சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Sunday 3 February 2013

என்னவள் திருமணத்தில் ...!



தேன்துளி கலந்த தென்றல் 
தேவதைமேல் வீசிவர 
வான்வெளி பனிபொழிந்து 
வாசலிலே கோலமிடும் ..!


விழிகளின் ராகத்தில் 
விண்மீன்கள் கவியெழுத 
மன(ண)க்கோல மேடையிலே 
ஞாபகங்கள் பாட்டிசைக்க ..!

இதயத்தின் ஓசையிலே 
ஈரிதழ் அசையக்கண்டேன் 
உதயத்தின் தேடலிலே 
உயிர்மஞ்சம் பூப்பதென்ன..! 

பூவோடு பூவாக 
பூங்குழல்கள் அசைகிறதே 
பூப்பறித்த விரல்களிலே 
பொன்னகைகள் ஒளிர்கிறதே ..!

வைரங்கள் சுமந்துகொண்டு 
வைரமொன்று பவனிவர 
வெள்ளிக்குடங்கள் எல்லாம் 
வெட்கத்தில் கறுத்ததென்ன ..!

பட்டுடுத்தி பகல்நிலவாய் 
மெட்டியொலி வீசிவர 
கட்டும்முன் தாலியது 
கனவினிலே கனக்கிறதே..!

மௌனத்தின் மொழிபுரிய 
மனதிற்கு முத்தமிட்டு 
இறக்கைகள் முளைத்தே 
இதயம் எங்கோ பறக்கிறதே..!

இமைக்கும் நொடியினிலே 
இணைந்துவிட்ட காதலினை 
தொட்டுச்சுமக்கும் இதயத்தில் 
தொடரட்டும் சுகமான துடிப்புக்கள்  ..!

பிரியமுடன் சீராளன் 


14 comments:

Anonymous said...

''..வைரங்கள் சுமந்துகொண்டு
வைரமொன்று பவனிவர
வெள்ளிக்குடங்கள் எல்லாம்
வெட்கத்தில் கறுத்ததென்ன ..!

பட்டுடுத்தி பகல்நிலவாய்
மெட்டியொலி வீசிவர
கட்டும்முன் தாலியது
கனவினிலே கனக்கிறதே..!..''
தரமான வரிகள் அனைத்தும் கனக்கிறது.
உமக்கு நல்லது நடக்க இறையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி சகோ....என்னுயிரின் ஓசை கேட்டு அழகாய் கருத்திட்டீர் வாழ்க வளமுடன்

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

தேன்துளி தொட்டுச் செழுந்தமிழ் தீட்டியுள்ளீா்!
நான்துளி தொட்டு நலமுற்றேன்! - மான்!கிளி
வண்ண வடிவழகை வார்க்கின்ற சீராளன்
எண்ண வடிவழகை ஏத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு

சீராளன்.வீ said...

அழகிய வெண்பாவில்
அமிர்தமென வாழ்த்துகின்றீர்
அன்பிட்டு நன்றி சொல்வேன்
அருங்கவியே வாழ்கவென்று ..!

வணக்கம் கவிஞர் .கி பாரதிதாசன் அவர்களே
மிக்க நன்றி என்னுயிரின் ஓசை கேட்டமைக்கும் கருத்திட்டமைக்கும் .வாழ்கவளமுடன்

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

தங்களின் மின் அஞ்சல் முகவரியைத் தெரியப் படுத்தவும்

kambane2007@yahoo.fr

சீராளன்.வீ said...

வணக்கம் கவிஞர் .திரு.பாரதிதாசன் அவர்களே
என்னுடைய வலைப்பூவில் இட்டிருக்கிறேன் என் மின்னஞ்சல் முகவரியை .....seeralan2012@gmail.comஇவ்வாறு மிக்க நன்றி கவிஞரே

அருணா செல்வம் said...

சீராளன் கண்ட செழிப்பான நற்கனவைச்
சீராக கோர்த்துச் சிறப்பித்தீர்!- பாரெல்லாம்
தீராத காதல் கனவெல்லாம் தீட்டிடுக!
பாராட்டும் உம்கவி பார்த்து!

சீராளன்.வீ said...

அழகிய தமிழ் மகள்
அமிழ்தினும் இனியவள்
அன்புருக வாழ்த்துகின்ற
வெண்பாவில் மெய்மறந்தேன்
உன் பெருமை சொல்லாமல்
என்புருகி இறந்தாலும்
இதயமது நன்றி சொல்லும்
இறக்காமல் உமை எண்ணி..!

மிக்க நன்றி சகோ .என்னுயிரின் ஓசைகேட்டு ,இதமாய் வாழ்த்து சொன்னதற்கு ...வாழ்கவளமுடன்

இளமதி said...

மொழியோடு விளையாடிக் கவிதன்னை நீபடைக்க
எழிலோடு இருந்திட்டாளோ உன்காதலி! பூம்
பொழிலோடு வண்டதைப்போல் பூவோடு உன்னுறவு
விழியோடு தந்ததே விருந்து...

சீராளன்.வீ said...

கிளி கொஞ்சும் இதம் தந்தாள்
வாழ்வின் வழிகாட்டி திசைமறந்தாள்
மொழி அறியாக் காதலுக்கு
விழி கொண்டு புரியவைத்தாள்
ஈற்றில் இதயத்தில் துருப்பிடிக்க
ஈரமில்லா வார்த்தையிட்டு மறைந்திட்டாள்
இருந்தும் வாழ்த்துகிறேன் என்னவளை
இறந்தாலும் என்னவள் என்னவளே என்பதனால்....!

மிக்க நன்றி வளர்மதி என்னுயிரின் ஓசை கேட்டு
இதமாய் வாழ்த்தினீர்கள் நன்றி நன்றி

nayaki.krishna said...

வைரங்கள் சுமந்துகொண்டு
வைரமொன்று பவனிவர
வெள்ளிக்குடங்கள் எல்லாம்
வெட்கத்தில் கறுத்ததென்ன ..!arumai

சீராளன்.வீ said...

என்னவள் முன்னாலே
எல்லாமும் சிறுமைகளே
சொன்னவன் நானல்ல
சொர்க்கத்தின் வாசமல்லி
சௌமிஎனும் ஆரணங்கு
பெண்ணுலகின் பெரும்பேறு
பேதையவள் குரல் கேட்டால்
பெருவலிகள் இல்லையென்பேன் ..!

மிக்க நன்றி நாயகி ..முதன்முறை என் வலைப்பூ வந்து என்னுயிரின் ஓசை கேட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

சசிகலா said...

பட்டுடுத்தி பகல்நிலவாய்
மெட்டியொலி வீசிவர
கட்டும்முன் தாலியது .வரிகள் உச்சரித்து முடிக்கும் முன் நிஜம் சுட்டுப் போனது.. வாழ்த்துக்கள்.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி சசிகலா என்னுயிரின் ஓசை கேட்டு கருத்திட்டமைக்கு வாழ்த்துக்கள்