சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

புதன், 27 ஜூன், 2012

உயிர் தீபம்...!சிவந்த விழி தூங்கையிலே 
சிதைந்து போன சொர்ப்பனத்தில்
வந்து போன நினைவுகளை
வழிதோறும் தேடுகின்றேன்............!

கண்ணோரம் கசிந்து நின்ற
கார்கால மேகங்கள்
செம்மழை கொட்டியதே
செவ்விதழே நீ எங்கே..?

அல்லிப்பூ அழுதாலும்
அரவணைக்கும் தடாகத்தில்
செவ்வந்தி தவறி விழ
சேற்றோடு ஏன் புதைத்தாய்..!

உயிர்வியர்க்கும் நொடிப்பொழுதில்
உதிரமிட்டு உனைக்காத்தேன்
உள்ளுணர்வை தீயாக்கி
ஊமை என்னை எரித்துவிட்டாய்..!

வந்து போகும் தேய் பிறைக்கு
வாய் பேசும் பௌர்ணமியே
வாழ்வெனக்கு தேய்மானம்
வகை கூற மாட்டாயோ....!

விதி என்னும் ஈரெழுத்தில் -நீ
விடை சொல்லிப்போனாலும்
விம்மியழும் என் நெஞ்சில்
விழிநீரை ஏன் தெளித்தாய்...?

தூக்கணாங் குருவி போல
தூங்காமல் கூடுகட்டி
தெம்மாங்கு நீ கேட்க
தென்றலுக்கும் யன்னல் வைத்து
சிலையாக செதுக்கி வைத்த
சிற்பத்தை உடைத்து விட்டாய்...!

இல்வாழ்வில் செல்வம்
இனிதென்று எனை மறந்து
ஈரடுக்கு மாளிகையில்
இதயமின்றி வாழ்கின்றாய்...!


ஏழ்மை எனை வதைத்தாலும்
எளிமை எனை அணைத்தாலும்
ஏழ் பிறப்பும் நீ வாழ
ஏற்றி நிற்பேன் உயிர் தீபம்...!
நீ..........
வாழ்ந்து விடு வையகத்தில்-உன்
வலிகளை நான் சுமக்கின்றேன் ... !

...அன்புடன் சீராளன்...

கருத்துகள் இல்லை: