ந்தேன் ஈற்றில் 
சொர்ப்பனங்கள் இவையென்று சொந்தத்தில் தூதுவர 
மார்புக்குள் புதைந்ததே மண்.!

இளமைக் கண்ணெதிர் நோக்கும் காயம் 
தளர்வற்றுப் போகுங்கால் நோகும் வெள்ளித்
திரையிட்டு மறைத்தாலும் காதல் விதிக்கு 
இரையாகி நின்றிடுமோ சொல்.!

பிரியும் நிலையறியேன் பேதமை நானறியேன்
உரிமையென உனதன்பில் உழன்றேன் கரியமிலக் 
காற்றோடு காதல் நிலா கவியெரிய 
வெற்றுக் காகிதமாய்  விழி.!

எள்ளிநகை யாடிவந்து என்னுயிரை உண்டவுனை 
கள்ளியென்று நாவால் கடியவில்லை உள்ளம் 
இன்றுவரை வாழ்த்தி நிற்கும் உயிர் 
என்றுமுனை மட்டும்  சுமந்து.!

பிரியமுடன் சீராளன் 

4 கருத்துகள்:

அருணா செல்வம் சொன்னது…

நண்பர் சீராளனுக்கு வணக்கம்.


தளைதட்டும் வெண்பா! தவறிருந்தும் காதல்
கிளைவிட்டு பாடிட கீதம் – விளைந்தது!
நன்றென்று சொன்னாலும் நற்றமிழ் யாப்பினை
அன்புடனே மேலும் அறி!

கருத்து சொல்வதால் கோபம் வேண்டாம்.

நட்புடன்
திருமதி அருணா செல்வம்.

சீராளன்.வீ சொன்னது…

மிக்க நன்றி அருணா செல்வம் அவர்களே தங்கள் அழகிய வெண்பா கண்டேன் பதிலிறுக்க பதிலில்லை அறியாமை எனும் வார்த்தை தவிர, எனக்கு வெண்பா பற்றி எதுவும் தெரியாது எதோ கிறுக்கினேன் மேலும் வெண்பா பற்றி படித்துவிட்டு இவ்வாறான கவிதைகள் எழுதுகிறேன் தங்கள் அக்கறைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

பெயரில்லா சொன்னது…

''..வெள்ளித்
திரையிட்டு மறைத்தாலும் காதல்! விதிக்கு
இரையாகி நின்றிடுமோ சொல்.!..'' கருத்துடை வரிகள் அருமை. இனிய வாழ்த்து.
வேதா.இலங்காதிலகம்.

சீராளன்.வீ சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்துச்சொன்னமைக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் வாழ்த்துக்கள்