சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Tuesday, 30 December 2014

புலர்ந்திடு புத்தாண்டே !



வந்திடும் ஆண்டின் தொடக்கம்
      வலியெலாம் மறைய  மீண்டும்
தந்துநல் ஆட்சி முறைமை
      தரணியும் மகிழ வேண்டும்
எந்தையும் தாயும் வாழ்ந்த
      எழில்மிகு ஈழத் தீவில்
சிந்தனை செல்வம் அமைதி
     சிறப்புற சேர வேண்டும் !

Monday, 1 December 2014

எப்போதும் உன்னுள்ளே ..!



விறகுள்ளே எனைவைத்து விதியென்று தீமூட்ட
          விழியுண்ட காதல்வெ  டிக்கும்  - மீண்டும்
பிறந்தாலும்  உனதன்பை பிரியாத வரமொன்று
          பிரம்மனிடம் கேட்டுத்து  டிக்கும் !

தன்மானச் செருக்கென்னில் தடுத்தாலும்  உன்னினைவே
         தள்ளாத வயதுள்ளும் வாழும்  - ஈன்ற
என்தாயின் அன்பின்றி  இருந்திட்ட நாள்போல
         ஏக்கங்கள் இளநெஞ்சைச்  சூழும்  !

Thursday, 25 September 2014

கவிஞர் கி. பாரதிதாசன் பொன்விழா அந்தாதி



அன்பும் அறநெறியும் ஆயகலை அத்தனையும் 
முன்னே அறிந்திட்ட முத்தமிழே - என்றென்றும் 
வள்ளலாய் எங்கள் வரகவியாய் வாழ்.கி.பா 
அள்ளித் தரும்பாவில் ஆடு!

ஆடும் மயிலாகப் பாடும் குயிலாகச்
சூடும் கவிகள் சுவையூற்றே! -  நாடுவக்கும் 
பொன்விழா நாள்காணப் பூஞ்சோலை காத்திருக்கும்! 
கன்னித் தமிழ்பேசும் காற்று!

Monday, 25 August 2014

மீண்டுமோர் கனவு !



அந்திபகல் சிந்தும்விழி சொந்தமொன்று நாடவிதி
                மந்தநிலை போக்கி விடுமோ -இல்லை
முந்தியிடி தந்தவலி சிந்தையிலே ஆடசதி  
               வெந்தணலில் வீழ்த்தி சுடுமோ !

பட்டகுறை விட்டகல கட்டிலிடை சிட்டுவர
               முட்டியொளி  மூச்சு தருமோ  - காதல்  
இட்டசிறை கட்டகல தொட்டிலிடை  மொட்டுவர
               பட்டுமொழி பேச்சு வருமோ!

Wednesday, 13 August 2014

வாழ்வில் கண்ட பாடங்கள் ..!


வாழ்வில் கண்ட பாடங்கள் 
வாட்டும் நினைவின் கீதங்கள் 
கேள்விகள் உள்ளே  நம்பிக்கை 
கேட்டு வாழ்ந்திட  துயரமில்லை !

                                  ( வாழ்வில் கண்ட பாடங்கள் .)

Wednesday, 2 July 2014

கவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுக்குப் பதிற்றந்தாதி




நாவடைத்து நிற்கின்றேன் நற்றமிழ் வேந்தராம்
பாவலரின்  பட்டம்  பரிசேற்று  - ஆவலுடன்
பூவெடுத்து ஆன்மாவால்  கோர்க்கின்றேன்! பண்புடைய
பாவேந்தா் பாதம் பணிந்து !

பணிந்துநான் ஏற்கின்றேன் பாவலரின் பட்டம்!
அணிந்துநான் ஆடுகின்றேன் ஐயா - துணிந்துநான்
இவ்வுலகில் தூயதமிழ் கற்க! துணைநிற்பாய்
எவ்விடத்தும் என்னுள் இருந்து !

Wednesday, 25 June 2014

கேட்டாளே சில கேள்வி !




ஊர்சுற்றும் இந்த பத்து வினாக்களுக்கும் விடை எழுத வலைப்பூவின் உறவுகள் இளமதி, இனியா இருவரும் என்னையும்  அழைத்தார்கள் அந்த அன்புக்கு நன்றி சொல்லி இதோ எழுதி இருக்கிறேன் தங்கள் ஆசீர்வாதங்களுடன் ....நன்றி உறவுகளா..!


கொளுத்திப் போட்டோர்  கொலுவிருக்க 
இழுத்துப் போட்டு எழுதுகிறேன்
என்னையும் எனக்குள் உள்ளதையும் ..! 

வந்து பாருங்கள் இளமதி & இனியா யார்கிட்ட !
ஹி ஹி ஹி இது முயற்சி தவறெனில் மன்னியுங்கள் 
மகராசிகளா  !

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?

நடவா இடரேகி நாவுளறும் நாள்முன்
அடக்கம் அடைதல் அழகு !

நான் அவனில்லை ! க க மு ......எப்புடி