சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Friday, 2 September 2016

காதல் சிதைவுகள் !


காற்றுக் கூடக் காதல் தூதில்
கனத்துப் போகக் கண்டேன்  - அதை
ஆற்றுப் படுத்த அலையும் போதில்
அங்கச் சிதைவுகள் கொண்டேன் !

காதல் இல்லா உலகம் என்றே
காட்டக் கூடுமோ சொல்லு  - அதை
வேதம் என்றே விரும்பிக் கொண்டால்
விரையும் உன்மேல் கல்லு !

Friday, 19 August 2016

காலமே கவிதை நண்பா !





வானமே எல்லை கொண்ட  
       வாலிபக் காதல் வந்தால்  
மானமே போயும் நெஞ்சில் 
       மறந்திட முடியார் வாழ்வில்  
கானமே தனிமை போக்கும் 
       காய்ந்துயிர் வேகும்  தன்னுள்    
ஊனமே அடைந்தும் எண்ணார்
       உலகிது மாயம் என்றே !

Friday, 6 May 2016

எனையறியாமல் மனம்பறித்தாய் ....!



சிந்தையி லூறிய செந்தமி ழே - என்னைச்
சீண்டிடு முன்விழிப் பார்வைக ளே
எந்தப்பி றப்பதன் எச்சங்க ளோ - இன்னும்
என்னுயிர் ஆளுமுன் நாணங்க ளே !

Saturday, 6 February 2016

கவிதை மொழி !


பாடும் கானம் பௌர்ணமி நிலவு 
பைந்தமிழ் போற்றும்  காவியம் - நீ  
ஓடும் நிலவின் ஒளியில் வரைந்த 
ஒப்பிலாத் தாரகை ஓவியம்

கனவோ நினைவோ கம்பன் கவியோ 
காரிகை  உன்விழி  அறியேன் -தினம் 
எனையே இழந்து  இதயம் எரித்தும் 
என்னவள் உன்னைப் பிரியேன் !

Wednesday, 27 January 2016

குருவருள் பதிற்றந்தாதி !



ஓடித் திரிந்த உணர்வுகளை ஒன்றாக்கிப்
பாடிக் களிக்கப் பகலிரவாய்ப் - பாடங்கள்
நாடிக் கொடுத்திட்ட நற்குருவுக் கோர்புகழைத் 
தேடிக் கொடுப்பேன் தினம்!


1. கற்றுப் பயனடையக் காத்திருக்கும் எல்லோர்க்கும்
    பற்றுடனே பாடம் பயில்விக்கும் - நற்கவிஞர்!
    என்னுள் கவியும் இருப்பதைக் கண்டுணர்ந்து 
    நன்றே'கற் பித்தார் நயந்து!

Wednesday, 16 December 2015

உயிரோவியம்!



ஆருமறி யாமலுயிர் ஆடும் வலியூட்டும்
சாருமலர்ப்  பூங்குழலி  சாய்ந்துவிடத்  - தீருமிதன்
பாரமொரு நாளில் பறந்திருக்கும் ! பாவையவள்
நேரமொரு நீள்கனவில் நெஞ்சு !

இதழ்முகிழும் ரோசாவோ! இன்றமிழோ! மின்னும்
நுதலழகும் நூற்பாவோ? கன்னம்   - புதுக்கவிதைப்
பூவனமோ? பொய்கைமலர்ப் பூந்தாதோ? என்னவளின் 
ஓவியமும் கொள்ளும் உயிர் !

Wednesday, 9 December 2015

உன்னால் முடியாதெனில் ...!



நாரும் மணத்திடப் பூக்கள் சிரித்திடும்!
          நன்மண் கரங்கொடுக்கும்!
நாளும் மனிதரைச் சூழும் நன்னெறி
         நன்றே வரங்கொடுக்கும்!
சேரும் கனவினைச்  சிந்தை நிறைந்துளம்
         செய்தல் நலங்கொடுக்கும்!
சேவை சிறந்திடச் சீர்கள் நிறைந்திட
        செய்க புகழ்தொடுக்கும்!
ஊரும் எறும்பென ஒன்றாய் நடந்திட
        உயர்வு நிலையொளிக்கும்!
உள்ளம் துளைத்திடும் எண்ணம்  பகைஅழி
        ஒண்மை படையெடுக்கும்!
தீராக்  குறைகளும் திண்மை மனங்கொளத்
        தீயில் எரிந்திருக்கும்!
தேகச் சுமைகளைத் தேடி அழித்தெறி
        செல்வம் சொரிந்திருக்கும் !