சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 9 November 2022

ஈர நினைவும் எரியும் கனவும் !
ஓசைக ளாயிர மாயும் -உளம் 

ஒன்றிய இசைபல வாயும் 

பூசையி லொன்றிய பூவாய் - என் 

புன்னகை ஏந்தி.நீ போவாய் !


ஓவிய மானது உள்ளம் -அதை

உரசிம கிழ்ந்தொரு உள்ளம் 

கூவிய வன்சொல்  இன்னும் - உயிர் 

குடைந்தென்  குருதியைப் பின்னும் !


மாற்றமே  இன்றிய வாழ்க்கை - சுடும் 

மனங்களால்   கருகிய யாக்கை 

தோற்றமே வெறுத்திடக் கூடும் - உயிர் 

தொலைக்கும் வழிகள் தேடும் !


காற்றலை தூங்கிய போதும்   - அதில் 

கசிந்திடும் பனித்துளி போலும் 

ஆற்றலை மறந்தும்  துடிக்கும் -  பல 

அணுக்களாய்ப்  பிரிந்துயிர் வெடிக்கும் !


ஒப்பிலா மாந்தராய்ப் பிறந்தோம் - சுய 

உணர்வினால் உறவுகள் துறந்தோம் 

தப்பிலா வாழ்க்கையும்  இல்லை - இத்

தரணியில் தனித்துவம்  தொல்லை !


மருவிய  நினைவதன்  வாசம் - விழி

மறைத்தழும்  நீரிலும் வீசும்

அருகிய பார்வையின் நேசம்- வரும்

அடுத்தொரு பிறப்பிலும் பேசும்!


தூர விலகிடும் போதும் - உயிர்

துளைத்த வார்த்தைகள் மோதும் 

ஈர நினைவுகள் இன்றி - எனை 

எரிக்கும் கனவே நன்றி !


பாவலர் சீராளன் 

2 comments:

Nagendra Bharathi said...

சந்தக் கவிதை சிந்தை கவர்ந்தது

சீராளன் said...

தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி