சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Tuesday 15 January 2013

ஈரம் காய்ந்த பின்பும் ...!


ஈரம் காய்ந்த பின்பும் 
இவன் 
இலைகள் உதிரவில்லை ..!

ஓடிய திசைகளில் 
தீப்பந்தங்களே 
கர்ப்பகதருவாய் 
வெட்டியாய் தெறிக்கும் 
வெயிலுக்குத் தெரியும் 
நிழல்களுக்கு 
இவன் 
தூரமானவன் என்று
இருந்தும் 
தாகமே நிழல் என்பதால் 
தலை சாய்த்துக்கொள்கிறேன்
எரிக்கப்படும் போதும்...!

பழையன கழிதலும் 
புதியன புகுதலும் 
நாகரிகத்துக்கு 
பிடித்திருக்கலாம் 
இடைவெளி அற்ற 
ஏக்கம் சுமந்தவனுக்கு 
இரண்டும் ஒன்றுதான் 
இதயம் போல...!

வேதம் பார்த்து 
விலகிய நிலவு நீ 
கருவறை 
கல்லாய் இருந்தால் என்ன 
களியாய் இருந்தால் என்ன 
பூஜைகள்  உனக்கில்லை
பூக்களும் உனக்கில்லை ...!

எரிக்கும் நெருப்பிற்கு 
எந்த விறகென்ற 
கேள்வி தேவை இல்லை 
சாம்பல்கள் சொல்லும் 
சந்தணமா,சருகா என்று 
ஆதலால் 
எரித்துவிட்டுச்செல்...!

ஆவிகளின் தேசத்தில் 
அடைக்கலம் தேடும் 
விண்ணப்பங்கள் 
இலவசமாம் 
சொல்லிவிட்டாய் சூசகமாய்........!

பசியோடு 
செத்துப்போகிறேன் 
வாய்க்கரிசி போட்டு 
வழி அனுப்பாதே 
எங்கேனும் எறிந்துவிடு 
எறும்புக்காவது இரையாகட்டும்.....!

பிரியமுடன் சீராளன் 

 
 
  

4 comments:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ஒவ்வொரு வரிகளும் அருமை...

சீராளன்.வீ said...

மிக்க நன்றி பிரஷா என்னுயிரின் ஓசை கேட்டதற்கும் ,கருத்துரை இட்டமைக்கும்

Anonymous said...

ஆவிகளின் தேசத்தில்
அடைக்கலம் தேடும்
விண்ணப்பங்கள்
இலவசமாம்
nalla vati...nalvaalthu..
Vetha.Elangathilakam.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள்