சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

யார்மீது குற்றம் சொல்லுவதோ...!


எண்ணத்தின் தேக்கம் 
எனக்குள்ளே தேடுகின்ற 
பொன்னுக்குள் புதைத்திருக்கும்
புதுமைகள் என்ன விலை.. .!


கண்பார்த்து காவுகொண்ட

காதலிளம் சோலையெங்கும்  
வன்விழிப் பார்வைகளால்
வழியெங்கும் வலிச்சாரல்...! 

ஒளிச்சேர்க்கை அற்று 

உருமாறும் இலையாக 
விழிச் சேர்க்கை இன்றி
வேகிறது என் உணர்வு...!

கனியுதிர காய்மகிழ்ந்து 

காம்புகளை முறிப்பதில்லை   
பனிகாய்ந்து  பூ அழுதால் 
காற்றுக்கு வலிப்பதில்லை ...!

உன்னருகில் இல்லைஎன்று 

உயிரும் வலித்திங்கே
காத்திருப்பு களையிழந்து 
கன்னலும் கசக்கிறது...!

நிஜங்கள்  நிழலாகி 

நிழல்கள் கனவாகி
கனவுகள் கானலாய்
கண்முன்னே கரைந்ததடி...!

வாசத்தை வகையறிய 

வாழ்வுக்குள் சேரவந்த 
பாசத்தை பாவமென்று 
பறந்திட்டாய்  கூடுவிட்டு....!

பேச்சில் சிதறும் உன் 

பேரீச்சம் சாற்றினிமை
மூச்சில் சுமந்தேன் 
முள்ளாக்கி போனாய்...!

பொன்னை உடையவன்தான்

பொங்கலிட வேண்டுமென்றால் 
எல்லாக் கடவுளுக்கும்
எதிரியாவே இருக்கின்றேன்...!

உன்னை அடைந்துவிட

உயிருக்கும் பணம்கேட்டால் 
என்னோடு வாழ்ந்துவிட
ஏகாந்தம் இருக்குதடி.. ..!

மார்மீது நட்டவிதை 

மனதுக்குள் வேரழித்தால்   
யார்மீது குற்றம்
நானிங்கு சொல்லுவதோ...! 

பிரியமுடன் சீராளன் 


12 கருத்துகள்:

Priya சொன்னது…

மிகவும் அருமை அண்ணா...

சீராளன்.வீ சொன்னது…


தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

மிக்க நன்றி பிரியா
வாழ்கவளமுடன்

கவியாழி சொன்னது…

மார்மீது நட்டவிதை
மனதுக்குள் வேரழித்தால்
யார்மீது குற்றம்
நானிங்கு சொல்லுவதோ...! //சிறப்பான வரிகள்.வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

அவள் மன அலைகள் ஓயட்டும் ...அழகிய பிம்பம் உங்கள் மனதினில் தெரிந்திடும் ...

சீராளன்.வீ சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்
வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

தங்கள் முதல் வருகையை அன்போடு வரவேற்று என் வலையினை தொடர்ந்தமைக்கும்,அழகிய கருத்திட்டமைக்கும் நன்றிகள் Bagawanjee KA

வாழ்கவளமுடன்

பெயரில்லா சொன்னது…

''..ஒளிச்சேர்க்கை அற்று
உருமாறும் இலையாக
விழிச் சேர்க்கை இன்றி
வேகிறது என் உணர்வு...!..''

பிடித்த வரிகள் .இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

இளமதி சொன்னது…

வேர்செய்த குற்றமோ விளையாத மரமாவது
நீர்செய்த குற்றமோ நிழல் கலங்கிப்போவது
ஊர்செய்த குற்றமோ ஒருவர் தினம்சாவது
யார்செய்த குற்றமிது இங்கு தினம்நீவாடுவது!..

உங்கள் கவிவரிகள் அருமை சகோ!

//ஒளிச்சேர்க்கை அற்று
உருமாறும் இலையாக
விழிச் சேர்க்கை இன்றி
வேகிறது என் உணர்வு//

மனந்தொட்ட வரிகள்! சிறப்பு!

வாழ்த்துக்கள்!

சீராளன்.வீ சொன்னது…

தங்கள் வருகைக்கும் பிடித்த வரிகள் இட்டு பிரியமாய் கருத்திட்டமைக்கும்

மிக்கநன்றிகள்
kovaikkavi
வாழ்கவளமுடன்

சீராளன்.வீ சொன்னது…

யார்மீதும் குற்றமில்லை
நானழிந்து போவதற்கு
பார்மீது நான் பிறந்த
பாவத்தின் மீதங்கள் ...! சகோ

அன்பாய் வந்து அழகாய் கருத்திட்டமைக்கு

மிக்கநன்றிகள்
இளமதி

வாழ்கவளமுடன்

மகேந்திரன் சொன்னது…

இனிய வணக்கம் சகோதரர் சீராளன் ....
இன்னிசையாம் மெல்லிசை ஒலித்து ஆங்கே
சுகமான சோக ராகமும் இசைக்கிறது...
வரிகள் ஒவ்வொன்றும் நெஞ்சிற்குள்
ஊடுருவி பாய்கிறது ஆணிவேராய்....


////உன்னருகில் இல்லைஎன்று
உயிரும் வலித்திங்கே
காத்திருப்பு களையிழந்து
கன்னலும் கசக்கிறது...!/////

அப்பப்பா...
பிரிவின் வலிமை இதுதான்...
கொள்ளாமல் கொன்றுவிடும்...

அருமை அருமை...

சீராளன்.வீ சொன்னது…

இனிய வணக்கம்
மிக்கநன்றி நண்பா மகேந்திரா

இதயம் வலிக்கும் போது
இடைக்கிடை வார்த்தைகள் தடிக்கிறது
மாற்றி எழுதத்தான் நினைக்கின்றேன் இருந்தும்
அவ்வப்போது வந்து
என்னையும் இழுத்துச் செல்கிறது
இந்த ராகங்களுக்குள்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி

வாழ்கவளமுடன்