சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday, 27 January 2016

குருவருள் பதிற்றந்தாதி !



ஓடித் திரிந்த உணர்வுகளை ஒன்றாக்கிப்
பாடிக் களிக்கப் பகலிரவாய்ப் - பாடங்கள்
நாடிக் கொடுத்திட்ட நற்குருவுக் கோர்புகழைத் 
தேடிக் கொடுப்பேன் தினம்!


1. கற்றுப் பயனடையக் காத்திருக்கும் எல்லோர்க்கும்
    பற்றுடனே பாடம் பயில்விக்கும் - நற்கவிஞர்!
    என்னுள் கவியும் இருப்பதைக் கண்டுணர்ந்து 
    நன்றே'கற் பித்தார் நயந்து!

Wednesday, 16 December 2015

உயிரோவியம்!



ஆருமறி யாமலுயிர் ஆடும் வலியூட்டும்
சாருமலர்ப்  பூங்குழலி  சாய்ந்துவிடத்  - தீருமிதன்
பாரமொரு நாளில் பறந்திருக்கும் ! பாவையவள்
நேரமொரு நீள்கனவில் நெஞ்சு !

இதழ்முகிழும் ரோசாவோ! இன்றமிழோ! மின்னும்
நுதலழகும் நூற்பாவோ? கன்னம்   - புதுக்கவிதைப்
பூவனமோ? பொய்கைமலர்ப் பூந்தாதோ? என்னவளின் 
ஓவியமும் கொள்ளும் உயிர் !

Wednesday, 9 December 2015

உன்னால் முடியாதெனில் ...!



நாரும் மணத்திடப் பூக்கள் சிரித்திடும்!
          நன்மண் கரங்கொடுக்கும்!
நாளும் மனிதரைச் சூழும் நன்னெறி
         நன்றே வரங்கொடுக்கும்!
சேரும் கனவினைச்  சிந்தை நிறைந்துளம்
         செய்தல் நலங்கொடுக்கும்!
சேவை சிறந்திடச் சீர்கள் நிறைந்திட
        செய்க புகழ்தொடுக்கும்!
ஊரும் எறும்பென ஒன்றாய் நடந்திட
        உயர்வு நிலையொளிக்கும்!
உள்ளம் துளைத்திடும் எண்ணம்  பகைஅழி
        ஒண்மை படையெடுக்கும்!
தீராக்  குறைகளும் திண்மை மனங்கொளத்
        தீயில் எரிந்திருக்கும்!
தேகச் சுமைகளைத் தேடி அழித்தெறி
        செல்வம் சொரிந்திருக்கும் !

Wednesday, 2 December 2015

ஓரறிவின்றேல் ஆறறிவில்லை !




ஓரறிவைக் கொண்டிருந்தும் ஒவ்வோர் ஆண்டும்
           உதிர்க்கின்ற இலைகொண்டே உரத்தை ஊன்றும்!
ஊரறியாச் சுழியோடி உறிஞ்சும் நீரை
           உலகுக்கே மழையாக்கும் ! வீழும் போதும்
பாரறியப் பசிபோக்கும் உணவைச் செய்யும்
           பாமரனின் வயிற்றுக்காய் நெருப்பை உண்ணும்
கூரரிவாள் கொண்டதனை வெட்டிச் சாய்த்தும்
          குலங்காத்துக் குடிவாழக் குடிசை ஆகும்!

Tuesday, 3 November 2015

கவிதையவள் கவிஞனிவன் !





வண்டமிழ் வதனம் காட்ட
       வகைவகை யாகப் பாக்கள்
கொண்டலைப் போலே நெஞ்சில்
      கொட்டிடும் அவளின் ஆற்றல்
அண்டரே மயங்கிப் போகும்
      அழகொளிர் அங்கம் தன்னில்
சுண்டிடும் விழிகள் கண்டேன்
      சுயநினை விழந்து போனேன்!

Friday, 18 September 2015

பிரியங்கள் தொடர்கதை ..!



கொஞ்சிடும் கனவுகள் குறுக்கிடும் பொழுதும்
கோபத்தில் மௌனங்கள் இறுக்கிடும் பொழுதும்
நெஞ்சினை ஏக்கங்கள் நெருக்கிடும் பொழுதும்
நீர்த்துளி கன்னத்தில் நினைவுகள் எழுதும் !

ஒவ்வொரு  இறப்பிலும் உன்னதம் படரும்
ஒவ்வொரு பிறப்பிலும்  உயிரினில் தொடரும்
ஒவ்வொரு  நினைப்பிலும்  உயிரணு சுடரும்
அவ்வொரு பொழுதிலும் அகவிழி அதிரும் !